Published:Updated:

பிளாட்டினா 100 ES, CT 100, ப்ளஷர் ப்ளஸ்... வருக வருக BS-6 டூ-வீலர்களே!

CT 100
CT 100 ( Bajaj Auto )

ஸ்கூட்டரில் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் பயன்படுத்தப்பட்டிருப்பதால், முன்பைவிட 10% அதிக மைலேஜ் மற்றும் ஆக்ஸிலரேஷன் கிடைக்கும் என ஹீரோ தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் அதிகமாக விற்பனையாகும் டாப்-15 பைக்குகளின் பட்டியலில் தவறாது இடம்பிடிக்கக்கூடியவை பஜாஜ் CT 100 மற்றும் பிளாட்டினா 100. இவற்றின் BS-6 வெர்ஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளது பஜாஜ். இதில் கார்புரேட்டருக்குப் பதிலாக எலெக்ட்ரானிக் இன்ஜெக்‌ஷனை (EI) இந்த நிறுவனம் பயன்படுத்தியுள்ளது (இது ஃப்யூல் இன்ஜெக்‌ஷனாக இருக்கலாம்). இது இன்ஜினை ஸ்மூத்தாக இயங்க வைக்கும் என்பதுடன், குறைவான பராமரிப்பு - அதிக மைலேஜ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் எனவும் பஜாஜ் கூறியுள்ளது.

பிளாட்டினா 100 ES
பிளாட்டினா 100 ES
Bajaj Auto

CT 100 KS மாடலின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை 40,794 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது BS-4 மாடலைவிட 7,501 ரூபாய் அதிகம். ஆனால், இப்போதைக்கு `விலைகுறைவான BS-6 பைக்' என்ற பெருமையை CT 100 KS பெற்றிருக்கிறது; அடுத்தபடியாக பிளாட்டினா 100 KS பைக்கின் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை 47,264 ரூபாயாகும். இது BS-4 மாடலைவிட 6,368 ரூபாய் அதிகம். இதுவே பிளாட்டினா 100 ES பைக்கின் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை 54,797 ரூபாய் எனத் தகவல் வந்துள்ளது. இது BS-4 மாடலைவிட 7,143 ரூபாய் அதிகம்.

CT 100 மாடலின் கிராபிக்ஸ் மற்றும் எக்ஸாஸ்ட் பைப் 110சிசி மாடலில் இருப்பதுபோலவே மாறியிருக்கிறது. மேலும் இன்ஜின், அலாய் வீல்கள், கிராப் ரெயில், ஃபோர்க் ஆகியவற்றுக்கு கறுப்பு நிறம் பூசப்பட்டுள்ளது. மேலும் இன்ஜினின் கீழ்ப்பகுதி அடிபடுவதைத் தடுக்கக்கூடிய Bash Plate பொருத்தப்பட்டிருப்பது செம (CT 110 பைக்கிலும் இது உண்டு). CT 110 பைக்கில் பிளாட்டினா 100 போலவே ஹெட்லைட்டுக்கு மேலே LED DRL வழங்கப்பட்டுள்ளது. பிளாட்டினா 100ES மாடலின் DRL-க்கு மேலே கறுப்பு நிற வைஸர் இருப்பதுடன், ஹெட்லைட்டைச் சுற்றி கறுப்பு நிற வேலைப்பாடு உள்ளது. இதுவே பிளாட்டினா 110 ES மாடலில் டிஸ்கவரில் உள்ள இண்டிகேட்டர்கள் இடம்மாறியிருப்பதுடன், புதிய ரியர் வியூ மிரர்களும் இருக்கின்றன. ஹெட்லைட்டைச் சுற்றி க்ரோம் வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மற்றபடி இந்த BS-6 பைக்குகளின் இன்ஜின் மற்றும் மைலேஜ் பற்றிய விபரங்களை பஜாஜ் இன்னும் வெளியிடவில்லை.

பிளாட்டினா 110 ES
பிளாட்டினா 110 ES
Bajaj Auto

கடந்த ஆண்டு மே மாதத்தில் வெளியான ப்ளஷர் ப்ளஸ் 110சிசி ஸ்கூட்டரின் BS-6 வெர்ஷனைக் களமிறக்கியுள்ளது ஹீரோ. செல்ஃப் ஸ்டார்ட் - Sheet வீல் (54,800 ரூபாய், டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை) மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் - அலாய் வீல் (56,800 ரூபாய், டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை) என இரு வேரியன்ட்களில் வந்திருக்கும் இது, 6,300 ரூபாய் அதிக விலையில் வந்திருக்கிறது. இதில் எதிர்பார்த்தபடியே கார்புரேட்டருக்குப் பதில் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது. 8 சென்சார்களை உள்ளடக்கிய XSens தொழில்நுட்பத்துடன்கூடிய இது, இன்ஜினை ஸ்மூத்தான இயக்கம் - சிறப்பான Cold Start திறனை வழங்கியிருக்கிறது. ஸ்கூட்டரின் டிசைன் மற்றும் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை.

ப்ளஷர் ப்ளஸ்
ப்ளஷர் ப்ளஸ்
Hero Motocorp

ஆனால், ஹெட்லைட்டைச் சுற்றி க்ரோம் ஃபினிஷ், பக்கவாட்டில் 3D லோகோ, முன்பக்க ஏப்ரானில் Fi பேட்ஜ் ஆகியவை புதிது; எக்ஸாஸ்ட் பைப்பும் கொஞ்சம் பல்க்காக மாறியிருக்கிறது. மற்றபடி அதே 110.9சிசி இன்ஜின்தான் என்பதுடன், அது வெளிப்படுத்தும் 8bhp பவர் மற்றும் 0.87kgm டார்க்கிலும் எந்த மாறுதலும் இல்லை. ஆனால் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் பயன்படுத்தப்பட்டிருப்பதால், 10% அதிக மைலேஜ் மற்றும் ஆக்ஸிலரேஷன் கிடைக்கும் என ஹீரோ தெரிவித்துள்ளது. Matt Red, Matt Green, Matt Axis Grey, Glossy Black, Glossy Blue, Glossy White, Glossy Red எனும் 7 கலர் ஆப்ஷன்களில் ப்ளஷர் ப்ளஸ் 110 BS-6 கிடைக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு