ஏப்ரல் 1, 2020 அன்று அமலுக்கு வந்த BS-6 மாசு விதிகளுக்குப் பெரும்பான்மையான டூவீலர்கள் அப்டேட் ஆகிவிட்டன. ஆனால் கொரோனாவால் சிலவற்றின் அறிமுகம் தள்ளிப் போயிருக்கிறது. ஃப்யூல் இன்ஜெக்டர் & பெரிய Catalytic Converter காரணமாக, BS-4 விட BS-6 டூவீலர்களின் விலை 5,000-15,000 வரை அதிகரித்துவிட்டன. முன்பு எதிர்பார்த்தபடியே சில மாடல்களை மேம்படுத்தாமல், டூவீலர் நிறுவனங்கள் அதன் உற்பத்தியை நிறுத்திவிட்டன. இவற்றின் குறைவான விற்பனையே இதற்கான காரணம் என்றாலும், சில சந்தர்ப்பங்களில் புதிய வெர்ஷன்கள் அதற்குப் பதில் வந்துவிட்டன. எனவே, எண்ட் கார்டு பெற்ற சில ஹீரோ & யமஹா டூவீலர்களைப் பற்றியே இந்தக் கட்டுரை! இதன் முழு வெர்ஷனை, மே 2020 மோட்டார் விகடனில் படிக்கலாம்.
ஹீரோ ப்ளஷர் 100

2006-ம் ஆண்டு களமிறங்கிய ப்ளஷர், ஹோண்டாவின் பழைய 100சிசி ஆக்டிவாவில் இருந்த 102சிசி இன்ஜினைக் கொண்டிருந்தது. போட்டிமிகுந்த இந்திய டூவீலர் சந்தையில் குறிப்பிடத்தக்க வெற்றியைச் சுவைத்த இந்த ஸ்கூட்டருக்கு மாற்றாக, கடந்த ஆண்டில் 110சிசி ப்ளஷர் ப்ளஸ் மாடலை அறிமுகப்படுத்திவிட்டது ஹீரோ. ஸ்கூட்டி போலவே பெண்களுக்காகத் தயாரிக்கப்பட்ட இந்த ஸ்கூட்டர், கொடுக்கும் காசுக்கேற்ற மதிப்பைக் கொண்டிருந்தது. USB பாயின்ட், சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர், ஸ்டோரேஜ் ஸ்பேஸுக்கு லைட், அலாய் வீல்கள் ஆகிய வசதிகள் அதற்கு வலுசேர்க்கின்றன. இந்த ஸ்கூட்டரின் விளம்பரத்தில் வரும் நடிகைகள் (பிரியங்கா சோப்ரா, அலியா பட்) மாறியதைப் போலவே, ப்ளஷரிலும் அவ்வப்போது சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்துகொண்டே இருந்தது ஹீரோ.
ஹீரோ டூயட், மேஸ்ட்ரோ எட்ஜ் (110சிசி மாடல்கள்)

ப்ளஷர் ப்ளஸ் தவிர, மீதமிருந்த 110சிசி ஸ்கூட்டர்களான டூயட் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் ஆகியவற்றின் உற்பத்தியை நிறுத்திவிட்டது ஹீரோ. அநேகமாக 110சிசி மற்றும் 125சிசி மாடல்களுக்கு இடையே இன்ஜினைத் தாண்டி, டிசைன் - வசதிகள் - விலையில் பெரிய வித்தியாசம் இல்லாததே ஒரு காரணமாக இருக்கலாம். 110சிசி செக்மென்ட்டில் ஆக்டிவாவுக்குப் போட்டியாக டூயட்டும் (மெட்டல் பாடி), ஜூபிட்டருக்குப் போட்டியாக மேஸ்ட்ரோ எட்ஜும் (ஃபைபர் பாடி) தலா 2 வேரியன்ட்களில் வெளிவந்தன. போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது லேட்டஸ்ட் வசதிகள் மற்றும் மாடர்ன் டிசைனுடன் இவை இருந்தாலும், இதன் விற்பனையை அதிகரிக்க அவை உதவவில்லை. தனித்தன்மையாக இதில் குறிப்பிட ஏதும் இல்லாததும் மைனஸ்தான்.
யமஹா 110சிசி ஸ்கூட்டர்கள்

ஃபஸினோ (பெண்கள்), ரே மற்றும் ரே-ZR (ஆண்கள்) ஆகிய 110சிசி மாடல்களுக்குப் பதிலாக, அதன் 125சிசி வெர்ஷன்களை அறிமுகப்படுத்திவிட்டது யமஹா. ஆனால் ஆக்டிவா மற்றும் ஜூபிட்டர் ஆகியவற்றுக்குப் போட்டியாகக் களமிறக்கப்பட்ட ஃபேமிலி ஸ்கூட்டரான ஆல்ஃபா, BS-6 விதிக்கு அப்டேட் செய்யப்படவில்லை. குறைவான விற்பனை எண்ணிக்கையே இதற்கான பிரதானமான காரணம். தவிர, தனது விலைக்கேற்றபடியான அம்சங்களை ஆல்ஃபா கொண்டிருக்கவில்லை என்பதும் ஏற்றுக்கொள்ளவேண்டிய விஷயம்தான். இந்த ஸ்கூட்டரில் வந்த அப்டேட்களில், அதைச் செய்யத் தவறிவிட்டது யமஹா. அலாய் வீல்கள், டிஸ்க் பிரேக், டிஜிட்டல் மீட்டர் என விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் வசதிகள் இருந்தன.
யமஹா SZ-RR V2.0

FZ V2.0 பைக்கிலிருந்த 149சிசி இன்ஜினை SZ பைக்கில் பொருத்தி, டிசைனில் கொஞ்சம் மாற்றங்களுடன் வந்ததே SZ-RR V2.0 பைக். இந்த கார்புரேட்டட் இன்ஜின், முன்பைப் போலவே 12bhp பவரையே தந்தாலும், இது ஸ்மூத்னெஸ்ஸில் எகிறியடித்தது. ஆனால் யூனிகார்ன், பல்ஸர், அப்பாச்சி ஆகியவை இந்த யமஹாவைவிடப் பவர்ஃபுல்லாக இருந்தன என்பதுடன், குறைவான விலையில் அதிக வசதிகளையும் கொண்டிருந்தன. SZ பைக் அறிமுகமான போதே அதன் மீது விழுந்த பட்ஜெட் இமேஜ், கடைசி வரை தொடர்ந்ததுதான் முரண். எனவே எந்தக் காலத்திலும் இது விற்பனையில் பட்டாசாக வெடிக்கவில்லை. தவிர குறிப்பிடும்படி SZ-RR V2.0 பைக்கில் எந்த அம்சமும் இல்லை. தவிர கடந்தாண்டில் அமலுக்கு வந்த ஏபிஎஸ்/சிபிஎஸ் விதிகளுக்கு ஏற்ப யமஹா இந்த பைக் மேம்படுத்தப்படாதபோதே, SZ-RR V2.0 பைக்கின் வருங்காலம் எப்படி என்பது புரிந்துவிட்டது. இந்த லட்டைச் சரியாகப் பிடிக்காமல் விட்டுவிட்டது யமஹா!