Published:Updated:

`BS-4 பைக்குகளை விற்க அவகாசம் தேவை!’ -நீதிமன்றத்தை நாடிய ஹீரோ நிறுவனம் #Corona

ஹீரோ மோட்டோ கார்ப்
ஹீரோ மோட்டோ கார்ப்

ஏப்ரல்-1 முதல் BS-4 வாகனங்களைப் பதிவுசெய்ய இருக்கும் தடையை விலக்கி, இந்த பைக்குகளை விற்பனைசெய்ய அவகாசம் தரும்படி உச்ச நீதிமன்றத்தை அனுகியுள்ளது ஹீரோ மோட்டோ கார்ப்.

மார்ச் 31-ம் தேதிக்குள் அனைத்து BS-4 வாகனங்களையும் விற்பனை செய்ய வேண்டும் என்ற விதியைத் தளர்த்தி, மூன்று மாதம் அவகாசம் தரும்படி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம். COVID-19 வைரஸின் பரவலால் தனது ரீட்டெயில் தொழில் பாதிப்படைந்துள்ளதாகவும், இதனால், பழைய BS-4 வாகனங்களை வேகமாக விற்பனை செய்ய முடியவில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

hero
hero

இந்தியாவின் பெரிய பைக் தயாரிப்பாளராக இருக்கும் ஹீரோ நிறுவனத்திடம் இரண்டு வார இருப்புகள் விற்கப்படாமல் நிலுவையில் உள்ளன. தமது BS-4 பைக்குகளுக்கு ஹீரோ, 18,000 ரூபாய் வரை தள்ளுபடி தந்தாலும்கூட, மக்கள் வெளியே வராத சூழலில் இந்த பைக்குகளை விற்பனை செய்வது சவாலான விஷயமாக மாறியுள்ளது. BS-6 விதிகள் அமலுக்கு வருவதால், ஏப்ரல் 1, 2020-க்குப் பிறகு இந்த பைக்குகளை விற்பனை செய்தாலும் பதிவுசெய்ய முடியாது.

கொரோனா
கொரோனா

இதனால் நேற்று ஹீரோ தரப்பில், ’தங்கள் மனுவை அவசர வழக்காக எடுத்து நடத்த வேண்டும்’ என்ற இன்டர்லோகுடெரி அப்ளிகேஷனைப் பதிவுசெய்துள்ளதாக ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் குறிப்பிட்டிருக்கிறது ஹீரோ. COVID-19 வைரஸ் பரவலை, ’இயற்கைப் பேரழிவு’ என்று எடுத்துக்கொள்ளலாம் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்திருப்பதாகவும் இந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதேபோல, ஆட்டோமொபைல் டீலர்களின் கூட்டமைப்பான FADA, கடந்த வாரம் BS-4 வாகனங்களைப் பதிவு செய்ய இன்னும் நேரம் தேவை என உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டுள்ளது.

ஹீரோ Xpulse 200T
ஹீரோ Xpulse 200T

கடந்த முறை FADA அமைப்பு தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம், ’நேரம் கொடுக்க முடியாது’ என்று கறாராகக் கூறிவிட்டது. இம்முறை கொரோவை எதிர்கொள்ளவேண்டிய சூழல் என்பதால், உச்ச நீதிமன்றம் என்ன முடிவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் டீலர்கள்.

அடுத்த கட்டுரைக்கு