Published:Updated:

நிஸானின் கம்பேக்... மேக்னைட்டில் என்னதான் ஸ்பெஷல்?

ஃபர்ஸ்ட் டிரைவ்: நிஸான் மேக்னைட்

பிரீமியம் ஸ்டோரி

தமிழ்

மீபகாலமாக நிஸானுக்குக் கைகொடுக்க, கிக்ஸைத் தவிர வேறு எந்த மாடலும் இல்லை. இந்தக் குறையைப் போக்கத்தான் இப்போது செம புத்திசாலித்தனமாக ஒரு காய் நகர்த்தி இருக்கிறது நிஸான். அது, மேக்னைட். சிறந்த காம்பேக்ட் எஸ்யூவிக்கான போட்டியில் மேக்னைட்தான் முக்கியப் போட்டியாளர். இது பேசப்படுவதற்கு இன்னொரு காரணம், இதன் விலை. அதாவது ஹேட்ச்பேக் வாங்கக் கூடியவர்களைக்கூட மேக்னைட் பக்கம் திரும்ப வைக்கும்படி இதன் விலையை பொசிஷன் செய்ய இருக்கிறது நிஸான். இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும்போது, இதன் எக்ஸ் ஷோரூம் விலையைச் சொல்லியிருக்கும் நிஸான். ஆச்சரியப்படக் காத்திருங்கள். மேக்னைட் ஷோரூம்களுக்கே வராத நிலையில், நம் அலுவலகம் வந்திருந்தது.

பிறகென்ன, மேக்னைட்டில் ஒரு நாள் முழுக்க சென்னை முழுதும் டிரைவ்தான்..

நிஸானின் கம்பேக்... மேக்னைட்டில் என்னதான் ஸ்பெஷல்?

வெளியே…

முதலில் இது ஒரு காம்பேக்ட் எஸ்யூவி இல்லை; க்ராஸ்ஓவர் என்கிறது நிஸான். காரின் டிசைனைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. ரெனோவின் ட்ரைபர் தயாராகும் CMF–A+ மாடுலர் ப்ளாட்ஃபார்மில்தான் மேக்னைட் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆனால், கிரில் - டட்ஸன் கார்களைப் போல் பெரிதாக இருக்கிறது. பூமராங் ஸ்டைல் DRL இருப்பது அழகாகத்தான் இருக்கிறது. ஹெட்லைட்ஸ் டிசைன் செம ஸ்லீக். டாப் வேரியன்ட்டில் Bi-Projector ஹெட்லைட்ஸ் உண்டு. சைடு மிரர்களிலேயே இண்டிகேட்டர், டூயல் டோனில் ரூஃப் பகுதி, LED-ல் ஸ்ப்ளிட் டெயில் லைட்ஸ், பின் பக்கம் ஸ்போர்ட்டியான ஸ்பாய்லர், திக்கான C பில்லர், கறுப்பு நிற பாடி கிளாடிங்குகள், 16 இன்ச் டூயல் டோன் ப்ரெசிஸன் கட் அலாய் வீல்கள், ஸ்கஃப் பிளேட் என எஸ்யூவி பிரியர்களைக் கவர்வதற்காக மெனக்கெட்டிருக்கிறார்கள். ஆனால், பேனல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது மட்டும்தான் நெருடல்.

நிஸானின் கம்பேக்... மேக்னைட்டில் என்னதான் ஸ்பெஷல்?
நிஸானின் கம்பேக்... மேக்னைட்டில் என்னதான் ஸ்பெஷல்?

1.இன்டீரியர் டிசைன், ப்ரீமியம் காருக்கு இணையாக இருக்கிறது. 8 இன்ச் டச் ஸ்க்ரீனுக்குக் கீழே வயர்லெஸ் சார்ஜிங்கும் உண்டு. 2. CVT கியர்பாக்ஸ் நச்சென இருக்கிறது. ஆனால் டர்போவில் பேடில் ஷிஃப்டர்கள் இல்லை. 3. ஏசி வென்ட்கள், லம்போகினி URUS காரை நினைவுபடுத்துகின்றன.

4. அலாய் வீல்கள் நச். ஆனால் வென்யூபோல் பின் பக்கம் டிஸ்க் இல்லை.

இன்டீரியர்

கசகசவெனக் குழப்படியடிக்கவில்லை இன்டீரியர் டிசைன். நச்சென நாலே நாலு நீளமான ஏர் வென்ட்கள். இதைப் பார்க்கும்போது லம்போகினி URUS கார் நினைவுக்கு வந்தது. கீழே அதற்கான கன்ட்ரோல் நாப்கள். அதற்குள் சின்ன டிஜிட்டல் டிஸ்ப்ளே. சென்டர் கன்சோலுக்கு நடுவே ஒரு பெரிய டச் ஸ்க்ரீன். ஸ்டீயரிங் வீலிலும் நறுக்கென சில கன்ட்ரோல்கள்தான். இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரே 7 இன்ச். இதில் TPMS (Tyre Pressure Monitoring System) இருந்தது. க்ளோவ் பாக்ஸ், இந்த செக்மென்ட்டிலயே முதல் முறையாக 10 லிட்டர் இருந்தது. வயர்லெஸ் சார்ஜிங்கும் கொடுத்திருந்தார்கள்.

நிஸானின் கம்பேக்... மேக்னைட்டில் என்னதான் ஸ்பெஷல்?

நிஸானில் 360 டிகிரி கேமரா இல்லாமலா? அதனால், மேக்னைட்டில் பார்க் பண்ண பயப்படவே தேவையில்லை. இதை AVM (Around View Monitor) என்கிறது நிஸான். 8 இன்ச் டச் ஸ்க்ரீனில் ஆண்ட்ராய்டு / ஆப்பிள் கார் ப்ளே, வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம் ஆகிய வசதிகள் உண்டு.. நிஸான் கனெக்ட் வசதி இதில் உண்டு. ஸ்மார்ட் வாட்ச், ஜியோஃபென்சிங், ரோடு சைடு அசிஸ்டன்ஸ் என 50ப்ளஸ் வசதிகள் இதில் கனெக்ட் செய்திருக்கிறார்கள். ஆனால், வென்யூ, சோனெட் அளவுக்கு டச் ஸ்க்ரீன் ரெஸ்பான்ஸ் இல்லை. நெக்ஸான், வென்யூவுக்குப் போட்டியாச்சே… சன்ரூஃப்கூட கொடுத்திருந்தது நிஸான். பின் பக்கம் ஏசி வென்ட் சூப்பர்.

இடவசதி

மேக்னைட்டில் இடவசதி, அடுத்த லெவலில் இருக்கிறது. பின் பக்கம் 6 அடி உள்ளவர்களுக்குக்கூட ஷோல்டர்/லெக்/ஹெட்ரூம் என எல்லா ரூம்களும் தேவைக்கு அதிகமாகவே இருக்கின்றன. இதன் வீல் பேஸ் 2,500 மிமீ. பின் பக்கம் 3–வது நபருக்கான இடமும் நன்றாகவே இருக்கிறது. அட்ஜஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்டும், ஆர்ம்ரெஸ்ட்டும், ரியர் ஏசி வென்ட்களும் சொகுசைக் கூட்டுகின்றன. ஆர்ம்ரெஸ்ட்டில் கப் ஹோல்டருக்குப் பக்கத்தில் பெரிய போன் வைக்கவும் இடம் உண்டு. இங்கே 12V ஸாக்கெட்டுக்குப் பதில் USB சார்ஜிங் வசதி கொடுத்திருந்தால் நன்று!

நிஸானின் கம்பேக்... மேக்னைட்டில் என்னதான் ஸ்பெஷல்?

சீட்கள் எல்லாமே தெலர். முன் சீட்கள் நல்ல சொகுசு. சீட்டிங் பொசிஷன் கொஞ்சம் உயரமாகவே இருக்கிறது. தொடை, தோள்களுக்கான சப்போர்ட்டும் சூப்பர். நமக்கு ஏற்றபடி டிரைவிங் பொசிஷனை அமைத்துக் கொள்ளலாம். இத்தனைக்கும் இதன் ஸ்டீயரிங்கில் ரேக் ஆப்ஷன் மட்டும்தான்; ரீச் வசதி கிடையாது. இதன் பூட் ஸ்பேஸ் 334 லிட்டர். ஒரு டூர் அடிக்க ஓகே!

