Published:Updated:

தமிழ்நாட்டில் கடைதிறக்கும் காற்றுப்பை கம்பெனிகள்... காரணம் என்ன?! #DaicelAirbag

கார்களுக்கான காற்றுப்பை… இனி தமிழ்நாட்டிலேயே தயாராகுது! ஜப்பான் நிறுவனம் OMR-க்கு வருது! #Daicel

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவின் டெட்ராய்ட் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது சென்னை. ஜப்பான், ஸ்வீடன், சீனா, நெதர்லாந்து போன்ற நாடுகள், பல ஆயிரம் கோடிகளைக் கொட்டித் தங்கள் தொழிற்சாலைகளைத் தமிழ்நாட்டில் தொடங்கிக் கொண்டிருக்கின்றன.

நெதர்லாந்தைச் சேர்ந்த Dinex எனும் நிறுவனம், ஹாங்காங்கைச் சேர்ந்த BYD எனும் நிறுவனம், Ola Electric Mobility கம்பெனி – இப்படி கடந்த ஆண்டில் மட்டும் 2 பில்லியன் டாலர்களுக்கு ஆட்டோமோட்டிவ் துறையில் முதலீடு நடந்துள்ளது. ‘இதுல என்ன இருக்கு’ என்று சாதாரணமாக கமென்ட் செய்பவர்களுக்கு, நச்சென இரண்டே பாயின்ட்கள்.

ஒன்று – ஆட்டோமொபைல் துறையில் பல இன்ஜீனியர்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும். இரண்டாவது – ஆட்டோமோட்டிவ் உதிரி பாகங்கள் நம் ஊரிலேயே தயாரிக்கப்படுவதால், கார்/பைக்குகளின் விலை கணிசமாகக் குறையும்.
airbag
airbag

இதில் லேட்டஸ்ட் வரவு – டெய்ஸல் (Daicel) எனும் காற்றுப் பை நிறுவனம். தங்கள் காற்றுப் பை இன்ஃப்ளேட்டர்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு நம் ஊரைத்தான் டிக் அடித்திருக்கிறது. இதற்காக நம் ஊர் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள CapitaLand எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் Onehub-ல் பல ஏக்கர் நிலத்தில் பூமி பூஜை போட்டு, 230 கோடி ரூபாயை எடுத்து வைத்திருக்கிறது டெய்ஸல்.

ஜப்பானில் உள்ள ஒஸாகாதான் டெய்ஸல் நிறுவனத்துக்குத் தலைமையகம். 2018–ல் ஏற்கெனவே ஹரியானா, குருக்ராமில் கிளையைத் தொடங்கி செயல்படுத்திக் கொண்டு வருகிறது. இப்போது சென்னையில் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறது Daicel. ‘‘இந்திய ஆட்டோமொபைலில் டெய்ஸலின் சப்ளை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இதுவரை தாய்லாந்து போன்ற மற்ற நாடுகளிலிருந்து இந்திய கார் நிறுவனங்களுக்கு எங்கள் காற்றுப்பை இன்ஃப்ளேட்டர்களை சப்ளை செய்து கொண்டு வந்தோம். இனிமேல், தமிழ்நாட்டிலேயே உற்பத்தி தொடங்க இருக்கிறது. இதன் மூலம் இந்திய ஆட்டேமொபைல் சந்தையை ஒரு கை பார்க்க இருக்கிறோம்!’’ என்கிறார் Daicel India நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டக்காஷே யோஷிஃபிமி.

Autoliv, Dinex போன்ற நிறுவனங்களைத் தொடர்ந்து இப்போது Daicel போன்ற பாதுகாப்பு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உதிரி பாகங்கள் தயாரிப்புத் தொழிற்சாலையைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது. நம் நாட்டில் கடுமையாக்கப்பட்டு வரும் பாதுகாப்புச் சட்டங்களால்தான் ஆட்டேமொபைல் நிறுவனங்கள் அலெர்ட்டாகி வருகின்றன.

2019, செப்டம்பருக்குப் பிறகு டிரைவர் காற்றுப் பை மற்றும் ஏபிஎஸ், ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம் (80–க்கு மேல் போனால் பீப் அலாரம்), டிரைவருக்கும் கோ–டிரைவருக்கும் சீட் பெல்ட் ரிமைண்டர், ரிவர்ஸ் பார்க்கிங் அலெர்ட் சிஸ்டம், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டத்துக்கு Manual Override அலெர்ட் (எலெக்ட்ரிக்கல் சிஸ்டம் ஃபெயிலியராகும் பட்சத்தில் கார் கதவுகள் திறந்து கொள்ளும்) போன்ற சில பாதுகாப்பு விஷயங்களைக் கட்டாயமாக்கியது மத்திய அரசு.

daicel airbag
daicel airbag

இனி ஏப்ரல்–1, 2021–க்குப் பிறகு தயாரிக்கப்படும் கார்களில் நிச்சயம் கோ–டிரைவர் சீட்டுக்கு எதிரேயும் காற்றுப் பைகள் இருக்க வேண்டும் என்று, மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் டிராஃப்ட் வெளியிட்டு விட்டது. இதுவே நடப்பு மாடல்கள் என்றால், ஜூன்–1–க்குப் பிறகு இதைக் கட்டாயமாக்க வேண்டும் என்பதும் சட்டமாகி விட்டது.

காற்றுப் பை, சீட்பெல்ட், பிரேக்ஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்களை கார் நிறுவனங்களே கவனித்துக் கொண்டிருக்க முடியாது. வெண்டார்களிடம் இறக்குமதி செய்து வாங்கித்தான் பொருத்த முடியும். அதனால்தான் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்குப் படையெடுத்து வந்து கொண்டிருக்கின்றன. Daicel நிறுவனத்தின் காற்றுப்பை தயாரிப்பு இன்னும் 2 ஆண்டுகளில் ஆரம்பித்து விடுமாம்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு… இப்போது ஆட்டோமொபைல் துறையையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு