Published:Updated:

நீண்ட நாள்களுக்குப் பிறகு வாகனத்தை எடுக்குறீங்களா..? இதையெல்லாம் செய்ய மறக்காதீங்க! #DoItYourself

வாகனத்தில் வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் இன்ஜினுக்கு, நாம் சிறிது ஓய்வு கொடுப்பதுபோல... பூமி எனும் நிற்காமல் இயங்கிக் கொண்டிருக்கும் இயந்திரத்தை, ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்தது, இந்த கொரோனாதான் எனலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விகடன் வாசகர்களுக்கு அன்பு வணக்கம்!

இந்தக் கட்டுரையை எழுதியவர், மோட்டார் விகடன் வாசகரான வ. ஜோஸ் ரவீன் ரெக்ஸ். திருச்செந்தூரைச் சேர்ந்த இவர், ஒரு பொறியியல் பட்டதாரி. ஹீரோ மோட்டோ கார்ப் மற்றும் ஹோண்டா டூ-வீலர்ஸ் ஆகிய நிறுவனங்களின் சர்வீஸ் சென்டர்களில், தலா 6 மாதம் என மொத்தம் 1 வருடம் டூ-வீலர் சர்வீஸ் துறையில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு இருக்கிறது. கொரோனாவால் மக்களுடன் அவர்களின் வாகனங்களும் வீடுகளில் முடங்கியிருக்கும் இந்தச் சூழலில், அதன் பராமரிப்புக்காக Do It Yourself (DIY டிப்ஸ்) பாணியிலான சில தகவல்களை அவர் நமக்காக வழங்கியிருக்கிறார்.

corona pandemic
corona pandemic
vikatan

கொரோனா... கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் அதிகமாக ஒலித்த ஒரு சொல்! வாகனத்தில் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் இன்ஜினுக்கு, நாம் சிறிது ஓய்வுகொடுப்பது போல... பூமி எனும் நிற்காமல் இயங்கிக்கொண்டிருக்கும் இயந்திரத்தை, ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்தது, இந்த கொரோனாதான் என்றால் அது மிகையல்ல. ஆனால், அதற்காக நாம் கொடுத்திருக்கும் விலை மிக அதிகம். தற்போது, கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் தனது இருப்பை கொரோனா பலப்படுத்திக்கொண்டே இருக்கிறது. ஏறக்குறைய இரண்டு மாதங்கள் கடந்து, எப்போது வெளியே வரப்போகிறோம் எனப் பலர் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கொரோனாவால் உங்கள் வாகனத்தின் ஆயுள் குறையாமல் இருக்க, சில டிப்ஸ்!

கொரோனா மீதுள்ள பயம் ஒருபுறம், வாழ்வாதாரம் குறித்த பயம் மறுபுறம் என இருந்தாலும், இந்த அச்சத்திலிருந்து மீண்டு வெளியே வந்துகொண்டிருக்கிறோம் என்பது நன்மையே. தங்களது வாகனத்தை மறுபடி இயக்கப்போகிறோம் என்ற மகிழ்ச்சி வாகனப் பிரியர்களுக்கு இருந்தாலும், அதன் தற்போதைய நிலை குறித்த கவலை நிச்சயமாக இருக்கும். எனவே, வாகனத்தை எடுத்த உடனேயே, பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து அருகிலுள்ள சர்வீஸ் சென்டர் அல்லது தெரிந்த மெக்கானிக்கிடமோ கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது அனைவருக்கும் பொதுவானதுதான். ஆனால், ஒரே நேரத்தில் அனைவரும் அங்கே சென்றால் நேர விரயம் ஏற்படுவதுடன், தரமான சர்வீஸ் கிடைப்பதும் சந்தேகம்தான். சில இடங்களில் வாகனத் தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கிவிட்டன என்றாலும், டீலர்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்கள் இன்னும் பரவலாகத் திறக்கப்படவில்லை.

Hector SUV
Hector SUV
MG Motors India

ஆகவே, நாம் வீட்டில் இருந்தபடியே, நமக்குத் தெரிந்த சுலபமான முறையில், வாகனத்தைத் தயார் செய்யலாம். அதற்கேற்ப முதலில் சிறிய சிறிய பழுதுகளை நாமே சரிசெய்ய முடியும். மேலும் நம்மில் பலர், அதிக நாள்கள் வாகனத்தை எடுக்காமலேயே இருந்திருப்போம். இவ்வாறு அதிக நாள்கள் கழித்து வாகனத்தை ஸ்டார்ட் செய்யும்போது, நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய சில விஷயங்கள் மற்றும் பிரச்னைகளுக்கான எளிய வழிமுறைகளைப் பற்றி இங்கு காண்போம். இதை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்றும் சொல்லலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

• 1. கார் அல்லது டூ-வீலரை ஸ்டார்ட் செய்வதற்கு முன்பாக, இன்ஜின் ஆயிலின் அளவு மற்றும் மசகுத்தன்மை எப்படி இருக்கிறது என்பதை சரிபார்த்துக்கொள்ளவும். ஏனெனில், அதிக காலம் ஆயில் ஒரே இடத்தில் தேங்கி நின்றிருப்பதால், அது ஜெல் போல இறுகியிருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, ஆயில் டிப் ஸ்டிக்கை வெளியே எடுத்து, ஆயிலின் அளவையும் மசகுத்தன்மையையும் பரிசோதித்துக்கொள்ளலாம். ஆயிலின் அளவோ அல்லது தன்மையோ சரியாக இல்லாதபட்சத்தில், அருகே இருக்கும் மெக்கானிக்கிடம் சென்று இன்ஜின் ஆயிலைப் புதிதாக மாற்றிய பிறகே, வாகனத்தை எடுப்பது நல்லது. இல்லையெனில் இன்ஜினில் உராய்வு அதிகமாகி, இன்ஜின் பாகங்கள் சேதமடைய வாய்ப்புள்ளது.

Tyre Pressure
Tyre Pressure
Autocar India

• 2. வாகனத்தை ஒரே இடத்தில் பல நாள்கள் நிறுத்தி வைத்திருந்தால், டயரின் தன்மையில் மாற்றம் வரலாம். எனவே, அதையும் சரிபார்த்துவிட்டு, டயரில் காற்றழுத்தம் சரியாக உள்ளதா என்பதை உறுதிசெய்யவும். இல்லாவிட்டால், அருகில் உள்ள பெட்ரோல் நிலையங்களுக்குச் சென்று காற்றை நிரப்பிக் கொள்ளுங்கள்.

• 3. ஐந்து நாள்களுக்கு மேலாக டூ-வீலரை ஸ்டார்ட் செய்யவில்லை என்றால், முதலில் வாகனத்தை சிறிது தூரம் நகர்த்த வேண்டும். அவ்வாறு செய்யும்போது, கிக்கர் லிவர் ஜாம் ஆகியிருந்தால் அது சரியாகிவிடும். மேலும், இது அதிக உராய்வுக்கும் உட்படாது. இதற்குப் பிறகு வாகனத்தை செல்ஃப் ஸ்டார்ட் செய்வதைத் தவிர்த்து, கிக் ஸ்டார்ட் செய்ய வேண்டும். ஏனெனில், இந்தச் சூழலில் செல்ஃப் ஸ்டார்ட் செய்வதால், பேட்டரியின் ஆயுள் உடனடியாகக் குறைய வாய்ப்புள்ளது. எனவே, முதலில் கிக் ஸ்டார்ட் செய்வதே நல்லது. இந்த விதி ஸ்கூட்டருக்கும் பொருந்தும் (ஸ்கூட்டரில் கிக்கர் பயன்படுத்துவோர் சொற்பமே).

Battery
Battery
Autocar India

• 4. இப்போது உள்ள பர்ஃபாமன்ஸ் பைக்குகளில், கிக்கர் இருப்பது இல்லை. ஒருவேளை பேட்டரி சார்ஜ் குறைந்து செல்ஃப் எடுக்கவில்லை என்றால், பைக்கை சென்டர் ஸ்டாண்டு போட்டு நிறுத்திவிட்டு, 2-வது அல்லது 3-வது கியரில் வைத்து பைக்கை ஆன் செய்து, பின்பக்க வீலை வேகமாகச் சுற்றினால் இன்ஜின் ஸ்டார்ட் ஆகிவிடும். இதுபோன்ற பைக்குகளில், சென்டர் ஸ்டாண்டும் சில நேரங்களில் இருப்பது இல்லை. எனவே, 2-வது கியரில் வைத்து பைக்கை ஆன் செய்து, கிளட்சைப் பிடித்துக்கொண்டு பைக்கை வேகமாக உருட்ட வேண்டும். அப்போது, கிளட்சை திடீரென விடும் அதே நேரத்தில், ஆக்ஸிலரேட்டரைக் கொஞ்சம் திருகினால், இன்ஜின் ஸ்டார்ட் ஆகிவிடும். இந்த நேரத்தில் நீங்கள் கவனமாகச் செயல்படுவது நலம்.

• 5. கார் அல்லது டூ-வீலர் ஸ்டார்ட் ஆனதும், வேகமாக இன்ஜினை ரெவ் செய்யக்கூடாது. அவ்வாறு செய்யும்போது, இன்ஜினில் உராய்வு அதிகமாக ஏற்பட்டு, இன்ஜின் பாகங்கள் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே, இன்ஜின் ஸ்டார்ட் ஆனவுடன், அப்படியே 5 நிமிடங்கள் ஐடிலிங்கில் விடவும். இந்த நேரத்தில் இன்ஜின் ஆயில் இன்ஜின் முழுவதும் பரவி உராய்வைக் குறைக்கும். அதன் பின்னர், நாம் வாகனத்தை ஓட்டிச்செல்லலாம். தேவைப்படும் அளவு பெட்ரோல் இருப்பு உள்ளதா என்பதையும் செக் செய்யவும்.

Engine Kill Switch
Engine Kill Switch
Honda 2 Wheelers

• 6. வாகனத்தை ஸ்டார்ட் செய்வதற்கு முன்பாக, ஹெட்லைட் - ஹார்ன் - இண்டிகேட்டர் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், இவை பேட்டரியியுடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும். இதனால் பேட்டரியின் சார்ஜ் இறங்க வாய்ப்புள்ளது. தற்போதுள்ள வாகனங்களில், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் (AHO) உள்ளதால், இதை கவனத்தில் கொள்ளவும். DRL கொண்ட வாகனங்களில் இந்தப் பிரச்னை பெரிதாக இல்லை.

மேற்கூறிய அறிவுரைகள் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது என்றாலும், தேவைப்படும் நேரத்தில் அதை நமக்கு உடனடியாகச் செயல்படுத்தத் தோன்றாது. இதையும் தாண்டி உங்கள் வாகனத்தில் பழுதுகள் இருப்பின், அருகில் உள்ள சர்வீஸ் மையம் அல்லது அனுபவம் வாய்ந்த மெக்கானிக்கை அணுகி, வாகனத்தை முழுவதுமாகச் சரிசெய்துகொள்ளுங்கள். இது, மனிதர்களால் தவிர்க்கமுடியாத பொருள் ஆகிவிட்டதால், பிரச்னைகளைக் களைவதற்கேற்ப பணத்தைச் செலவிடத் தயங்க வேண்டாம்.

Body Foam Wash
Body Foam Wash
Vikatan

நெடுந்தூரப் பயணம் மேற்கொள்பவர்கள், வாகனம் அதற்கேற்ற திறனுடன் இருப்பதை உறுதிசெய்த பிறகே பயணத்தை மேற்கொள்ளவும். ஆனால், இன்னும் சிறிது காலத்துக்கு, அத்தியாவசியப் பயணங்களைச் செய்வதே நல்லது. சமூக விலகலைத் தொடர்ந்து கடைப்பிடித்தால், இப்போது வீட்டில் இருந்து வெளியே வர முடிந்ததுபோல, கொரோனா அச்சத்திலிருந்தும் நாம் உறுதியாக மீண்டு வருவோம். விட்டதைப் பிடிக்கும் வகையில், பூமி முன்பைவிட பல மடங்கு வேகமாக இயங்கத் தயாராகிக்கொண்டிருக்கிறது. நாமும் அதனுடன் இணைந்து ஓடத் தயாராவோம். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்!

பயணங்கள் தொடரட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு