Published:Updated:

`BS-4 வாகனங்களை இப்போது பதிவு செய்ய முடியுமா?’ - உச்ச நீதிமன்றம் வைத்த செக்

BS-4 / BS-6
BS-4 / BS-6

BS-4 வாகனங்களை அவசர அவசரமாக புக் செய்யும்போது, கொஞ்சம் யோசிங்க மக்கா!

புது கார்/பைக் பயங்கர டிஸ்கவுன்ட்டில் வாங்குவதற்கு முன்னால்... ``என்ன நடந்துச்சு?” எனக் கேட்பவர்களுக்கு ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்:

இந்தியாவில் 2020, ஏப்ரல் 1 முதல் BS-6 வாகன மாசு விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனால் இதற்கு முன் BS-4 விதிமுறைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட வாகனங்களைப் பதிவு செய்ய மார்ச் 31 வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது. கதையில் திடீர் ட்விஸ்ட்டாக கொரோனா வைரஸ் வந்ததால், 24 மார்ச் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கினால் தங்களிடம் உள்ள BS - 4 வாகனங்களை விற்க முடியாமல் திணறின கார்/பைக் நிறுவனங்கள். டீலர்களுக்குத்தான் இதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. முடிந்தவரை BS-4 வாகனங்களுக்குக் கணிசமான தள்ளுபடியெல்லாம் கொடுத்தார்கள் டீலர்கள்.

Cars
Cars

நஷ்டத்தைச் சந்திக்க முடியாமல், கார்/ஆட்டோமொபைல் டீலர்களின் கூட்டமைப்பு (FADA) உச்ச நீதிமன்றத்தில் கால அவகாசம் வேண்டும் எனக் கேட்டு அவசரமாக முறையீடு செய்தது. இதைத் தொடர்ந்து ஊரடங்கைத் தளர்த்திய பின், 10 நாள் வரை தங்களிடம் உள்ள 10% ஸ்டாக் உள்ள மீத வாகனங்களை விற்றுக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் மார்ச் 27– ம் தேதி ஆணையிட்டது. ஆனால், 10 சதவிகிதத்தைத் தாண்டி வாகனங்களை விற்றார்கள் டீலர்கள். இதுவும் போதாது; 15 நாள் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென FADA கூட்டமைப்பு மேல் முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனு, ஜூலை 8-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அனுமதிக்கப்பட்ட 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக, கிட்டத்தட்ட 1.5 லட்சம் வரை வாகனங்கள் விற்றது ஏன் எனக் கேள்வி எழுப்பியது நீதிமன்றம். அதிகமாக விற்ற 1.5 லட்ச வாகனங்களில், வாஹன் (VAAHAN) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட 17,000 வாகனங்கள் மட்டுமே சட்டபூர்வமாக எடுத்துக் கொள்ளப்படும் என்ற எச்சரிக்கையுடன் வழக்கு விசாரணையை ஜூலை 31- ம் தேதிக்குத் தள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கு நீதிபதி அருண் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, FADA அமைப்பைக் கடுமையாக விமர்சித்து, மறு அறிவிப்பு வரும் வரை BS - 4 வாகனங்களைப் பதிவு செய்யக் கூடாது என உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 13-ம் தேதிக்குத் தள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம்.

மீதம் உள்ள 1.5 லட்ச வாகனங்களுக்கு ஆகஸ்ட் 13-ம் தேதி க்ளைமாக்ஸ் தெரிந்துவிடும். எனவே, செம டிஸ்கவுன்ட் கிடைக்குதே என்று அவசரப்பட்டு, BS-4 வாகனங்களை அவசர அவசரமாக புக் செய்யும்போது, கொஞ்சம் யோசிங்க மக்கா! வாகனங்கள் வாங்கும்போது, BS-6 நார்ம்ஸுக்கு உட்பட்டதுதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு