Published:Updated:

வைரஸ் எதிர்ப்பு கார்... சீனாவின் முயற்சி பயனளிக்குமா? #ExpertOpinion

கொரோனா வைரஸுக்குப் பிறகு, பல நிறுவனங்கள் இப்போது சீனாவில் ஆன்டி வைரஸ் கார்களைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளன.

கோவிட்-19 வைரஸ் முதன்முதலாக உருவான சீனா அவ்வைரஸின் பாதிப்பிலிருந்து பெரும்பாலும் மீண்டு விட்டது. தற்போது, கொரோனாவுக்குப் பிறகான வாழ்க்கை எப்படி இருக்கும், சமூகத்தில் என்னென்ன மாற்றங்களெல்லாம் நிகழப்போகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள சீனாவை உலக நாடுகள் அனைத்தும் கவனித்து வருகின்றன.

The Imperfect Show | பழிவாங்கக் காத்திருக்கும் நாடுகள்... நூடுல்ஸ் சிக்கலில் சீனா! | 23/4/2020

கொரோனாவுக்குப் பிறகு தற்போது சீனாவைச் சேர்ந்த பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கார்களில் வைரஸ் எதிர்ப்பு தொழில்நுட்பங்களை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. அந்நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான `கீலி’ (Geely) நிறுவனம் புதிய வைரஸ் பாதுகாப்பு கார் ஒன்றை தற்போது சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா
கொரோனா
AP

ஏற்கெனவே கீலி நிறுவனம் வெளிக்காற்றைச் சுத்திகரித்து காருக்குள் தரும் தொழில்நுட்பத்தை உருவாக்கிக்கொண்டிருந்தது. காற்றில் இருக்கும் PM எனும் சிறு துகள்களைத் தடுத்து உள்ளிருப்பவர்கள் வெறும் காற்றைச் சுவாசிக்கும் இந்தத் திட்டத்தின் பெயர் `Healthy car project'. இதில் தற்போது பாக்டீரியா மற்றும் வைரஸ் ஆகிய நுண்ணுயிர்களை எதிர்க்கும் தொழில்நுட்பத்தை இணைப்பதில் அதிக கவனம் செலுத்திவருகிறார்கள்.

கார்களை `இரண்டாம் வீடு’ என்று கூறுமளவுக்கு அதனுள் அதிக நேரம் செலவிடுகிறோம். அதனால் இதில் உத்திரவாதம் தருவதே எங்கள் கடமை
கீலி நிறுவனம்

கீலி நிறுவனத்தைப் போலவே, பிரிட்டிஷ் கார் தயாரிப்பாளரான MG நிறுவனமும் அதன் குளிர்சாதன சிஸ்டத்தில் காற்றைச் சுத்தப்படுத்தும் புறஊதாக் கதிர்கள் உடைய தொழில்நுட்பத்தைச் சேர்த்துள்ளது. மற்றொரு நிறுவனமான Guangzhou அதன் காரில் காற்றைச் சுத்தப்படுத்தும் மூன்றடுக்கு ஃபில்டர் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ரெட் ஸோனில் 42% ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்... என்னவாகும் ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம்?
கார் தொழிற்சாலை
கார் தொழிற்சாலை
AP

இதுபோன்ற முயற்சிகள் வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் வெகுகாலமாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போது கொரோனா வைரஸின் பாதிப்பால் இந்தத் தொழில்நுட்பம் பெருமளவு பேசப்படுகிறது. இதன் தாக்கம் சீன சந்தையில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருக்கப்போகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் புதிய தொழில்நுட்பம் குறித்து ஜெர்மனியில் உள்ள பெர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (Technical University of Berlin) வாகன அமைப்புகள் துறை ஆராய்ச்சியாளர் அஷ்வந்திடம் பேசும்போது, ``சீன கார் தயாரிப்பாளர்கள் இந்தத் தொழில்நுட்பத்தில் இருவேறு முறைகளைப் பயன்படுத்துகிறார்கள். ஒன்று, காற்றைச் சுத்தப்படுத்தும் ஃபில்ட்டரிங் முறை, மற்றொன்று நுண்ணுயிர் எதிர்ப்பு பொருள்களின் மூலம் பாதுகாக்கும்முறை. COVID-19ஐ உதாரணமாக எடுத்துக்கொள்வோம். அக்கிருமியானது காற்றில் தங்கும் நேரத்தைவிட விரைவாகத் திரவ துளிகளாக மாறிவிடுவதால் காற்றைச் சுத்தப்படுத்தும் ஃபில்டரிங் தொழில்நுட்பம் அதிக பயனைக் கொடுக்காது.

