Published:Updated:

விலை குறைவு... ஆனால் விலை அதிகம்!

ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்: மஹிந்திரா XUV 3OO BS-6 பெட்ரோல்

பிரீமியம் ஸ்டோரி

ந்தியாவில் தயாராகும் கார்களில் அதிகப்படியான பாதுகாப்பை வழங்குவதாக, சர்வதேச அமைப்பான Global NCAP-ஆல் XUV 3OO அங்கீகரிக்கப்பட்டது நினைவிருக்கலாம். தனது வகையிலேயே விலை அதிகமான மாடல்களில் ஒன்றாக இருக்கும் இந்த காரின் விலைகளை, மஹிந்திரா நிறுவனம் கொஞ்சம் குறைத்துவிட்டது. அதன்படி 4 பெட்ரோல் வேரியன்ட்களின் விலை 17,000-72,000 ரூபாய் வரையும், 4 டீசல் வேரியன்ட்களின் விலை 20,000-39,000 ரூபாய் வரையும் சரிவடைந்துள்ளன. ஆனால் இதற்கிடையே, 3 டீசல் வேரியன்ட்களின் விலைகள் முறையே 1,000 - 10,000 - 20,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளதையும் கவனிக்க வேண்டும். எனவே முன்பைவிடக் கொடுக்கும் காசுக்கேற்ற தயாரிப்பாக வந்திருக்கும் XUV 3OO, BS-6 அப்டேட்டில் ஏதாவது மாறியுள்ளதா? எங்களுக்கு இந்த காம்பேக்ட் எஸ்யூவியின் பெட்ரோல் வெர்ஷனை ஓட்டிப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இதன் டிசைன் மற்றும் வசதிகளில், எந்தவிதமான மாறுதலும் இல்லை.

விலை குறைவு... ஆனால் விலை அதிகம்!

இன்ஜின் பெர்ஃபாமன்ஸ் & ஓட்டுதல் அனுபவம்

பொதுவாகச் சிறிய இன்ஜினைக் கொண்ட BS-6 பெட்ரோல் கார்களில், முன்பிருந்ததைவிடப் பெரிய Catalytic Converter பயன்படுத்தப்படுகிறது. ஆனால் XUV 3OO-ன் BS-6 மாடலில், ஏற்கெனவே இருந்த Catalytic Converter அமைப்பே, சிற்சில முன்னேற்றங்களுடன் தொடர்கிறது. எனவே மொத்தமாகப் பார்த்தால், காரின் பெர்ஃபாமன்ஸில் எந்தச் சரிவும் இல்லை என்பது ப்ளஸ் (110bhp@5,000rpm பவர் - 20kgm@2,000rpm டார்க்). இதனால் BS-4 போலவே இங்கும் 2,200 ஆர்பிஎம்முக்கு மேலே செல்லும்போது, டர்போ சார்ஜர் இயங்கத் தொடங்கிவிடுகிறது. ஆனால் 6,000 ஆர்பிஎம்தான் ரெட்லைன் என்பதுடன், கிட்டத்தட்ட 4,500 ஆர்பிஎம் வரைதான் பவர் டெலிவரி அதிரடியாக இருக்கிறது. இருப்பினும் இந்த 1.2 லிட்டர் - 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், தனது பணியை அமைதியாகச் செய்வது ஆறுதல். 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் ஓகே.

விலை குறைவு... ஆனால் விலை அதிகம்!

எளிதான கன்ட்ரோல்கள் காரணமாக, XUV 3OO காரைக் கையாள்வது சுலபமாகவே உள்ளது (5.3 மீட்டர் டர்னிங் ரேடியஸ்). ஆனால் க்ளட்ச் பெடலின் டிராவல் அதிகமாக இருப்பதால், நெரிசல்மிக்க நகரச்சாலைகளில் செல்லும்போது கவனமாக இருத்தல் நலம். இந்த காம்பேக்ட் எஸ்யூவியின் ஓட்டுதல் அனுபவம், நம் ஊர்ச் சாலைகளுக்கேற்றபடி கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே கரடுமுரடான சாலைகள் தரும் இடர்பாடுகளை, விலை அதிகமான கார் போல இது எளிதாகச் சமாளித்துவிடுகிறது. மேலும் திருப்பங்களில் கார் அலைபாயாமல் செல்வதும் ப்ளஸ். 4 வீல்களுக்கும் டிஸ்க் பிரேக்ஸ் இருப்பதும் வரவேற்கத்தக்க அம்சம் (215/55 சைஸ் டயர்களும்). ஆனால் EPS-க்கு மோடுகள் இருந்துமே, அவை தேவையான ஃபீட்பேக்கை வழங்கவில்லை. வழக்கமான 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் தவிர, ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் இங்கே இல்லாதது பெரிய மைனஸ்.

