Published:Updated:

SPIED : சிட்ரனின் அடுத்த மைக்ரோ எஸ்யூவி C3 ரெடி!

சிட்ரன் C3
சிட்ரன் C3

சென்னையை அடுத்த திருவள்ளூரில் இந்த C3 காரை ஸ்பை படம் எடுத்திருக்கிறார், நமது வாசகர் செல்வம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

லேட்டாக கொஞ்சம் லேட்டஸ்ட்டாக இந்தியாவில் என்ட்ரி ஆகியிருக்கும் பிரெஞ்சு நிறுவனமான சிட்ரன், தனது முதல் காராக C5 ஏர் க்ராஸ் எனும் எஸ்யூவியை விற்றுக் கொண்டிருக்கிறது. சிட்ரன் நிறுவனம், தனது கார்களுக்கு C எனும் எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டுதான் இனி கார்களைக் கொண்டு வருமாம். C என்றால், Comfort என்று அர்த்தம். இப்போது சிட்ரன், தனது அடுத்த மைக்ரோ எஸ்யூவியான C3–யை விரைவில் விற்பனைக்குக் கொண்டுவர இருக்கிறது.

C3 காருக்கு இப்போது C21 என்பதுதான் குறியீட்டுப் பெயர். தயாரிப்புப் பணிகள் முடிந்து, சாலைகளில் ஓடத் தயாராக இருக்கும் C3 காரை, இப்போது சென்னையில் தீவிர டெஸ்ட்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள். சென்னையை அடுத்த திருவள்ளூரில் இந்த C3 காரை ஸ்பை படம் எடுத்திருக்கிறார், நமது வாசகர் செல்வம்.

C3 in Testing
C3 in Testing

C3 காரில் என்ன ஸ்பெஷல்?

C5 கார் CKD முறையில் தயார் செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டதால், இதன் விலை எக்கச்சக்கமாக இருக்கிறது. 36 – 38 லட்சம் வரை இதன் ஆன்ரோடு விலை. அதனால் வாடிக்கையாளர்களைக் கவரவில்லை. ''ஒரு 5 சீட்டர் எஸ்யூவிக்கு இவ்வளவு விலையா’' என வாடிக்கையாளர்கள் விலகிப் போனார்கள். அதனால், C5 பெரிதாக எடுபடவில்லை. அந்த தவற்றை C3–ல் செய்யத் தயாராக இல்லை சிட்ரன். இது முழுக்க திருவள்ளூர் தொழிற்சாலையில், லோக்கலைசேஷன் முறையில் தயாராவதால், இதன் விலை, மற்ற போட்டியாளர்களான மேக்னைட், வென்யூ, சோனெட், பிரெஸ்ஸா, ரெனோ கிகர் போன்றவற்றுக்கு இணையாக இருக்கலாம்.

ஏற்கெனவே கான்செப்ட் படத்தை வெளியிட்ட சிட்ரனின் உள்பக்க வசதிகள் எதுவும் இன்னும் தெரியவில்லை. அநேகமாக, இது 7 இன்ச் டச் ஸ்க்ரீன் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்டிவிட்டி வசதிகளுடன் வரலாம்.

ஆனால், வெளிப்புறத்தைப் பார்க்கும்போது, அப்படியே C5 ஏர்–க்ராஸ் காரின் தம்பி போலவே இருக்கிறது C3. பார்ப்பதற்குத் தம்பி மாதிரி இருந்தாலும், இதன் கட்டுமானம் அண்ணனைப்போல் கிண்ணென்று இருக்கும். காரணம், இது தயாராகும் ப்ளாட்ஃபார்ம் அப்படி. CMP (Common Modular Platform) எனும் பழைய பெஜோ கார்கள் ரெடியாகும் ப்ளாட்ஃபார்மில் இது உருவாகி இருக்கிறது. இனி வரும் காலங்களில், கட்டுமானத் தரத்துக்குப் பெயர் பெற்ற ஜீப் நிறுவனத்தின் 4 மீட்டர் கார்களுக்குக்கூட இந்த ப்ளாட்ஃபார்ம்தானாம்!

ஒரு மாதிரியான க்ராஸ் ஓவர் ஸ்டைலில் இருக்கிறது C3. சிட்ரனின் ஸ்பெஷல் டிசைன் அம்சங்கள் கார் முழுக்க இருக்கின்றன. செவ்வக வடிவில் ஹெட்லைட்ஸ், பின்புறம் டூயல் டோன் ஃபினிஷிங் எல்லாம் ஓகே!

C3 in Testing
C3 in Testing

மைக்ரோ எஸ்யூவி என்பதால், ரூஃப் ரெயில் இதில் நிச்சயம் இருக்கும். ஆரஞ்ச் நிறத்தில் இதன் ரூஃபை ஏற்கெனவே ஸ்கேல் மாடலில் காட்டியிருந்தது சிட்ரன். காரின் முன் பக்கத்திலும் ஆரஞ்ச் நிற வேலைப்பாடுகள் இருக்கும்.

எல்லாம் ஓகே! ஆனால், கதவில் Pull Type–க்குப் பதிலாக Flap Type டோர் ஹேண்டில்கள் பொருத்தியிருக்கிறார்கள். இது பழைய மாடலாச்சே… இது எத்தனை பேருக்குப் பிடிக்கும் என்று தெரியவில்லை. அதேபோல் எஸ்யூவிக்கான சன்ரூஃப், ஷார்க் ஃபின் ஆன்ட்டெனா, ரியர் வைப்பர் போன்றவை மிஸ்ஸிங். இந்த ஸ்பை போட்டோவில் ரெகுலரான வீல்கள் இருந்தாலும், டைமண்ட் கட் PSEUDO அலாய் வீல்களுடன்தான் நிச்சயம் வரும் C3. ஏனென்றால், இதுதான் இப்போதைய ட்ரெண்ட். வென்யூ, ஐ20, கிகர் போன்றவை PSEUDO அலாய் வீல்களுக்கான உதாரணம்.

இன்ஜினைப் பொருத்தவரை இந்த சிட்ரன் C3–ல் டீசல் இன்ஜின் வராது. பெட்ரோல்தான். 1.2லிட்டர் பெட்ரோல் இன்ஜினில் டர்போ இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் DCT (Dual Clutch Transmission) ஆட்டோமேட்டிக் என இரண்டு கியர்பாக்ஸ்களுமே இருக்கும். சப் 4 மீட்டர் கார்; வரிச்சலுகை, உள்ளூர் தயாரிப்பு என இதன் விலை கொஞ்சம் பிராக்டிக்கலாக இருந்தால், எஸ்யூவி பிரியர்கள் C3–யை டிக் அடிக்க வாய்ப்புண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு