ஜீப் காம்பஸில் 7 சீட்டர்… விலை குறையும் ரேங்ளர்… 1000 இன்ஜீனியர்களுக்கு வேலை வாய்ப்பு! #FiatChrysler

காம்பஸ் ஓட்டுநர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயம்... ஜீப் காம்பஸில் ஒரு புதிய 7 சீட்டர் மாடலைக் கொண்டு வரவிருக்கிறது ஃபியட் க்ரைஸ்லர்.
ஃபியட் கார்கள் இப்போது இல்லாமல் இருக்கலாம்; ஆனால், ஃபியட் க்ரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் (FCA) நிறுவனத்துக்கு எப்போதுமே ஒரு டிமாண்ட் இருந்து கொண்டே இருக்கும். காரணம், ஃபியட் க்ரைஸ்லருக்கு இருக்கும் பிராண்ட் இமேஜ் மற்றும் தரம். இத்தனைக்கும் ஃபியட் க்ரைஸ்லர் பெயரில் இந்தியாவில் ஓடும் வாகனங்கள் மூன்றே மூன்றுதான். ஜீப் காம்பஸ், ஜீப் ரேங்ளர், கிராண்ட் செரோக்கி.
ஜீப் காம்பஸ் கொஞ்சம் விலை அதிகமான எஸ்யூவிதான். ஆனால், இதன் கட்டுமானமும் ஓட்டுதல் தரமும்தான் இதற்கு ஒரு பெரிய டிமாண்டை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஜீப் காம்பஸ் ஓட்டுபவர்களைக் கேட்டால் இது தெரியும்.


காம்பஸ் ஓட்டுநர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயம்... ஜீப் காம்பஸில் ஒரு புதிய 7 சீட்டர் மாடலைக் கொண்டு வரவிருக்கிறது ஃபியட் க்ரைஸ்லர். அதாவது, 4 மீட்டருக்கு மேல் லக்ஸூரி எஸ்யூவி. இது தவிர, காம்பஸைவிடக் குட்டியாக, ஒரு காம்பேக்ட் எஸ்யூவியும் ஜீப் பெயரில் வரவிருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது 2022 முடிவதற்குள் இந்த எஸ்யூவிகள் இந்தியச் சாலையில் ஓடலாம்.
ஆஃப்ரோடு பிரியர்களுக்கு இன்னும் ஒரு கூடுதல் செய்தியும் உண்டு. ரேங்ளர் ஜீப் வாங்க நினைத்தால், இனிமேல் இறக்குமதி செய்து வாங்க வேண்டியதில்லை. இதையும் உள்ளூரிலேயே அசெம்பிள் செய்து CKD முறையில் தயாரிக்க இருக்கிறது ஃபியட் க்ரைஸ்லர். அமெரிக்காவில் தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ரேங்ளர் ஜீப்பை இந்தியாவில் நீங்கள் ஓட்ட வேண்டுமென்றால், சுமார் 85 லட்சம் முதல் 1 கோடி வரை ஆகும். இனிமேல் ரேங்ளர் ஜீப் உள்ளூர்த் தயாரிப்பு என்பதால், கணிசமான லட்சங்கள் விலை குறையும் வாய்ப்பு உண்டு. கூடவே செரோக்கி எஸ்யூவியை அசெம்பிள் செய்யும் திட்டமும் இருக்கிறதாம் ஃபியட் க்ரைஸ்லரிடம்.
என்ன ஆச்சு FCA-க்கு?
ஆம், மஹாராஷ்ட்ராவில் உள்ள ரஞ்சன்கோன் தொழிற்சாலையில் 250 மில்லியன் டாலர் பணத்தை முதலீடு செய்யவிருக்கிறதாம். கடந்த 5 ஆண்டுகளில் ஏற்கெனவே 450 மில்லியன் டாலரை முதலீடு செய்திருக்கிறது Fiat Chrysler Automobiles. இந்த 250 மில்லியன் என்பது எக்ஸ்ட்ரா. அதாவது மொத்தம் 700 மில்லியன் டாலர். இப்போதைக்கு வெறும் பயணிகள் கார் மார்க்கெட்டில் FCA–க்கு வெறும் 1% தான் மார்க்கெட் ஷேர் இருக்கிறதாம். இனிமேல் இந்தப் பங்கு மதிப்பு கணிசமாக உயரலாம். உள்ளூர்த் தயாரிப்பு என்றால், இன்ஜீனியரிங் ஆப்பரேஷன்களையும் அதிகரிக்க வேண்டும் என்பதால், இந்த ஆண்டில் FCA நிறுவனத்தில் கிட்டத்தட்ட 1,000 இன்ஜீனியர்களுக்கு வேலை வாய்ப்பும் காத்திருக்கிறது என்கிறார்கள்.