கேபின் மற்றும் வசதிகள்

கேபினில் அப்படியே ஸாங்யாங் டிவோலியின் வாடை தூக்கலாக அடிக்கிறது. இதனால் தரமான ப்ளாஸ்டிக்ஸ், சிறப்பான ஃபிட் & ஃபினிஷ், நீட்டான டிசைன் ஆகியவை கிடைத்துள்ளது. சொகுசான சீட்கள் மற்றும் எஸ்யூவி போன்ற சீட்டிங் காரணமாக, வெளிச்சாலை தெளிவாகத் தெரிகிறது. அதிக ஹெட்ரூம் - லெக்ரூம் உடன் அகலமான இருக்கைகள் சேரும்போது, பின்பக்கத்தில் 3 பேர் வசதியாக உட்கார முடிகிறது (2,600மிமீ வீல்பேஸ்). இங்கே மூன்று பேருக்கும் ஹெட்ரெஸ்ட் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளதுடன், நடுப்புறத்தில் உட்காருபவருக்கும் 3 பாயின்ட் சீட் பெல்ட் இருப்பது செம. ஆனால் இவ்வளவு பெரிய கேபினில், போதுமான ஸ்டோரேஜ் ஸ்பேஸ்கள் இல்லாதது நெருடல். மேலும் ஹேட்ச்பேக்குகளுக்குச் சமமாக, இந்த காம்பேக்ட் எஸ்யூவியின் பூட் ஸ்பேஸ் வெறும் 257 லிட்டர்தான். தவிர இது உயரமாக உள்ளதால், பொருள்களை வைப்பதும் கடினமாகவே இருக்கிறது. இதனுடன் பின்பக்க சீட்டுக்கு 60:40 ஸ்ப்ளிட் வசதி கொடுக்கப்படாததும் மைனஸ்தான்.

விலை குறைவு... ஆனால் விலை அதிகம்!

பெட்ரோல் XUV 3OO-ன் டாப் வேரியன்ட்டான W8 (O)-ல் ஆண்ட்ராய்டு/ஆப்பிள் கனெக்ட்டிவிட்டி & 6 ஸ்பீக்கர்கள் உடனான 7 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், சன்ரூஃப், கீலெஸ் என்ட்ரி, ரிவர்ஸ் கேமரா, தானாக இயங்கும் வைப்பர்கள் & ஹெட்லைட்ஸ், முன்பக்க/பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், Heated & எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் மிரர்கள், 17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், Leatherette அப்ஹோல்சரி என வசதிகளின் பட்டியல் மிக நீளம். பயணிகளின் பாதுகாப்புக்காக ABS, EBD, TPMS, ESP, 7 காற்றுப்பைகள் (போட்டி கார்களைவிட அதிகம்), டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், சீட் பெல்ட் Reminder, Cornering Brake Control என அதிக வசதிகள் இருப்பது வெரி நைஸ். ஆனால் எந்த வேரியன்ட்டிலுமே ரியர் ஏசி வென்ட்கள் இல்லை என்றாலும், அதற்குப் பதிலாக ப்ரீமியமான டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் ஏசியை வழங்கிவிட்டது மஹிந்திரா. மேலும் இதர காம்பேக்ட் எஸ்யூவிகளில் காணப்படும் வயர்லெஸ் சார்ஜர், வென்ட்டிலேட்டட் சீட்கள், Air Purifier, ஆம்பியன்ட் லைட்டிங், டிஜிட்டல் மீட்டர், கனெக்ட்டட் தொழில்நுட்பம், டிரைவிங் மோடுகள், LED ஹெட்லைட்ஸ், Shark Fin Antenna ஆகியவை இங்கே மிஸ்ஸிங். (இங்கே ஹாலோஜன் ப்ரொஜெக்டர் மட்டுமே!)

முதல் தீர்ப்பு

சுருக்கமாகச் சொல்வதென்றால், விலைக் குறைப்புதான் XUV 3OO மீதான கவர்ச்சியை அதிகரித்திருக்கிறது. என்றாலும், இன்னுமே விலை அதிகம் என்ற இமேஜில் இருந்து இந்த மஹிந்திரா கார் வெளியே வர முடியாதது குறைதான். ஆனால் அதனை நியாயப்படுத்தும்படி பாதுகாப்பு வசதிகள் - ஓட்டுதல் அனுபவம் - சிறப்பம்சங்கள் ஆகியவற்றில் ஈர்த்துவிடுகிறது. இந்த நிறுவனத்தின் லேட்டஸ்ட் தயாரிப்பு என்பதால், ஒட்டுமொத்தத் தரத்திலும் இது அசத்துகிறது.

2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்ட XUV 3OO Sportz வேரியன்ட் விற்பனைக்கு வரும்போது, அதுதான் பவர்ஃபுல்லான பெட்ரோல் காம்பேக்ட் எஸ்யூவியாக ப்ரமோஷன் பெறக் கூடும்! அதில் இருக்கும் 1.2 லிட்டர் T-GDi mStallion இன்ஜின், 120bhp - 23kgm டார்க்கைத் தரும். இதிலும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்தான். கூடவே காரின் உட்புறத்தில் சிவப்பு நிற வேலைப்பாடுகளுடன் கூடிய கறுப்பு நிற கேபின், வெளிப்புறத்தில் Sportz க்ராஃபிக்ஸ் & சிவப்பு நிற பிரேக் கேலிப்பர்கள் இடம் பிடித்துள்ளன. எக்கோஸ்போர்ட்டிலும் இதே இன்ஜின் வரும் என்பது கொசுறுத் தகவல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு