BYD நிறுவனம் Pure T3 MPV மற்றும் Pure T3 மினிவேன் என இரண்டு புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மின்சாரப் பேருந்துகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்துவரும் இந்நிறுவனம், இந்தியச் சந்தையை மனதில்வைத்து இந்தியாவிலேயே உருவாக்கியுள்ள கார்கள்தாம் இவை.

இந்தியாவில் அறிமுகமாகியிருக்கும் முதல் எலெக்ட்ரிக் MPV இதுதான். இரண்டு கார்களுக்கு வெறும் பாடி ஸ்டைல் மட்டும்தான் வித்தியாசம். மினிவேன் மாடல் கமர்ஷியல் பயன்பாட்டுக்காகவும், MPV மாடல் ரெனோ லாஜி, மஹிந்திரா மராத்ஸோ, மாருதி எர்டிகா போல பாசஞ்சர் காராகவும் பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாடல்களிலும் கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், ப்ளூடூத் வசதியுடன்கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார் வசதிகள் உள்ளன. இன்ஜின் மற்றும் பெட்ரோல் டேங்க் இல்லை என்பதால், வேனின் உள்ளே இடவசதி அதிகம்.

இந்தியாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகளான ABS, EBD, எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஆக்ஸிலரேட்டர் மற்றும் பிரேக் ஒரே நேரத்தில் செயல்படுவதைத் தடுக்கும் பிரேக் ஓவர்ரைடு சிஸ்டம் ஆகிய வசதிகள் உண்டு. மின்சார வாகனங்களின் அத்தியாவசிய வசதியான ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் இதில் உண்டு. இந்த கார்களில் மேனுவல் கியர்பாக்ஸ் கிடையாது, ஆட்டோமேட்டிக் மட்டுமே. மின்சாரத்தை சேமித்து ரேஞ்சைக் கூட்ட Controller Area Network (CAN) எனும் தொழில்நுட்பத்தைப் பொருத்தியுள்ளார்கள். வீட்டில் தேவையில்லாமல் ஓடும் ஃபேன், லைட்டுகளை நிறுத்தி மின்சாரத்தை மிச்சம்பிடிப்பதுபோல இந்தத் தொழில்நுட்பம், காரில் எந்தெந்த விஷயங்கள் எந்த நேரத்தில் தேவை என்பதை உணர்ந்து அவற்றைத் தானாகவே ஆன் / ஆஃப் செய்து பேட்டரியை மிச்சப்படுத்தும்.
இந்த இரண்டு மாடல்களையும் ஒரு முறை முழுமையாக சார்ஜ்செய்ய ஒன்றரை மணிநேரம் தேவை. முழு சார்ஜில் 300 கி.மீ வரை பயணிக்கலாம். இந்த கார்களில் BYD நிறுவனத்தின் பிரேத்யேக பேட்டரி தொழில்நுட்பமும் உண்டு. அதாவது, இவர்கள் LiFePO4 எனும் பேட்டரியைத் தயாரித்து பயன்படுத்துகிறார்கள். இந்த பேட்டரிகள், டெஸ்லாவில் வாகனங்களில் வரும் NMC பேட்டரிகளைவிட எடை குறைவானவை, அதிக வெப்பத்தைத் தாங்கக்கூடியவை மற்றும் அதிக நாள்கள் உழைக்கக்கூடியவை என உலகின் முன்னணி மெட்டீரியல் இன்ஜினியர்களில் ஒருவரான Dan Steingart தனது ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளார். தற்போது, டீலர்களை உருவாக்குவதில் முனைப்போடு இருக்கிறது BYD. இந்த கார்கள் இன்னும் ஒரு வருடத்தில் ஷோரூம்களுக்கு வந்துவிடும்.

கடந்த 11 ஆண்டுகளாக BYD நிறுவனம் மின்சார வாகன தயாரிப்பில் உள்ளது. 2007-ம் ஆண்டு ரூ.1,080 கோடி முதலீட்டில் சென்னை மற்றும் டெல்லியில் இரண்டு தொழிற்சாலைகளைத் திறந்து, தெற்கு ஆசிய நாடுகளுக்கு மின்சாரப் பேருந்துகள் உட்பட பல எலெக்ட்ரிக் மற்றும் பேட்டரி பாகங்களை ஏற்றுமதி செய்துவருகிறது. பிரபல அமெரிக்க எலெக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லாவுக்கு கடும்போட்டியாக நவீன தொழில்நுட்பங்களோடு கார்களை உருவாக்கிவரும் இந்நிறுவனம், டெஸ்லாவை விட விற்பனையிலும் சரி, தொழில்நுட்பங்களிலும் சரி மிகப்பெரிய நிறுவனம். உலகில் முதன் முதலில் ஒரே ஆண்டில் 1,00,000 மின்சார கார்களை விற்பனைசெய்த நிறுவனம் இதுவே.