பெட்ரோலும் டர்போவும்!

இன்ஜினைப் பொருத்தவரை இனி நிஸானில் டீசல் இருக்காது. பெட்ரோல்தான்… அதுவும் டர்போவில்தான் அதிகக் கவனம் செலுத்தும் நிஸான். மேக்னைட்டில் இருப்பது 1.0லிட்டர் HRAO டர்போ பெட்ரோல் இன்ஜின். டர்போ என்றால், மைலேஜில் வெடி வைத்துவிடும் என்றொரு கருத்து உண்டு. அதற்கும் 20 கிமீ அராய் மைலேஜைக் காட்டுகிறது நிஸான். டெஸ்ட் டிரைவின்போது இதன் ரியல் மைலேஜ் தெரிய வரும்.

நிஸானின் கம்பேக்... மேக்னைட்டில் என்னதான் ஸ்பெஷல்?

கூடவே மைலேஜ் பார்ட்டிகளுக்காக இன்னொரு ஆப்ஷனும் உண்டு. ட்ரைபரில் இருக்கும் 72bhp தரும் NA பெட்ரோல் இன்ஜினும் மேக்னைட்டில் உண்டு. இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்தான். 6 ஸ்பீடாவது கொடுத்திருக்கலாம். இதுவே டர்போவில் மேனுவல்/CVT X-Tronic ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் கொடுத்திருந்தார்கள்.

நான் ஓட்டியது CVT கியர்பாக்ஸ். இந்த 1,039 கிலோ எடை கொண்ட மேக்னைட்டை இழுக்க 100 bhp பவர் இருந்தது. 3 சிலிண்டர் சாஃப்ட்டான மவுன்ட் இருப்பதால் கேபினுக்குள் அதிர்வுகள் தெரிந்தன. ஆனால், கார் டேக் ஆஃப் ஆனதும் இன்ஜின் செம ரிஃபைண்டு. ஸ்மூத்தாகப் பறந்தது மேக்னைட். பவர் டெலிவரி அத்தனை லீனியர். த்ராட்டில் ரெஸ்பான்ஸ் ஸ்மார்ட்டாக இருந்தது. அதாவது, டர்போ லேக்கில் சில எஸ்யூவிகள் படுத்துமே… அதுபோல் இல்லை. அட, ஓவர்டேக்கிங்கில்கூட CVT கியர்பாக்ஸ்களுக்கே உரித்தான ரப்பர் பேண்ட் எஃபெக்ட்கூட அவ்வளவாகத் தெரியவில்லை.

பொறுங்கள். இதுவே ஹை ரெவ்வில் ரப்பர் பேண்ட் தெளிவாகத் தெரிந்தது. அதற்கும் ஆப்ஷன் உண்டு. டிரைவிங் மோடு கொடுத்திருந்தார்கள். கியர் லீவரை Sports மோடுக்குத் தள்ளிவிட்டு ஆக்ஸிலரேட்டர் மிதித்தால்… டர்போ வெறித்தனம் காட்டுகிறது. மேனுவல் பார்ட்டிகளுக்குத்தான் ஒரு சோகமான விஷயம் – பேடில் ஷிஃப்டர்கள் இல்லை.

நீண்ட ஸ்ட்ரெட்ச்சில் 0–100 கிமீ–யைக் கடக்க மேக்னைட் 12.8 விநாடிகள் எடுத்துக் கொண்டது. இது வென்யூ டர்போவின் 11.9 விநாடிகளைவிட வேகம் குறைவுதான். ஆனால் இதுவே கிக் டவுன் ஆக்ஸிலரேஷன், அதாவது 20–80kph, 40-100kph போட்டியில் வென்யூவை நெருங்குகிறது CVT மேக்னைட்.

