``கார் டிசைன் என்பது எமோஷனல்!" இளைஞர்களுக்கு வழிகாட்டிய பயிலரங்கம்
`` `ஒரு நாள்… ஒரு கார்… ஒரு டிசைன்…' என்கிற அடிப்படையில் மோட்டார் விகடன் அறிவித்திருந்த `கார் டிசைன் குறித்த ஒருநாள் சுவாரஸ்யமான பயிலரங்கம்' கோயம்புத்தூர் குருமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் தற்போது நடைபெற்று வருகிறது"
புதுப்புது டிசைன்களில் கார் வாங்க வேண்டும் என்கிற விருப்பம் நம் எல்லோருக்குமே இருக்கும். யாரோ ஒருவர் நமக்கான கார்களை டிசைன் செய்து கொடுத்தால் நாம் பயன்படுத்த தயராக இருக்கிறோம். ஆனால், கார் டிசைன்கள் பற்றிய தெளிவு நம்மிடம் இல்லை.
தொழில்நுட்பத்தில் கோலோச்சும் நம் இளைஞர்கள் டிசைன்களில் பெரிதாக அக்கறை செலுத்துவதில்லை. அந்தக் குறையைக் களைவதற்கு மோட்டார் விகடன் எடுத்திருக்கும் முயற்சிதான் இந்த `ஒரு நாள்… ஒரு கார்… ஒரு கனவு!' நிகழ்வு.
கார் டிசைன் குறித்த ஒரு நாள் பயிலரங்கத்தில் கார் டிசைன் பற்றி பயிற்சியளிப்பதற்காக டாடா மோட்டார்ஸ், நிஸான், டி.வி.எஸ் என பல நிறுவனங்களில் பணியாற்றியவரும் தற்போது அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் துணைத்தலைவராக இருக்கும் க.சத்தியசீலனை வரவழைத்திருந்தது மோட்டார் விகடன்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், ஒவ்வொரு முறையும் என்ஜினீயங்கிற்கு சேலஞ்ச் கொடுப்பது டிசைன்ஸ்தான் என்றபடி தனது துவக்க உரையை ஆரம்பித்தார் சத்தியசீலன்,
``இந்தியர்கள் கார் டிசைனர் ஆவதற்கு இதுவே சரியான நேரம். ஏனென்றால், இந்தியாவில்தான் அதிகமான இளைஞர்கள் இருக்கிறார்கள். இதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சில பொருள்களைப் பார்த்ததும் சிம்பிளா இருக்குன்னு பொசுக்குன்னு சொல்லிருவோம். ஆனால், ஒரு விஷயத்தை சிம்பிள் பண்றதுதான் ரொம்பக் கஷ்டம்'' என்றபடி, கார் டிசைன் பற்றிய நுட்பங்களுக்குள் நுழைந்தார்.
கார் டிசைனுக்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்… மற்றும் அப்டேஷன் குறித்த முக்கியத்துவத்தை விவரித்த சத்தியசீலன், ``கார் டிசைன் என்பது ஒரு எமோஷனலான விஷயம். ஏனென்றால் அதுதான் ஒரு மனிதனையும் ஒரு மெஷினையும் இணைக்கிறது'' என்று குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து, கார் டிசைன் பயிற்சிகள் ஆரம்பமானது. இதில் கலந்துகொண்ட மாணவர்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் நிறையை புதிய விஷயங்களை கற்றுக்கொண்டதாக தெரிவித்தனர்.