Published:Updated:

``இந்தியாவில் வேகமாகச்  செல்லும் கார், பைக் வந்துடுச்சு. ஆனா...." நரேன் கார்த்திகேயனின் ஆதங்கம்!

இந்தியாவின் வேகமான ரேஸ் டிரைவர் நரேன் கார்த்திகேயனிடம் சில கேள்விகள்... அதற்கான பதில்கள்.

கிரிக்கெட்டில் சச்சின் கரியர் நீண்டது 23 ஆண்டுகள். கால்பந்தில் பீலே விளையாடியது 24 ஆண்டுகள், ஹாக்கியில் தயான் சந்த் 23 ஆண்டுகள் வரை கொடிகட்டிப் பறந்தார். இப்படி, 20 ஆண்டுகளைக் கடந்து விளையாட்டுத்துறையில் ஒருவரால் இளம் தலைமுறைக்கு இணையாக வெற்றிகரமாக இயங்க முடியும் என்றால், அந்த கரியரில் அவர் நிச்சயம் லெஜெண்ட். அந்த வரிசையில், கார் ரேஸ் எனும் வேகத்துக்கான போட்டியில் முன் நிற்பவர், நரேன் கார்த்திகேயன்.

தன் கரியரில் 26 ஆண்டுகள் முடிந்த பின்னும் ரேஸ் காரின் ஸ்டியரிங்கைப் பிடித்து வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார் இந்தியாவின் முதல் F1 ரேஸர், நரேன் கார்த்திகேயன். கடந்த 20 ஆண்டுகளில் நரேன் செய்த ஒவ்வொரு சாதனையையும் அவர் மட்டுமே முறியடித்திருக்கிறார் என்பது தனித்துவம். சமீபத்தில், மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கில் நரேன் கார்த்திகேயனை சந்தித்து, அவரோடு காரில் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு, அதே வேகத்தில் சில கேள்விகளையும் கேட்டோம்.

நரேன் கார்த்திகேயன்
நரேன் கார்த்திகேயன்

உங்களை அதிகமாக பொதுவெளியில் பார்க்க முடிவில்லையே... எங்கே இருக்கீங்க?

சொந்த ஊர் கோயம்புத்தூர். ஆனால், நான் சென்னையில்தான் இருக்கேன். இப்போ, ஜப்பானில் சூப்பர் ஜி.டி ரேஸ் ஓட்டிட்டு இருக்கிறதால, சென்னையில் என்னை அடிக்கடி சந்திக்க வாய்ப்பு இல்லை.

F1-க்குப் பிறகான வாழ்க்கை எப்படி இருக்கு?

F1 ரொம்பவே கஷ்டமான ஸ்போர்ட். நான், 45 கிராண்ட் ஃப்ரீ ரேஸ் ஓட்டிட்டேன். எல்லாக் கண்டத்திலேயும், உலகத்தோட எல்லா முக்கியமான ரேஸ் டிராக்கிலும் ரேஸ் ஓட்டிட்டேன். இந்தியாவில் ஃபார்முலா ஒன் போட்டியை நிறுத்திட்டாங்க. அதனால், அந்தப் போட்டியில் கலந்துக்கிறது சிரமமா போச்சு. கடந்த 6 வருஷமா நான் ஜப்பானில் ரேஸ் ஓட்டிட்டு இருக்கிறேன். அங்க எனக்கு ஒரு நல்ல கரியர் இருக்கு.

Narain Karthikeyan in MRF Formula 2000 car
Narain Karthikeyan in MRF Formula 2000 car

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜப்பானிலும் நீங்கதான் படுவேகம்னு கேள்விப்பட்டோம். சூப்பர் ஜிடி ரேஸ் பற்றிச் சொல்லுங்களேன்?

ஜப்பானில், ஆட்டோபாக்ஸ் சூப்பர் ஜிடி ரேஸில் இருக்கிறேன். F1 அளவுக்கு இதுவும் வேகமான போட்டி. ஆனால், நான் ஓட்டிய ரேஸ்களைவிட இது வித்தியாசமானது. நான் இப்போ, ஹோண்டா நிறுவனத்துக்காக டிரைவ் பண்ணிட்டிருக்கேன். கடைசி சீசனோட, கடைசி ரேஸில் அவங்களோடு கைகோத்தேன். ரொம்பவே கஷ்டமான ரேஸ். ஆரம்பமே மழையோடு ஆரம்பிச்சது. ரெண்டு வெவ்வேறு டயர்களைப் பயன்படுத்தினோம். அதன் மூலமான நல்ல யுக்தி கிடைச்சது. சுலபமா ஜெயிச்சிட்டோம். ஹோண்டா காரில் ஆடி, பிஎம்டபிள்யூ, லெக்ஸஸ், நிஸான்னு எல்லாரையும் தோற்கடிச்சிட்டோம். நிறைய ஐரோப்பிய டிரைவர்கள் வந்திருந்தாங்க, அவங்களையும் ஜெயிச்சிட்டோம்.

உலகம் முழுக்க கார் பந்தயங்களில் ஈடுபட்டிருக்கீங்க, மற்ற இடங்களில் பார்க்கும் ரேஸ் கலாசாரமும், இந்தியாவின் ரேஸ் டிரைவிங் கலாசாரமும் ஒன்றுபோலத்தான் இருக்கா?

பொதுவா, மோட்டார் ஸ்போர்ட்ஸ் கொஞ்சம் புறக்கணிக்கப்பட்டதுதான். இதை நடத்த, M.M.R.T ரேஸ் டிராக் மாதிரியான பெரிய கட்டுமானம் தேவை. விலை அதிகமான விளையாட்டும்கூட. இப்போதான் இதை கவர்மென்ட் கண்டுக்க ஆரம்பிச்சிருக்காங்க. எதிர்காலத்தில் நம்மால் நிறைய திறமையான இளம் டிரைவர்களை உருவாக்க முடியும்.

MMRT
MMRT

உங்கள் அப்பா, கார் ராலியில் பிரபலமானவர். நீங்க ஒரு கட்டுப்பாடான சூழலில் பந்தயத்தில் ஈடுபடக்கூடிய சர்க்யூட் ரேஸர்... நீங்க ராலி பக்கமே வரலையேனு அப்பா என்னைக்காவது கேட்டிருக்கிறாரா?

அவர் எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்கல. நீ என்ன பண்ணுவியோ பண்ணிக்கோன்னு விட்டுட்டார். எனக்கு ராலியில் விருப்பம் இல்லை. ரேஸ் அளவுக்கு அங்க வேகமா போகமுடியாது. ஃபாஸ்ட் கார்தான், அதுலேயும் ஃபார்முலா ஒன் போட்டிதான் பெஸ்ட்.

1993-ல் கரியரைத் தொடங்கிய நீங்க, 2020-லும் இந்தியாவின் வேகமான ரேஸரா இருக்கீங்க... அடுத்தகட்ட திட்டம் என்ன?

இதுவரைக்கும் எனக்குப் பிறகு யாருமே இல்லையேனு நினைக்கிறப்போ, வருத்தமாதான் இருக்கு. ஒரு சில இளம் டிரைவர்கள் திறமையானவர்களா இருக்காங்க. ஆனா, ஃபார்முலா ஒன் அளவுக்கு இல்லை. அதனால நான் ஒரு அகாடமியைத் தொடங்கலாம்னு இருக்கேன். என்னுடைய திட்டத்தை இன்னும் முறைப்படுத்திட்டு முழு விவரத்தையும் சொல்றேன்.

கார் பந்தயங்கள், சாலையில் நாம் ஓட்டும் டிரைவிங் முறையைப் பாதிக்குமா?

கண்டிப்பா. ரேஸ் டிராக் நம் சாலையைவிட பாதுகாப்பானது. அதனால், அது பாதுகாப்பான சூழலையும், நல்ல டிரைவிங் நடத்தையையும் உருவாக்கும். இந்தியாவில், வேகமான கார்களும் பைக்குகளும் நிறைய வந்தாச்சு. ஆனால், டிரைவிங் திறனும், சாலை நடத்தையும் மாறவேயில்லை. பொதுவா சொல்வாங்க, இந்தியாவில் கார் ஓட்டினா எங்கேயும் ஓட்டலாம்னு. அது தப்பு, இந்தியாவில் கார் ஓட்டிப் பழகிட்டா, இங்க மட்டும்தான் ஓட்டமுடியும்... வேற எங்கேயும் ஓட்டமுடியாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு