பழைய வாகனத்தில் BS-6 பெட்ரோல்... என்ன பிரச்னை வரும், எதில் கவனம் தேவை?#DoubtOfCommonMan

BS-6 வாகனங்கள் தற்போது விற்பனைக்கு வந்துவிட்டன. ஆனால், இன்னும் BS-4 எரிபொருள் மட்டுமே கிடைக்கிறது. BS-6 எரிபொருள் வந்துவிட்டாலும்கூட பல பழைய BS-2, BS-3 மற்றும் BS-4 வாகனங்களில் இந்த எரிபொருள் எப்படி வேலை செய்யும்?
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், "ஏப்ரல் மாதம் முதல் BS-6 வாகனங்கள் கட்டாயம் என்கிறார்கள். இதே காலகட்டத்தில் BS-6 பெட்ரோல், டீசலும் வரவிருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த எரிபொருளை பழைய வாகனங்களுக்குப் பயன்படுத்த முடியுமா? அதனால் இன்ஜின் பாதிக்குமா?" என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் சாதிக் என்ற வாசகர்.
``பெட்ரோல் விலை ஏறிப்போச்சேன்னு மண்ணெண்ணெய் ஊத்துனேன், மண்ணெண்ணெய் விலையும் ஏறிப்போச்சுனு க்ரூட் ஆயில் ஊத்துனேன்... இப்போ இது எதுல ஓடுதுன்னு இதுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது" என்று கரகாட்டக்காரன் கவுண்டமணிபோல புலம்பும் நாள் வெகு தொலைவில் இல்லை. காரணம், ஏப்ரல் மாதம் முதல் கட்டாயமாகும் பிஎஸ்-6 வாகனங்கள் மற்றும் எரிபொருள்.
மார்ச் 30 வரை மட்டுமே பிஎஸ்-4 வாகனங்களை விற்க முடியும் என்பதால் தற்போது பல நிறுவனங்கள் பழைய வாகனங்களைக் கழித்துக்கட்டிவிட்டு பிஎஸ்-6 வாகனங்களை விற்கத் தொடங்கிவிட்டன. பிஎஸ்-6 எரிபொருள் இன்னும் டெல்லியைத் தவிர, இந்தியாவின் மற்ற பகுதிகளில் விற்பனைக்கு வராமல் இருப்பதால், இப்போதைக்கு BS-6 வாகனம் வைத்திருப்பவர்கள்கூட BS-4 பெட்ரோல்/டீசலையே பயன்படுத்துகிறார்கள். இப்படிப் பயன்படுத்துவதால் BS-6 வாகனங்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்படுமா?

இன்னும் சில மாதங்களில் BS-6 எரிபொருள் எல்லா இடங்களிலும் கிடைக்கும் என்று அழுத்தமாகச் சொல்கிறது மத்திய அரசு. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னையில், பிப்ரவரி மாதம் முதல் கிடைக்கும் என்றும் மற்ற மாவட்டங்களில் ஏப்ரல் மாதத்துக்குள் முழுவதுமாக இவை வந்துவிடும் என்றும் BS-6 வாகனம் விற்பனை செய்பவர்கள் சொல்கிறார்கள். ஏப்ரல் மாதம் முதல் மொத்தமாக BS-6 பெட்ரோல்/டீசல் வந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். அப்போது, நம் பழைய வாகனங்களுக்கு இந்தப் புது எரிபொருளை நிரப்புவது பாதுகாப்பானதா? இந்த இரண்டு கேள்விகளுக்கான பதிலையும் இங்கே பார்ப்போம்.

BS-6 வாகனத்தில் BS-4 எரிபொருள்:
தற்போதுவரை பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் BS-6 பெட்ரோல் இன்ஜினை மட்டுமே விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளார்கள். டொயோட்டா, கியா, பென்ஸ், ஜீப் போன்ற நிறுவனங்களில் மட்டுமே BS-6 டீசல் இன்ஜின் இருக்கிறது. ஹூண்டாய், மஹிந்திராவில் பெட்ரோல் இன்ஜின் BS-6 ரகம் என்றால் டீசல் இன்ஜின் இன்னும் BS-4.
BS-6 டீசல் இன்ஜினில் BS-4 ரக டீசலைப் பயன்படுத்தக் கூடாது. காரணம், BS-4 டீசலில் சல்ஃபர் எனும் வேதிப்பொருள் அதிகமாக இருக்கும். BS-6 டீசல் இன்ஜினில் எக்ஸாஸ்ட் வாயுவை சுத்தப்படுத்த Diesel Particulate filters (DPF) அல்லது Lean Nox Trap (LNT) வகை ஃபில்டர்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்தப் பாகங்கள் ரொம்பவே காஸ்ட்லியானவை. இவற்றை அவ்வளவு சுலபமாக சர்வீஸ் செய்யவோ மாற்றவோ முடியாது. BS-4 டீசலின் கூடுதல் சல்ஃபர் இந்த ஃபில்டர்களைப் பாதிக்கும். ஒரு முறை இந்த ஃபில்டர்கள் சரியாக வேலைசெய்யவில்லை என்றால் BS-6 மாசு கட்டுப்பாடு அளவுகளைவிட எக்ஸாஸ்ட் அதிக காற்று மாசை உருவாக்கும்.

