கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

அசர வைக்கிறதா 3rd Gen ஹுண்டாய் i20?

ஹுண்டாய் i20
பிரீமியம் ஸ்டோரி
News
ஹுண்டாய் i20

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஹூண்டாய் i20 - 3rd Gen

சென்னை விமான நிலையத்துக்கு எதிரில் இருக்கும் திரிசூலம் மலையை, விமான நிலையத்தில் இருந்தும், சாலையில் இருந்தும் பலமுறை பார்த்திருக்கிறோம். ஆனால், அதன் மீதிருந்து சென்னையை நாம் பார்க்க வாய்ப்பு கிடைத்ததில்லை. அந்த வாய்ப்பை ஹூண்டாய் புதிதாக லாஞ்ச் செய்திருக்கும் மூன்றாம் தலைமுறை i20 வழங்கியது.

எப்போது பொழியும், எப்போது நிற்கும் என்று தெரியாத நவம்பர் மாத மழைக்கு நடுவே... i20 பெட்ரோல் டர்போ மாடலில் திரிசூல மலையை ஏறினோம். ஆனால் அங்கே இருந்தது முருகன் கை வேலும்; முருகன் கோயிலும். அதைத் தாண்டி இரண்டே இரண்டு வளைவுகள்தான் - போலீஸ் ஒயர்லஸ் டவர் இருக்கிறது போகக்கூடாது என்று தடுத்து விட்டார்கள். பச்சைப் பசேல் என்றிருந்த ஏகாந்தமான மலைப் பாதையில் பல முறை ஏறி இறங்கி, i20-யை விருப்பம்போல டெஸ்ட் டிரைவ் செய்தோம்.

அசர வைக்கிறதா 3rd Gen ஹுண்டாய் i20?
அசர வைக்கிறதா 3rd Gen ஹுண்டாய் i20?
அசர வைக்கிறதா 3rd Gen ஹுண்டாய் i20?

டிசைன்

இந்த இதழில் இடம்பெற்றிருக்கும் டிசைன் தொடரில் சத்தியசீலன் சொல்லியிருப்பதைப்போல... இந்த i20-ன் டிசைன் வேற லெவல். இதற்கு Sensuous Sportiness என்று பெயர் கொடுத்திருக்கிறது ஹூண்டாய். ஏற்கெனவே இருந்த மாடலிலிருந்து முற்றிலுமாக வேறுபட்டதாக இருக்கிறது புதிய i20. காரில் டூயல் டோன் எக்ஸ்டீரியர் மற்றும் கிரில் துவங்கி குவாட்டர் கிளாஸ், அழுத்தமான க்ரீஸ் கோடுகள் என்று எல்லாவற்றிலும் அம்பின் முனையின் வடிவம் வியாபித்திருக்கிறது.

பழைய i20-யைவிட அகலத்திலும் நீளத்திலும் சற்றே அதிகமாகியிருக்கும் இதை இருட்டில் பார்த்தால்கூட i20தான் என்று அடையாளம் சொல்லிவிடலாம். அந்த அளவுக்குத் தனித்துவத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் பக்கவாட்டில் இருக்கும் குவார்ட்டர் கிளாஸ் டிசைன் புத்தம் புதிது. காரின் முன்புறம், பக்கவாட்டுத் தோற்றம் என்று மட்டுமல்ல; பின்புறத்தில் இருந்து பார்த்தாலும் i20 கவர்ச்சியாகவும் தனித்துவத்துடனும் இருக்கிறது.

ஆங்கில அழுத்தான `Z’ வடிவில் இருக்கும் டெயில் லைட்ஸ், Gen Z-யைக் குறிப்பிடுவதைப் போல இருக்கிறது. புதிய K ப்ளாட்ஃபார்மில் தயாராகியிருக்கும் i20-யைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டிருப்பது மேம்படுத்தப்பட்ட ஹை ஸ்டென்சில் ஸ்டீல் என்பதால், இதன் உறுதித்தன்மை அதிகமாகியிருக்கிறது. ஆனாலும் முந்தைய i20-யைவிட சுமார் நூறு கிலோ எடை குறைத்திருக்கிறது.

அசர வைக்கிறதா 3rd Gen ஹுண்டாய் i20?

உள்ளலங்காரம்

கவர்ச்சியான கறுமையின் தாக்கம் அதிகமாக இருக்கும் i20 கேபினைத் திறந்து டிரைவர் சீட்டில் உட்கார்ந்தால்...டேஷ்போர்டு டோர்பேட் என்று நம்மைச் சுற்றிக் கறுப்புக் கோடுகளின் தாக்கம் சற்று தூக்கலாகவே தென்படுகிறது. கறுப்பு லெதர் சீட்டுகளில் இருக்கும் சிகப்பு நிற இரட்டைத் தையல், அடுத்ததாக நம் கவனத்தை ஈர்க்கிறது. இதெல்லாம் ஒருவருக்குப் பிடிப்பதும் பிடிக்காததும் ரசனை சார்ந்த விஷயம். ஆனால் அடிக்கடி பயன்படுத்தும் ஏசி வென்ட், திருகுகள் என்று அனைத்தும் கைக்கு எட்டும் தூரத்தில் வசதியாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

வழக்கமாக i20 என்றால் தரமான உள்ளலங்காரம்தான் முதலில் நினைவுக்கு வரும். இதிலும் அதை எதிர்பார்க்கலாம். ஆனால், க்ளோவ் பாக்ஸ் மூடி போன்ற ஒரு சில இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ப்ளாஸ்டிக்ஸ் இன்னும்கூட தரமானதாக இருந்திருக்கலாம். அதேபோல டோர்பேடுக்கு சாஃப்ட் மெட்டீரியல் கொடுத்திருந்தால், மேலும் ப்ரீமியம் ஃபீல் கிடைத்திருக்கும்.

அசர வைக்கிறதா 3rd Gen ஹுண்டாய் i20?

முந்தைய i20-க்கும் இதற்கும் உள்ள முக்கிய வித்தியாசம், பின்சீட்டுகளில் நன்றாகவே தெரிகிறது. பழைய i20-யைவிட இதன் வீல்பேஸ் பத்தே பத்து மிமீதான் அதிகரித்திருக்கிறது. ஆனால், முன்பைவிடத் தாராளமாக கால்களை நீட்டி மடக்கி உட்கார முடிகிறது. மூன்று பேர் உட்கார்ந்தால்கூட நெருக்கடியாகத் தெரியவில்லை. மூன்றாவது நபர் இல்லை என்றால், கைகளை வைத்துக் கொள்ள ஆர்ம்ரெஸ்ட் உண்டு. ஆனால், அதில் கப் ஹோல்டர் இல்லை. மற்றபடி பின் சீட்டில் இருப்பவர்களுக்குத் தனி ஏசி வென்ட், USB சார்ஜிங் பாய்ன்ட் எல்லாம் உண்டு.

ஆறு காற்றுப்பைகள், ABS, ESC என்று பாதுகாப்புக்கும் இதில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். டயர் ப்ரஷர் மானிட்டர்கூடக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், பாதுகாப்பில் NCAP ரேட்டிங் என்னவென்று தெரியவில்லை.

வசதிக்கான எக்ஸ்ட்ரா உபகரணங்களுக்கு இதன் டாப்-எண்ட் மாடலில் பஞ்சமே இல்லை. சன்ரூஃப் துவங்கி, ஏர் ஃப்யூரிஃபையர், ஆம்பியன்ட் லைட்டிங், டெலிஸ்கோப்பிக் டில்ட் ஸ்டீயரிங், 10.25 இன்ச் டச் ஸ்கீரின், போஸ் சவுண்ட் சிஸ்டம், LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல் என்று சகலமும் உண்டு. இதில் இருக்கும் டிஜிட்டல் க்ளஸ்ட்டர் வெர்னாவில் இருப்பதைப் போலவே இருக்கிறது. லக்கேஜ் ஸ்பேஸ்கூட 311 லிட்டர் என்ற அளவுக்கு அதிகமாகியிருக்கிறது. பெட்டி படுக்கைகளுக்காக மேலும் இடம் தேவைப்பட்டால் பின்சீட்டையே மடக்கிக் கொள்ளலாம். ஆனால், இதை 60:40 என்று ஸ்ப்ளிட் செய்து தனித்தனியாக மடக்க முடியாது.

இன்ஜின்

பெட்ரோல், பெட்ரோல் டர்போ, டீசல் என்று மூன்று இன்ஜின்ஆப்ஷன்கள் i20-ல் உண்டு. யாருக்கு எது வேண்டுமோ, அதை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், டெஸ்ட் டிரைவ் செய்ய நமக்குக் கிடைத்தது பெட்ரோல் டர்போ. டர்போ எப்படி இருக்கிறது என்று சொல்வதற்கு முன்பு, மற்ற இன்ஜின்கள் என்னென்ன என்று மட்டுமாவது சொல்லிவிடலாம்.

5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைந்து செயல்படும், நான்கு சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மேனுவலாக இருந்தால், 83bhp சக்தியைக் கொடுக்கும். இதுவே CVT என்றால் 88 bhp.

இதுவே 6 ஸ்பீடு கியர்பாக்ஸோடு இணைந்து செயல்படும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் என்றால், 100bhp சக்தியை வெளிப்படுத்தும்.

சரி, நமக்குக் கொடுக்கப்பட்ட டர்போவுக்கு வருவோம். இதில் இருப்பது 1.0 லிட்டர் திறன் கொண்ட இன்ஜின். ஆனால் கொடுப்பதோ 120bhp பவர். நாம் ஓட்டியது 7 கியர்கள் கொண்ட டூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக். கூடவே, இதில் iMT உடன் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல்கூட உண்டு.

i20-யை நாம் முதலில் ஓட்டியது போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில்தான். நாம் போகும் வேகத்துக்குத் தகுந்த மாதிரி இதன் கியர் மாறுவதால்... எந்த வேகத்தில் சென்றாலும் போதுமான பவர் சீராகக் கிடைக்கிறது. பாதி த்ராட்டில் கொடுத்தாலே போதுமான பவர் கிடைப்பதுடன், சத்தம் போடாமல் இயங்குகிறது டர்போ இன்ஜின்.

விமான நிலையத்தைத் தாண்டியுள்ள ஜனசந்தடி இல்லாத நெடுஞ்சாலை கொஞ்ச தூரம் கிடைத்தது. அதில் 2,000 ஆர்பிஎம்-மைத் தாண்டி ஓட்டியபோது, மிட்ரேஞ்ச் பவர் உற்சாகத்தைக் கொடுத்தது. ஆனால், கேட்ட மாத்திரத்தில் உடனடியாகச் சக்தியைக் கொடுக்காமல், கொஞ்சம் தாமதமாகத்தான் கொடுக்கிறது. ஸ்போர்ட் மோடில் வைத்து ஓட்டினால், உற்சாகம் மேலும் அதிகமாகிறது. 6,300 ஆர்பிஎம் வரை உருமும் இந்த காரில், மிட்ரேஞ்ச்தான் நம்மைக் கவர்ந்தது. 0-100 கிமீ வேகத்தை 12.56 விநாடிகளில் கடக்கிறது i20. ஆனால், ஹூண்டாய் இது 9.9 விநாடிகளிலேயே சாத்தியம் என்கிறது.

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

டர்போ இன்ஜினில் ஸ்டிஃப்பான சஸ்பென்ஷன் கொடுத்திருக்கிறார்கள் என்றாலும், மேடு பள்ளங்களில் அதிர்வுகள் அவ்வளவாகத் தெரியவில்லை. அதேபோல, தூக்கிப் போடும் தொந்தரவும் இல்லை.

முந்தைய i20-யைவிட இதன் ஸ்டீயரிங் இன்னும் ஸ்மூத்தாகவும் ஷார்ப்பாகவும் இயங்குகிறது. இது நம்மோடு சூப்பராக ஒத்துழைக்கிறது என்றாலும், இது ஓட்டுதலில் ஸ்போர்ட்டினஸை விரும்புகிறவர்களுக்கான கார் இல்லை.

அசர வைக்கிறதா 3rd Gen ஹுண்டாய் i20?

ட்டுமொத்தமாக புது i20, 7.91 லட்சத்தில் (Magna Manual) ஆரம்பித்து 13.66 லட்சம் வரை (Asta O Turbo 7DCT) விலை வரை மேனுவல்/ஆட்டோ என பெட்ரோல் இன்ஜின்களில் கிடைக்கிறது. இதில் டர்போ இன்ஜின் கொண்ட IMT கியர்பாக்ஸ் மாடல் (Sportz) 10.12 லட்சம் முதல் 12.13 (Asta) லட்சம் வரை வருகிறது. DCT எனும் டூயல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் மாடலின் பெட்ரோல் விலை 12.87 லட்சம் முதல் 13.66 லட்சம்.

டீசலுக்கு வருவோம். 9.50 லட்சத்தில் (Magna) ஆரம்பித்து 13.03 லட்சம் வரை (Asta O) கிடைக்கிறது i20 டீசல். முந்தைய i20-யைவிட இது அதிக விலைதான் என்றாலும்... முற்றிலும் புதிய டிசைன், நல்ல மைலேஜ், போதுமான சக்தி, போதும் போதும் என்கிற அளவுக்குக் கூடுதல் உபகரணங்களுக்காகவும் பாதுகாப்புச் சாதனங்களுக்காகவும் இந்த விலை ஓகே என்றுதான் தோன்றுகிறது. அனைத்துக்கும் மேலாக நிரூபிக்கப்பட்ட தரம், நம்பிக்கை, சர்வீஸ், ரீசேல் மதிப்பு என்று பல ப்ளஸ்கள் இதற்கு உண்டு என்பதால், ஹூண்டாய் வாடிக்கையாளர்கள் இதைவிட்டு விலகிப் போக வாய்ப்பில்லை.