டெல்லி ஆட்டோ எக்ஸ்போவை டிவிஎஸ், பஜாஜ், ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்கள் தவிர்த்தது ஏன்? #AutoExpo2020

பிப்ரவரி 7, 2020 தொடங்கி பிப்ரவரி 12, 2020 வரை நடக்கும் இந்த டெல்லி ஆட்டோ ஷோவிலிருந்து, பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விலகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
`இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோ ஷோ' (Auto Expo) என்ற பெருமைபெற்றிருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ, இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடந்த 2016, 2018–ஐ தொடர்ந்து 2020–லும் கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் India Expo Mart-ல் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ நடைபெற உள்ளது. பிப்ரவரி 7, 2020 தொடங்கி பிப்ரவரி 12 வரை நடக்கும் 15–வது ஆட்டோ ஷோவிலிருந்து, பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விலகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த காலங்களில் எக்ஸ்போவில் பங்குபெறுவதற்கான தொகை அதிகமாக இருப்பதே இதற்கான காரணமாக இருந்தது. ஆனால், இப்போது சூழல் மாறிவிட்டது. குறைந்துவரும் வாகன விற்பனை, BS-6 விதிகளுக்கேற்ப வாகனங்களை மேம்படுத்துதல், எலெக்ட்ரிக் வாகனங்களில் கவனம் செலுத்துவது எனப் பல்வேறு சிக்கல்களை இந்திய ஆட்டோமொபைல் துறை ஒருசேர சந்தித்து வருகிறது. நிலைமை இவ்வாறாக இருந்தாலும், இம்முறை சீனாவைச் சேர்ந்த Great Wall Motors நிறுவனம், நம் நாட்டில் முதன்முறையாகத் தமது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்த முடிவெடுத்திருக்கிறது (கடந்த முறை கொரிய நாட்டின் `கியா' நிறுவனம் கலக்கியது தெரிந்ததே!). எனவே, யாரெல்லாம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் உள்ளே/வெளியே என்பதை இனி பார்ப்போம்.
டூ-வீலர்கள்: சுஸூகி மற்றும் பியாஜியோ மட்டும்தான் போல!

`இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் அதிக எண்ணிக்கையில் டூ-வீலர்களைத் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம்' என்ற புகழுக்கு அதிபதியான ஹீரோ மோட்டோகார்ப், டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் பங்கேற்கவில்லை என்பதை முதலிலேயே அறிவித்துவிட்டது. கடந்த சில ஆண்டுகளைப் போலவே, பஜாஜ் மற்றும் ராயல் என்ஃபீல்டு இம்முறையும் இந்த ஆட்டோ ஷோவில் இருக்கமாட்டார்கள்.
ஆனால், வியப்பளிக்கும் விதத்தில், மற்ற இந்திய டூ-வீலர் நிறுவனங்களான டிவிஎஸ், ஜாவா, ஏத்தர் எனர்ஜி நிறுவனங்கள், இந்த எக்ஸ்போவில் கலந்துகொள்ளாதது மைனஸ்தான். கடந்தமுறை கவாஸாகி, யமஹா, ஹோண்டா ஆகிய ஜப்பானிய நிறுவனங்கள் பெரிய அரங்குகளில் இடம்பெற்ற நிலையில், இந்த முறை அவர்கள் யாருமே வரவில்லை!

தாய்க் கழகமான பிஎம்டபிள்யூவே பங்குபெறாத நிலையில், அவர்களின் டூ-வீலர் பிரிவான பிஎம்டபிள்யூ Motorrad மட்டும் இருக்குமா என்ன? மற்றபடி பிரீமியம் பைக் தயாரிப்பாளர்களான ட்ரையம்ப், ஹார்லி டேவிட்சன், டுகாட்டி, மோட்டோராயல் குழுமம் (MV Agusta, FB Mondial, SWM, Norton, Hyosung) ஆகிய நிறுவனங்களும், டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020-க்கு டாடா காண்பித்துவிட்டன.
இத்தனை பேர் வராத சூழலில், சுஸூகி மற்றும் பியாஜியோ குழுமம் (ஏப்ரிலியா, வெஸ்பா) கலந்துகொள்வது ஆறுதல். இப்படி நிறைய டூ-வீலர் நிறுவனங்கள் இடம்பெறாததால், கடைசி நேரத்தில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் அல்லது புதிய நிறுவனங்கள், 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவை அலங்கரிப்பதற்கு சாத்தியம் இருக்கிறது.
கார்கள்: லக்ஸூரி கார் நிறுவனங்கள் Absent!