5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸின் 0–100 கிமீ வேகம் – 11.16 விநாடிகள். இது எக்ஸ்யூவி300, எக்கோஸ்போர்ட், வென்யூ மேனுவலைவிட வேகம். 1.0L டர்போ மேனுவலின் டார்க் 16.0kgm. இதுவே ஆட்டோமேட்டிக் மேக்னைட்டில் 15.2kgm. இது 6,000rpm வரை இழுக்கிறது. ஹைஸ்பீடில் CVT–யை மிஸ் செய்தேன். மேனுவல் கியர்பாக்ஸின் செயல்பாடு, இன்னும் கொஞ்சம் ஈஸியாக இருக்க வேண்டும். ஹார்டாக புஷ் செய்ய வேண்டியிருக்கிறது. க்ளட்ச்சும் கொஞ்சம் ஹெவிதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓட்டுதல், கையாளுமை

மேக்னைட்டில் இருப்பது கொஞ்சம் டைட் சஸ்பென்ஷன் செட்–அப். ஹைஸ்பீடில் நிலைத்தன்மையும், எடை அதிகரிக்கும் இதன் ஸ்டீயரிங்கும் நம்பிக்கை தருகிறது. ஹார்டு பிரேக்கிங்குகளில்கூட நெர்வஸ் ஆக விடாமல் பார்த்துக் கொள்கிறது மேக்னைட். கார்னரிங்கில் மட்டும் கொஞ்சம் ஸ்டீயரிங்கில் ஓவர்டைம் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு எஸ்யூவிக்கு இது மிகவும் அவசியம். மேக்னைட் இதில் தவறுகிறது.

இதுவே சிட்டிக்குள் இதன் ஸ்டீயரிங் செயல்பாடு அருமை. திருப்பி ஓட்ட வசதியாக இருக்கிறது. பிரேக்ஸுக்கும் சிட்டிக்கு ஏற்ப ரெடி செய்திருக்கிறார்கள். வென்யூபோல் பின் பக்கம் டிஸ்க் இல்லாமல் இருக்கும்போதே தெரிகிறது. குறைந்த வேகங்களில் மட்டும் செட்டில் ஆக மறுக்கிறது மேக்னைட். பெரிய மேடு பள்ளங்களில் இறக்கி ஏற்றும்போது, சஸ்பென்ஷனில் இருந்து டமார் சத்தம் வருகிறது.

நிஸானின் கம்பேக்... மேக்னைட்டில் என்னதான் ஸ்பெஷல்?

பாதுகாப்பு

பாதுகாப்பிலும் ஓரளவு மேக்னைட் சொல்லியடிக்கிறது. VDC (Vehicle Dynamic Control) - மிகவும் டைட்டான ஏரியாக்களில் சட்டென வளைந்து ஓட்ட வசதியாக இருக்கிறது. வேகமாகப் போகும்போது அலைபாயவில்லை. HAS (Hill Start Assist) – மலைப் பகுதிகளில் கார் கீழே இறங்காமல் இருக்கும். Traction Control – பலவிதமான டெரெய்ன்களில் போகும்போது கார் நமது கன்ட்ரோல் இருக்க உதவி செய்கிறது. Anti Roll bar - வேகங்களில் வளையும்போது கார் அதிகபட்சம் நிலைத்தன்மையை இழக்காமல் பார்த்துக் கொள்கிறது. ஆனால் இரண்டே இரண்டு காற்றுப் பைகள்தான் கொடுத்திருக்கிறது நிஸான்.

முதல் தீர்ப்பு

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஸ்டைலிஷ் ஆன எஸ்யூவியாக ஜொலிக்கிறது மேக்னைட். டைட்டான மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் க்ளட்ச்சைத் தாண்டி மேக்னைட்டில் பெரிய குறை எதுவும் தெரியவில்லை. டர்போவில் பேடில் ஷிஃப்டர்கள் இருந்திருக்கலாம். மேக்னைட்டில் டீசலை எதிர்பார்ப்பவர்களும் இருப்பார்களா என்று தெரியவில்லை. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 205 மிமீ என்பது ஒரு குட்டி ஆஃப்ரோடு செய்ய ஏற்ற அம்சம்.

நிஸான் சொல்லும் விலைதான் - இதன் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சமாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு