Published:Updated:

ஏபிஎஸ் பிரேக் மூலம்கூட கார் தீப்பிடிக்குமா... ஹூண்டாய் ஏன் அப்படி சொன்னது?!

கார் விபத்து
கார் விபத்து ( Representative Image Only )

ஏபிஎஸ் விஷயத்தில் அலெர்ட்டாக இருக்கணுமா?

சம்பவம் 1: மார்ச் 13, 2019 – கிழக்கு டெல்லியில் அக்ஷர்தம் ஃப்ளைஓவரில் போய்க்கொண்டிருந்த போதே கார் தீப்பற்றி எரிந்ததால், 34 வயதுப் பெண் – அவரது இரண்டு பெண்கள் என மூவர் இறந்தனர்.
சம்பவம் 2: மே 21, 2020 – அதே தலைநகர் டெல்லியில் சிஎன்ஜி பொருத்திய வேன் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில், டிரைவர் பலியானார்.
சம்பவம் 3: சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, வெளியே வர முடியாமல் காருக்குள்ளேயே ஏசியை ஆன் செய்து தூங்கிய நபர், தீ விபத்தில் இறந்து போனார்.
Car Fire
Car Fire
Representative Image Only

இப்படி கார் எரிதல் சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். கார் தீப்பிடித்து எரிவதற்கு முக்கியக் காரணிகள் – பெட்ரோல் லீக்கேஜ், சிஎன்ஜி, எல்பிஜி, ஏசி, எலெக்ட்ரானிக் சமாசாரங்கள், ஒயரிங் வேலைப்பாடுகள் என்று ஏகப்பட்ட விஷயங்கள் உண்டு. ஆனால், கார் தீப்பிடிப்பதற்கு ஏபிஎஸ் பிரேக்ஸும் ஒரு காரணம் என்று ஒரு அதிர்ச்சித்தகவல் கிளம்பிக் கொண்டிருக்கிறது. இப்படிச் சொல்வது, வேறு யாருமல்ல... கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய். இதை ஆதாரத்தோடு விளக்கி, இதற்குப் பயந்தே அமெரிக்காவில் கிட்டத்தட்ட 2,00,000 கார்களை ரீகால் செய்துள்ளது ஹூண்டாய். இதனுடன் சேர்ந்து கியா மோட்டார்ஸும் தனது காரை ரீ-கால் செய்துள்ளது. ரீ–கால் என்றால், குறிப்பிட்ட ஒரு மேனுஃபேக்ச்சரிங் பிரச்னையைச் சுட்டிக்காட்டி, தனது கார்களைத் திரும்பவும் சர்வீஸ் செய்ய அழைப்பது. இதற்குக் கட்டணம் தேவையில்லை.

அமெரிக்காவில் ஹூண்டாய் ரீ–கால் செய்ய அழைத்தது 2019 – 2021 ஆண்டுகளில் தயாரான டூஸான் கார்களை. கியா ரீ–கால் செய்தது தனது ஸ்டிங்கர் கார்களை. இதன் தயாரிப்பு ஆண்டும் 2019–ல் இருந்து லேட்டஸ்ட் மாடல் வரை.

என்னதான் ஆச்சு... ஏன் இந்தப் பயம்?

போன ஆண்டு 6 கியா ஸ்டிங்கர் கார்கள், இன்ஜின் ஐடிலிங்கில் இல்லாமல் ஷட் டவுன் ஆகியிருந்த போதே தீப்பிடித்த சம்பவம்தான் இந்த ரீ–காலுக்குக் காரணம். ஸ்டிங்கர் எப்படி ஒரே மாதிரி தீப்பிடித்தது என்பதை ஆராய்ந்தபோது, அதிலுள்ள ஏபிஎஸ் மாட்யூலுக்குப் போகும் இசிஎம்–ல் ஏற்பட்ட ஷார்ட் ஷர்க்யூட்தான் காரணம் என்பது தெரிய வந்ததாம். இப்படி 2019–ல் இருந்து தயாரான 9,000 கார்களில் இந்தப் பிரச்னை இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

Car Fire
Car Fire
Representative Image Only

ஏற்கனவே கியாவின் ஆப்டிமா எனும் செடான் கார் (MY 2013-2015), சொரென்ட்டோ எனும் க்ராஸ்ஓவர் (MY 2014–2015), ஹூண்டாயின் சான்ட்டா ஃபீ (2013–2015) போன்ற கார்கள் ரீ–கால் செய்யப்பட்டதற்கு இணையாக இந்த ரீ–கால் சம்பவம் நடந்துள்ளது. ஆப்டிமா, சொரென்ட்டோ, சான்ட்டா ஃபீ கார்களில் ஏற்பட்ட பிரச்னையும் தீப்பிடித்தல் சம்பந்தமானதுதான். ஆனால், அது பிரேக் ஆயில், ஹைட்ராலிக் எலெக்ட்ரானிக் கன்டரோலுக்குள் லீக் ஆகி, அதனால் ஏற்படும் தீ விபத்து என்பது. அதுகூட ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஆனால், ஏபிஎஸ் சிஸ்டத்தால் தீ விபத்து ஏற்படும் என்பதை ஹூண்டாயாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. இரண்டு சம்பவங்களுமே பிரேக்ஸால் ஏற்படுகின்றன என்பதும் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.

ரூ.2 லட்சம் வரை பட்ஜெட்: யூஸ்டு கார், புதிய கார்... பழகுநருக்கு ஏற்றது ஏது?

ஹூண்டாயின் தலைமை அதிகாரி மைக்கேல் ஸ்டூவர்ட், ‘‘இரண்டு ரீ–கால்களுமே பிரேக் சம்பந்தமானதுதான். ஆனால், இரண்டையும் குழப்பிக் கொள்ளாதீர்கள். இரண்டும் வெவ்வேறு!’’ என்று சொன்னாலும், ஏபிஎஸ் சிஸ்டம் கொண்ட கார் வைத்திருப்பவர்கள், இதனால் பயந்து கிடக்கிறார்களாம். பயத்துக்குக் காரணம், முந்தைய சம்பவம் கார் ரன்னிங்கில் இருந்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால், பிந்தைய நிகழ்வு – கார் ரன்னிங்கில் இருந்தாலும் சரி; ஷட் டவுன் ஆகியிருந்தாலும் சரி– ஆபத்து என்று ஹூண்டாயே சொல்லியிருப்பதுதான் பயத்துக்குக் காரணம். ‘‘ஏபிஎஸ் மாட்யூல் சர்க்யூட் போர்டில் உள்ள பிரச்னை சரி செய்யப்படும்வரை, உங்கள் கார்களை ஓட்ட வேண்டாம். பார்க்கிங்கிலேயே இருக்கட்டும்!’’ என்றும் வாடிக்கையாளர்களிடம் சொல்லியிருப்பது இன்னும் பீதியைக் கிளப்பி விட்டிருக்கிறதாம்.

ஏபிஎஸ் வார்னிங் மால்ஃபங்ஷன் லைட், காரின் டேஷ்போர்டில் தெரிந்தால், கார்களை ஸ்டார்ட் கூட செய்ய வேண்டாம். உடனடியாக 12V பேட்டரியில் உள்ள டெர்மினல்களை டிஸ்கனெக்ட் செய்து, டீலருக்குத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Car Fire
Car Fire
Representative Image Only
நம் ஊரில் இதுபோன்ற பிரச்னைகள் உண்டா? அப்படியென்றால், ஏபிஎஸ் சிஸ்டம் கொண்ட கார் வைத்திருப்பவர்கள் பயப்பட வேண்டுமா?

நெல்லையைச் சேர்ந்த மாருதியின் சர்வீஸ் மேலாளர் விமல்நாத் என்ன சொல்கிறார்?

‘‘இது கேட்கவே புதுமையாக இருக்கிறது. நான் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேல் ஃபோர்டு, மஹிந்திரா என்று எல்லா நிறுவனங்களிலும் சர்வீஸ் மேலாளராகப் பணிபுரிந்துள்ளேன். என் சர்வீஸ் வரலாற்றில் பிரேக்ஸால் தீப்பிடித்தல் நிகழும் என்பது இதுவரை நடந்ததில்லை. கார் தீப்பிடிப்பதற்கு ஏசி, ஒயரிங், இன்ஜெக்டர் (ரொம்ப அரிது) என்று பல காரணங்கள் உண்டு. முக்கியமாக ஒயரிங்கைச் சொல்லலாம். ஒயரிங் வேலைப்பாடுகளில் ஸ்பார்க் ஆனால், பேட்டரி காலி. பேட்டரி வெடித்தால் ஆசிட் லீக் ஆகி, ஃப்யூல் லைனில் பட்டு கார் மொத்தமும் தீப்பிடிக்கும் அபாயம் உண்டு.

Car Fire
Car Fire
Representative Image Only

பிரேக் ஆயில்கூட தீப்பிடித்தலுக்குக் காரணமாக இருந்திருக்கிறது. கார்களில் பிரேக் ஆயிலுக்குப் பயங்கர பவர் உண்டு. எரிபொருளுக்கு இணையான ஆபத்தானது பிரேக் ஆயில். இதை கார் மேல் ஊற்றினால், குறுகிய நேரத்தில் கார் பெயின்ட் காலியாகிவிடும். கார் சர்வீஸில் புதிதாகச் சேர்ந்த ஒருவர், இன்ஜெக்டர்களை க்ளீன் செய்ய பிரேக் ஆயில் பயன்படுத்தி இருக்கிறார். இதனால், அதில் உள்ள ஓயரிங் வீக் ஆகிவிட்டது. இன்ஜெக்டரில் இருந்து ஃப்யூல் லீக் ஆகி, கார் ஓடிக் கொண்டிருக்கும்போதே எரிந்து போனது என்னால் இன்னும் மறக்க முடியாத சம்பவம். ஆனால், ஏபிஎஸ் பிரேக்ஸாலும் ஆபத்து உண்டு என்பது எனக்குப் புதிதாகவே இருக்கிறது. இருந்தாலும் ஜாக்கிரதையாக இருப்போம்!’’ என்றார்.

ஹூண்டாய் தரப்பில் இது சம்பந்தமாகக் கேட்க முயன்றோம். சென்னை இருங்காட்டுக்கோட்டை ஹூண்டாய் தொழிற்சாலையில் உள்ள தலைமை இன்ஜீனியர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘எர்த்தில் பிராப்ளம் அடித்தால், ஷார்ட் ஷர்க்யூட் ஆகி கார் ஃபயர் ஆகும். ஆனால் ஏபிஎஸ்... ஆச்சர்யமா இருக்கே?’’ என்று எல்லோருமே ஆச்சர்யமாகவே கேட்டார்கள்.

எது எப்படியோ... இது நம் ஊருக்கு வராத வரைக்கும் ஓகேதான். எதுக்கும் ஏபிஎஸ் விஷயத்தில் கொஞ்சம் அலெர்ட்டாகவே இருப்போம்.
அடுத்த கட்டுரைக்கு