Published:Updated:

கோவை ரேஸ் ட்ராக்கில் புதிய சாதனை படைத்த கோவை `குரு சிஷ்யன்'!

கோவையில் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை
கோவையில் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை

கோவை கரி ஸ்பீட்வேஸ் ரேஸ் ட்ராக்கில் ஒரு லேப் தூரத்தை, வ்வ்வ்ர்ரூம் எனக் கடந்து சாதனை படைத்துள்ளனர் கோவையைச் சேர்ந்த இளைஞர்கள்.

ஒரு வருடத்தின் மதிப்பு ஒரு மாணவனுக்குத்தான் தெரியும், ஒரு நிமிடத்தின் மதிப்பு ஒரு ரயிலைத் தவற விட்ட நபருக்குத்தான் தெரியும், ஒரு விநாடியின் மதிப்பு சாலை விபத்தைச் சந்தித்தவருக்குத்தான் தெரியும், அதே போல் ஒரு மைக்ரோ விநாடியின் மதிப்பு ஒரு ரேஸருக்குத்தான் தெரியும். பைக் மற்றும் கார் ரேஸ்களில் வெற்றி தோல்விகள் ஒரு மைக்ரோ நொடியில்தான் தீர்மானிக்கப்படுகின்றன. இங்குக் கோவையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் ஒரு சில விநாடிகள் வித்தியாசத்தில் பெரிய சாதனைகளையே நிகழ்த்தியிருக்கின்றனர்.

தருண்குமார் (இடது) மற்றும் அபினவ் (வலது)
தருண்குமார் (இடது) மற்றும் அபினவ் (வலது)
India book of records
India book of records

கோவை கரி மோட்டார் ஸ்பீட்வே ரேஸ் ட்ராக், தமிழகத்தின் முக்கியமான ரேஸ் ட்ராக்குகளில் ஒன்று. 2003-ல் திறக்கப்பட்ட இந்த ரேஸ் ட்ராக் தற்போது தேசிய அளவிலான பைக் மற்றும் கார் ரேஸ் போட்டிகளை நடத்தி வருகிறது. 2.2 கிமீ நீளம் இருந்த இந்த ரேஸ்ட்ராக் சமீபத்தில் 2.7 கிமீ அளவு நீட்டிக்கப்பட்டது. இந்த ரேஸ் ட்ராக்கில் ஒரு லேப் தூரத்தை 1:23:81 விநாடிகளில், வ்வ்வ்ர்ரூம் எனக் கடந்து சாதனை படைத்துள்ளனர் கோவையைச் சேர்ந்த இளைஞர் தருண்குமார். இதற்கு முன்பு 1:24:061 விநாடிகள் என்று இருந்த சாதனையை இவர் முறியடித்திருக்கிறார். கவாஸாகி நின்ஜா 300 சிசி ஸ்டாக் பைக்கில்தான் இந்தச் சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

தருண்குமாரைத் தொடர்ந்து அவரது மாணவரான அபினவ் அதே லேப்பை, 1:26:19 நேரத்தில் கடந்திருக்கிறார். அபினவ் பயன்படுத்தியது, 165 சிசி திறன் கொண்ட R15 V3 ஸ்டாக் பைக். இதே அபினவ்தான், முன்பு 1:27 நிமிடங்களில் கரி மோட்டார் ட்ராக் லேப்பைக் கடந்திருக்கிறார். அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

தருண்குமார்
தருண்குமார்
அபினவ்
அபினவ்
சிஆர்ஏ மோட்டார் ஸ்போர்ட்ஸுடன் மோட்டார் விகடன் மற்றும் டிவிஸ் யூரோகிரிப் இணைந்து ஸ்பான்ஸர் செய்த இந்த நிகழ்வு கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெற்றது.

இவர்ளுடன் எஸ்.என்.எஸ் இன்ஸ்டியூஷன், அலஃப்ட் ஹோட்டல் மற்றும் யுனைடெட் கூலிங் சிஸ்டம் ஆகிய நிறுவனங்களும் ஸ்பான்ஸர்களாக இணைந்திருந்தனர். இவர்களது சாதனை இந்தியா புக் ஆஃப் ரெக்காட்ஸிலும் (India book of records) இடம்பெற்றது.

நின்ஜா 300 சிசி பைக்
நின்ஜா 300 சிசி பைக்

இந்தச் சாதனை குறித்து தருண் குமார் பேசும்போது, "போன பிப்ரவரியில் கரி மோட்டார் ஸ்பீட்வேஸில் மோட்டார் சைக்கிள் ரேஸ் நடந்தது. அதுல ரெக்கார்ட் ஆன டைமிங்க வச்சு இந்த ரெக்கார்ட நாங்க செஞ்சுருக்கோம். சில நொடிகள் வித்தியாசத்துலதான் புது ரெக்கார்டை உருவாக்கியிருக்கோம். ரேஸிங்கைப் பொருத்தவரைக்கும் சில நொடிகள் அப்படிங்கறதே ரொம்ப அதிகம்தான். வெற்றி தோல்விகள்கூட மைக்ரோ விநாடியிலதான் தீர்மானிக்கப்படுது. இந்த ரெக்கார்ட் செய்றதுக்கு டிவிஎஸ் யூரோகிரிப் டயர்ஸ்தான் பயன்படுத்தியிருக்கோம். எப்பவும் வெளிநாட்டுல உற்பத்தியாகுற டயர்ஸ்தான் இந்தியால உபயோகப்படுத்திட்டு இருக்காங்க. நார்மலா நாம் பயன்படுத்துற டயர்களை இந்த மாதிரி ரேஸிங்குக்கும் பயன்படுத்த முடியாது. ஏன்னா அதுல இருக்க கிரிப் கம்மியா இருக்கும். அதனால, ரேஸிங்குக்குப் பிரத்யேகமா உருவாக்குன இந்த டயர்ஸ பயன்படுத்துனோம். இதுவும் எங்களோட ரெக்கார்ட் டைமிங்குக்கு உதவுச்சு" என்றார்.

குருவுக்கும் சிஷ்யனுக்கும் நமது வாழ்த்துகளையும் தெரிவிப்போம்.

அடுத்த கட்டுரைக்கு