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020 தொடங்குவதற்கு, மூன்று மாதங்கள் மட்டுமே இருக்கிறது. ஆனால் அதற்குள்ளாக, இதில் பங்கேற்கப்போகும் கார் தயாரிப்பாளர்கள் யார் என்ற பட்டியல் ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. சீனாவில் எஸ்யூவி மற்றும் பிக்-அப் வாகனங்களைத் தயாரிப்பதில் பெயர்பெற்ற Great Wall Motors, இந்தமுறை புதிய நிறுவனமாக இந்தியாவில் களமிறங்க உள்ளது. எம்ஜி மோட்டார்ஸைப் போலவே, குஜராத்தில் இந்த நிறுவனம் தனது தொழிற்சாலையை நிறுவும் முடிவில் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் Haval எஸ்யூவி, ஏற்கெனவே நம் ஊர்ச்சாலைகளில் டெஸ்ட்டிங்கில் இருந்தது.
டூ-வீலர் போலவே, கார் ஏரியாவிலும் சில அதிர்ச்சிகரமான விஷயங்கள் இருக்கிறது! கடந்த முறை புதிய தயாரிப்புகளைக் காட்சிப்படுத்திய பிஎம்டபிள்யூ மற்றும் ஹோண்டா நிறுவனங்கள், இந்த முறை பங்கேற்கவில்லை.

லக்ஸூரி கார் நிறுவனங்களில் ஆடி, ஜாகுவார், லேண்ட்ரோவர், வால்வோ, லெக்ஸஸ் ஆகியோர் Absent என்ற நிலையில், அந்தப் பிரிவில் மெர்சிடீஸ் பென்ஸ் மட்டுமே தனி ஆவர்த்தனம் செய்யும் என நம்பலாம். இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நுழையும் முனைப்பில் இருக்கும் சிட்ரன், டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் கலந்துகொள்ளாதது வியப்பளிக்கிறது. இதனுடன் ஃபோர்டு, FCA குழுமம் (ஜீப், ஃபியட்), டொயோட்டா, நிஸான்/டட்ஸன் எனச் சர்வதேச நிறுவனங்களும் இந்த ஆட்டோ ஷோவுக்கு Bye Bye காண்பித்துள்ளார்கள்.
சிறிய இடைவெளிக்குப் பிறகு, ஃபோக்ஸ்வாகன் மற்றும் ஸ்கோடா ஆகிய நிறுவனங்கள் இங்கே வரவிருப்பது வரவேற்கத்தக்கதே. மற்றபடி 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வழக்கமாக இடம்பெறும் மாருதி சுஸூகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, ரெனோ தவிர, இந்த முறை கியா மற்றும் MG ஆகியோரும் இணைந்துள்ளார்கள். இவர்களது முதல் தயாரிப்பே அதிரடியான வெற்றியைப் பெற்றிருப்பதால், அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இரண்டு நிறுவனங்களும் துரிதமாக இறங்கியிருக்கிறார்கள்.
எந்தெந்த வாகனங்கள், 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரலாம்?

மெர்சிடீஸ் பென்ஸ் GLE, டாடா அல்ட்ராஸ், ஹூண்டாய் i20, கியா கார்னிவல், மஹிந்திரா தார், மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட்/பெட்ரோல், MG ஹெக்டர் 6/7 சீட்டர், ஃபோக்ஸ்வாகன் T--க்ராஸ், ரெனோ காம்பேக்ட் எஸ்யூவி, டாடா பஸ்ஸார்டு, மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, டாடா H2X, ஸ்கோடா Kamiq, ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட், டாடா நெக்ஸான்/டியாகோ-டிகோர் ஃபேஸ்லிஃப்ட், ஹூண்டாய் i10 நியோஸ் N மற்றும் க்ரெட்டா என இந்தப் பட்டியலில், ஆர்வத்தைத் தூண்டக்கூடிய பல தயாரிப்புகள் இடம்பெறலாம்; இதனுடன் பல மாடல்களின் BS-6 & எலெக்ட்ரிக் வெர்ஷன்களும் காட்சிப்படுத்தப்படலாம்.