ஒரு சில தயாரிப்பாளர்கள் இந்த விஷயத்தை உணர்ந்து அதற்கேற்ப தங்களது வாகனங்கள் BS-4 டீசலிலும் பிரச்னை தராதபடியே வடிவமைத்துள்ளார்கள். நீங்கள் வாகனம் வாங்கும்போதே ஷோரூம்களில் BS-4 டீசல் போடலாமா வேண்டாமா என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்வது அவசியம்.
பெட்ரோல் இன்ஜினை பொறுத்தவரை இந்தப் பிரச்னை கிடையாது. BS-4 பெட்ரோலில் BS-6 இன்ஜின் இயங்கும்போது எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால், இன்ஜின் ஆயிலில் கவனம் தேவை. BS-4 மற்றும் BS-6 இரண்டுக்கும் வெவ்வேறு இன்ஜின் ஆயில் ஸ்டாண்டர்ட் உண்டு. இதனால், BS-6 வாகனத்தில் BS-6 ஆயிலையே பயன்படுத்த வேண்டும் இல்லையென்றால் பிரச்னைதான்.

BS-4 வாகனத்தில் BS-6 எரிபொருள்:
ஏப்ரல் 1 முதல் புதிய BS-4 வாகனங்களின் விற்பனை மட்டுமே தடைசெய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருக்கும் வாகனங்களை பயன்படுத்துவதில் எந்தச் சிக்கலும் இல்லை. டெல்லியில் மட்டுமே இப்போதைக்கு 10 ஆண்டு பழைய டீசல் வாகனங்களும் 15 ஆண்டுகள் பழைய பெட்ரோல் வாகனங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் மற்ற பகுதிகளில் ஸ்கிரேப்பேஜ் பாலிசி வரும் வரை BS-2, BS-3 மற்றும் BS-4 வாகனங்கள் சாலையில் ஓடிக்கொண்டேதான் இருக்கும். இந்த நிலையை மனதில் வைத்து தற்போது மத்திய அரசு நாடு முழுவதும் BS-4 மற்றும் BS-6 இரண்டு எரிபொருளும் ஒருசேர கிடைப்பதற்கான முயற்சிகளை எடுத்துவருகிறது.

உங்கள் பழைய வாகனங்களுக்கு BS-4 பெட்ரோல்/ டீசல் கிடைக்கவில்லை என்றால் கவலைப்பட தேவையில்லை. BS-4 வாகனத்தில் BS-6 எரிபொருளைப் பயன்படுத்தலாம். இதில் இருக்கும் குறைவான சல்ஃபர் உங்களுடைய வாகனத்திலிருந்து வெளிப்படும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவே செய்யும். ஆனால், குறைவான மாசு தருகிறது என்பதற்காக BS-6 பெட்ரோல்/டீசல் மட்டுமே போடலாமே என்ற எண்ணம் கூடாது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

முதல் காரணம், BS-4 எரிபொருளில் இருக்கும் கூடுதல் சல்ஃபர் BS-4 இன்ஜினில், இன்ஜின் ஆயில் செய்ய வேண்டிய லூப்ரிகேஷன் வேலையையும் சேர்த்தே செய்கிறது. குறைவான சல்ஃபர் கொண்ட BS-6 எரிபொருளைத் தொடர்ந்து பயன்படுத்தினால் ஃபியூல் இன்ஜக்டர், வாலவ் போன்ற பாகங்களில் கூடுதல் தேய்மானம் ஏற்பட்டு, இவற்றை அவ்வப்போது மாற்ற வேண்டிய நிலை உருவாகும். இரண்டாவது, BS-6 எரிபொருள் தற்போது கிடைக்கும் சாதாரண பெட்ரோல்/டீசலைவிட விலை அதிகம்.