அஷ்வந்த்
அஷ்வந்த்

இந்த ஃபில்ட்டர் வெளியில் இருந்து உள்ளே வரும் காற்றை மட்டுமே சுத்தப்படுத்தும். காரின் உள்ளே இருப்பவர்கள் தும்மினாலோ இருமினாலோ எந்த ஒரு பயனையும் தராது. மற்றொரு முறையான வைரஸ் நுண்ணுயிர்களை எதிர்க்கும் பொருள்களை கார்களின் கதவு கைப்பிடி முதலிய அதிகம் உபயோகப்படுத்தப்படும் இடங்களில் பயன்படுத்தினால் ஓரளவு பாதுகாப்பை அளிக்கலாம். ஆனால் ஒரு வைரஸ், காரின் சீட் முதலியவற்றின் மேற்பரப்பில் எவ்வளவு நேரம் உயிரோடு இருக்கும் மற்றும் இந்தக் கிருமி நாசினிகள் அவற்றுக்கு எதிராக எந்த அளவுக்குத் திறன் கொடுக்கும் என்பதற்கு ஆதாரம் கிடையாது. நான் இதை ஒரு வியாபார யுக்தியாகவே பார்க்கிறேன். தற்போது கொரோனா வைரஸின் பாதிப்பால் ஆட்டோமொபைல் துறை உலகம் முழுவதும் வெகுவாக வீழ்ச்சி அடைந்துள்ளது. மக்களும் அச்சம் காரணமாக பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்த தயங்குகிறார்கள். இந்த நேரத்தில் இம்மாதிரியான புதிய தொழில்நுட்பத்தை அறிவித்து இதற்கென்று கூடுதல் விலை வைத்தால் மக்கள் அதை நிச்சயம் வாங்கத்தான் செய்வார்கள் ” என்கிறார்.

பிரபல அமெரிக்க கார் தயாரிப்பாளரான டெஸ்லா 2015-ம் ஆண்டிலேயே சீனாவில் காற்று மாசு பாதிப்பைக் குறைக்கும் ஃபில்டர் கொண்ட கார்களை அறிமுகம் செய்தது.

இதேபோல மார்ச் மாதம் தொடக்கத்திலேயே ஜப்பான் நாட்டின் நிப்பான் பெயின்ட் நிறுவனம் வைரஸ் பாதிப்புக்கு எதிரான திறன் உடைய பெயின்ட் ஒன்றை அறிமுகம் செய்து, சீனாவின் வுகான் நகரில் உள்ள நான்கு மருத்துவனைக்கு இலவசமாக வழங்கியது. ஆனால், அந்த பெயின்ட் கொரோனா வைரஸுக்கு எதிரானது என்று குறிப்பிட்டுக் கூறவில்லை அந்நிறுவனம். அதற்கான சாட்சியங்களும் கிடையாது.

ஆட்டோமொபைல்
ஆட்டோமொபைல்

"இந்தப் பொருள்களில் செய்யும் செலவுகளை வேறு விஷயங்களுக்குச் செய்யுங்கள்" என்கிறார் சூழலியல் ஆய்வாளர் முனைவர் அருண். அவரிடம் பேசும்போது, ``கார் தயாரிப்பில் காற்றைச் சுத்தப்படுத்தும் ஃபில்டரிங் முறையானது வெகுகாலமாகவே இருந்து வருகிறது. தற்போது COVID-19ஐ ஒரு தாரக மந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன கார் நிறுவனங்கள். ஒரு வாகனத்தின் மைலேஜ் என்ன என்பதை நாம் தெளிவாகக் கணக்கிட முடியும். ஆனால், இந்தத் தொழில்நுட்பம் எந்தளவு திறனை அளிக்கும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. கொரோனா வைரஸை சுற்றுச்சூழலில் இருக்கும் காற்று மாசுபாடு மற்றும் சிறுசிறு துகள்களைத் தொடர்புப்படுத்தி பல ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. எனவே, கொரோனாவை பயன்படுத்தி சந்தையை விரிவுபடுத்துவது ஒருபுறம் இருக்க, காற்று மாசுபாட்டைக் குறைக்கும் புதிய தொழில்நுட்பங்களிலும் கார் தயாரிப்பாளர்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

கடந்த 20 வருடங்கள் இல்லாத அளவு சீனாவின் ஆட்டோமொபைல் துறை பிப்ரவரி மாதம் 80% வீழ்ச்சி கண்டது. இது சென்ற ஆண்டு பிப்ரவரியைவிட 43% குறைவு. கார் தயாரிப்பாளர்கள் தங்கள் பழைய நிலையை எட்ட இன்னும் மூன்று வருடங்கள் வரை ஆகும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நிலையில், சந்தையை மீட்டெடுக்க கைகொடுக்குமா ஆன்ட்டி வைரஸ் கார்கள்? பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு