Published:Updated:

அண்டை நாடுகளின் நேரடி முதலீட்டுக்குக் கட்டுப்பாடு... இந்திய ஆட்டொமொபைல் துறை என்னாகும்?#VikatanPredictions

மின்சார கார்
மின்சார கார்

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க மின்சார வாகனங்களை அதிகரிக்கவேண்டும் என்ற கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் சமீபத்தில் கடுமையாக்கப்பட்ட நேரடி அந்நிய முதலீடுகளுக்கான விதிமுறைகள் இந்தத் திட்டத்தில் தடையை எற்படுத்துகின்றன.

கொரோனாவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்திய நிறுவனங்களைப் பாதுகாக்கும் நோக்கில் நேரடி வெளிநாட்டு முதலீடுகளைக் கொஞ்சம் கடுமையாக்கியுள்ளது மத்திய அரசு. மத்திய தொழில் மற்றும் வணிகத் துறை, சமீபத்தில் செய்த சட்டத்திருத்தத்தின் படி இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொண்டிருக்கும் அனைத்து நாடுகளின் புதிய முதலீடுகளும், ஏற்கெனவே செய்யப்பட்ட முதலீடுகளின் ஓனர்ஷிப் மாற்றமும் முன்பு போல நேரடியாக மேற்கொள்ள முடியாது.

அரசு பரிசீலித்து அனுமதித்த பிறகே, முதலீடு செய்யமுடியும். ஏற்கெனவே பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் சீனாவில் இருந்து வரும் நேரடி முதலீட்டில் தலையிடுகின்றன. இந்தியாவில் ஏற்கெனவே பாகிஸ்தான் முதலீடுகளுக்கு இப்படி ஒரு நடைமுறை இருக்கும்பட்சத்தில், தற்போது சீனா முதலீடுகளுக்கும் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

முதலீடு செய்யும் நாடுகள்
முதலீடு செய்யும் நாடுகள்
Vikatan Infographics

வங்கி, தகவல் தொழில்நுட்பம், டெலிகாம் என நேரடி வெளிநாட்டு முதலீடுகள் அதிகம் இருக்கும் டாப் 10 துறைகளில் ஆட்டோமொபைல் ஒன்று. இதுநாள் வரை இந்தத் துறையில் இந்த முதலீடுகளை அரசு ஊக்குவித்தே வந்துள்ளது. ஆட்டோமொபைல் துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் அரசு அனுமதியின்றி 100 சதவிகிதம் நேரடியாக முதலீடு செய்யலாம் எனும் நிலையே இதுவரை இருந்து வந்தன. இதனால், பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து இந்தியாவில் காலடி எடுத்துவைத்துள்ளன.

இந்தியாவில் வெளிநாட்டு முதலீடு... மிரள வைக்கும் கறுப்பு - வெள்ளை விளையாட்டு! #LongRead

மார்ச் 2019-ல் மட்டுமே 6,437 கோடி அமெரிக்க டாலர் அளவு நேரடி வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவுக்கு வந்துள்ளன. இதில் சீனாவில் இருந்து மட்டுமே 602 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு நேரடியாக இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து வரும் முதலீடுகள் ஆய்விற்கு உட்படும் எனும் புதிய மாற்றத்தால், இந்தியாவில் ஆட்டோமொபைல் நிறுவனம் தொடங்கவும், உதிரிப்பாக நிறுவனங்கள் தொடங்கவும் காத்திருந்த சீன ஆட்டோமொபைல் நிறுவனங்களின் முதலீடுகள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக தற்போது வளர்ந்துகொண்டிருக்கும் மின்சார வாகனத் துறையில்.

China FDI in Indian Automobile sector
China FDI in Indian Automobile sector

ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரை பெரும்பாலான தொழில்நுட்பங்கள் இந்த முதலீடுகளின் மூலமாகவே இந்தியாவுக்கு வந்துள்ளன. அதிலும் உலகமே மின்சார வாகனங்கள் பக்கம் சென்றுகொண்டிருக்கும் இந்த நேரத்தில் மின்சார வாகனங்களை இந்தியாவில் அதிகப்படுத்த இந்த நேரடி முதலீடுகள் அத்தியாவசியமானதாக இருக்கின்றன. சென்னையில் சீன நிறுவனமான BYD நிறுவனத்தின் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கிவருகிறது. உலக அளவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகம் விற்பனை செய்யும் சீன நிறுவனமான BYD (Build Your Dreams) இந்தியாவில் 300 கோடி ரூபாய் வரை முதலீடு செய்து, பல மாநில அரசுகளுக்கு மின்சாரப் பேருந்துகளை சப்ளை செய்யும் உரிமத்தைப் பெற்றுள்ளது. மத்திய அரசின் FAME மானியமும் இந்த நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது.

உலகளவில் 7 சதவிகித லித்தியம் சுரங்கத்தை வைத்திருக்கும் BYD நிறுவனம், இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. கடந்த ஆண்டுகளில் ஆட்டோமொபைல் துறையில் வந்த நேரடி சீன முதலீடுகள் பெரும்பாலானவை மின்சார வாகனங்கள் சார்ந்த முதலீடுகளே. கடந்த ஆண்டு FAW-BIRD நிறுவனம் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் புதிதாகக் களமிறங்கியது. இதேபோல கிரேட் வால் மோட்டார்ஸ் 7,567.50 கோடி முதலீடு செய்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டில் சீனாவிலிருந்து இந்தியாவின் ஆட்டோமொபைல் துறைக்குத் தோராயமாக 500 கோடி அமெரிக்க டாலர் அளவு முதலீடுகள் வரவேண்டியதாக இருந்தது. கொரோனா மற்றும் புதிய கொள்கை முடிவால் பெரிய முதலீடுகள் வருவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவின் மின்சார வாகனக் கனவை இப்போதைக்குத் தள்ளிப்போடவே செய்யும்.

கொரிய நிறுவனம் ஹூண்டாயின் மின்சார கார்...
கொரிய நிறுவனம் ஹூண்டாயின் மின்சார கார்...

தற்போது இந்தியாவுக்குச் சீனாவிலிருந்து முதலீடுகள் வருவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தாலும், கொரோனா விஷயத்தில் பல நாடுகளுக்குச் சீனாவின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால், ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்த்ரியா, ஜப்பான், UK போன்ற இடங்களிலிருந்து சீனாவுக்குச் செல்லவேண்டிய திட்டங்கள் எல்லாம் இந்தியாவுக்கு மாற்றப்படும். இந்தியாவின் தொழிற்துறையில் மற்ற நாடுகளின் முதலீடுகள் குவியும் என்று கணிக்கிறார்கள் துறை சார்ந்த வல்லுநர்கள்.

டெஸ்லாவை மிஞ்சும் பேட்டரியோடு இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் MPV!
அடுத்த கட்டுரைக்கு