ஒரு புள்ளி விவரம் இப்படிச் சொல்கிறது. அதாவது, தினசரி தமிழ்நாட்டில்… சாரி… சென்னையில் குறைந்தது ஒரு டஜன் விபத்துக்களுக்குக் குறையாமல் பதிவாகின்றனவாம். இதில் மோசமான உயிரிழப்புகளும் அடக்கம்.
இந்த 12 விபத்துகளில் சுமார் 10 விபத்துகள் டிரைவர்களின் அலட்சியத்தாலும், மோசமான டிரைவிங்காலும்தான் ஏற்பட்டிருக்கின்றன என்றும் சொல்கிறது அந்தப் புள்ளி விவரம்.
இப்படி ஒரு சர்வேயை எடுத்தது அரசாங்கமோ… ஏதோ போக்குவரத்துத் துறை சம்பந்தமான ஏஜென்ஸிகளோ இல்லை. செல்ஃப் டிரைவ் கார்களை வாடகைக்கு ‘ஜூம்’ எனும் தனியார் நிறுவனம்தான் இப்படி ஒரு புள்ளி விவரத்தைச் சொல்லி அதிர்ச்சியூட்டியிருக்கிறது.

‘ஜூம்’ வாடகைக் கார் நிறுவனம், நவம்பர் 2020 முதல் 2021 வரை ஓர் ஆண்டு இந்தியா முழுக்க சுமார் 22 நகரங்களில் ஒரு சர்வே நடத்தியிருக்கிறது. அதில்தான் மோசமான டிரைவிங்கில் முக்கியமான நகரமாக சென்னைக்கு 6–வது இடம் கிடைத்திருக்கிறது. சென்னையில் 12.3% மோசமான வாகன ஓட்டிகளும், நல்ல டிரைவர்கள் 23.6 சதவிகிதமும், சுமாரான ஆவரேஜ் டிரைவர்கள் 64.1 சதவிகிதமும் இருக்கிறார்களாம். இதில் 18.5%–ல் மோசமான டிரைவர்களுடன் முதலிடத்தில் இருப்பது மைசூர் மாவட்டம். 14.0 சதவிகிதத்துடன் மோச மாநகரங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் பெங்களூரு இருக்கிறது. நமக்கு அடுத்து 11.5%–த்துடன் 7–வது இடத்தில் கோயம்புத்தூரும், வெறும் 10.4% மட்டும் கொண்டு திருச்சி 11–வது இடத்திலும் இருக்கிறது.
இதில் நல்ல டிரைவர்கள் கொண்ட மாவட்டமாக, மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தோர் மாவட்டம்தான் முதலிடத்தில் இருக்கிறது. இங்கேதான் இந்தியாவிலேயே அதிகப்படியாக 35.4% அருமையான டிரைவர்கள் இருக்கிறார்களாம். இதற்குக் காரணம், இங்கே டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும் விதம். மத்தியப் பிரதேசத்தில் ஆட்டோமேட்டட்ட டிரைவிங் டெஸ்ட் ட்ராக்குகளில் கார்/பைக் ஓட்டி நல்ல மதிப்பெண் எடுத்தால்தான் இங்கே டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதும் இதற்கு ஒரு முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நம் சென்னையில், இதற்கான வேலை நடந்து கொண்டே இருக்கிறது. (அதாவது நடக்காமலேயே இருக்கிறது). ‘‘சென்னையிலும் ஆட்டோமேட்டட் ட்ராக்ஸ் வந்துவிட்டால், சர்க்கிள் இன்ஸ்பெக்டர்களின் தலையீடு, ஏஜென்ட்களின் குறுக்கீடு, லஞ்சம் போன்றவற்றை எலிமினேட் செய்யலாம்!’’ என்கிறார்கள் சாலைப் பாதுகாப்பு ஆர்வலர்கள் சிலர். இது நிஜம்தான்!
நமது சென்னைப் போக்குவரத்து கமிஷனர் எஸ்.நடராஜன், ‘‘14 கம்ப்யூட்டரைஸ்டு டெஸ்ட் ட்ராக்குகளை அமைப்பதற்காக நமது அரசாங்கம் சுமார் 10 கோடி ரூபாய் வரை சேங்ஷன் செய்திருக்கிறது. இதில் 4.46 கோடி PWD பணிகள் முடிவடைந்துவிட்டன. கேமரா, சென்ஸார் ஃபிட்டிங் போன்ற கம்ப்யூட்டரைஸ்டு பணிகள்தான் மீதமிருக்கின்றன!’’ என்றெல்லாம் சொல்லியிருந்தார்.

இதில் தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஒரு பாராட்டப்பட வேண்டிய விஷயம் – கரூரில் இதற்கான பைலட் ப்ராஜெக்ட் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டு வருகிறது. இந்த ஆட்டோமேட்டட் ட்ராக்கில் நல்ல ரிசல்ட்டும் தெரிந்திருக்கிறது. டிஜிட்டல் டெஸ்ட் ட்ராக்கில் நிஜமாகவே ஒருவருக்கு வண்டி ஓட்டத் தெரியவில்லை என்றால்… நீங்கள் தயவுதாட்சண்யம் பார்க்காமல் ஃபெயில்தான் பாஸ்!
டிஜிட்டல் ட்ராக் வந்த பிறகாவது திறமையான வாகன ஓட்டிகள் உருவாகி, விபத்துகள் குறைகின்றனவா என்று பார்க்கலாம்!