Published:Updated:

ஏரோ டைனமிக் முதல் சர்ஃபேஸ் வரை... டிசைனிங் பயிற்சியில் மாணவர்களைக் கட்டிப்போட்ட சத்தியசீலன்!

Car Design Workshop கார் டிசைனர்
Car Design Workshop கார் டிசைனர்

ஒரு காரை நீங்கள் சின்ன வயசில் வரைந்திருக்கலாம். ஆனால், எப்படி வேண்டுமானாலும் வரையலாம் என்பதைத் தாண்டி, இப்படித்தான் வரைய வேண்டும் என்று சத்தியசீலன் சில ரூல்களைப் பட்டியலிட்டார்.

லாக்டெளன் எல்லோரையும் முடக்கிப்போட்டுவிட்டது. மாணவர்களையும்தான். ஆனாலும், வீட்டில்கூட ஆன்லைன் கிளாஸ் என்று மொபைல் போனுடனும் லேப்டாப்புடனும் பரபரப்பாகவே இருக்கிறார்கள் மாணவர்கள். பள்ளிப் பாடம் சரி; எதிர்காலத்தில் தங்கள் குழந்தைகளின் கரியர் பற்றிய கேள்விக்குறி பெற்றோர் எல்லோருக்குமே இருக்கிறது. டிசைன் துறையில் மாணவர்களுக்கு ஒரு பெரிய கதவு திறந்திருக்கிறது என்பதைச் சொல்லத்தான் மோட்டார் விகடன் டிசைன் வொர்க்ஷாப்பை நடத்துகிறது.

டிசைன் என்பது, இங்கே ஆட்டோமொபைல் துறையில். ஆம், கார் டிசைன் பற்றிய வொர்க்ஷாப்தான் இது. ஒரு காரை எப்படி வரைய செய்ய வேண்டும்; டிசைன் செய்த பிறகு, அந்தக் காரை எப்படி க்ளே மாடலிங் செய்ய வேண்டும்; சாதாரண பேப்பரில் வரைய ஆரம்பிக்கும் ஒரு கார், எப்படிச் சாலையில் ‛வ்வ்வ்ர்ர்ரூம்’ என ஓடுகிறது; அந்த டிசைன் துறையில் மாணவர்கள் எப்படிக் கால் பதிக்கலாம் என்பதைச் சொல்லும் வொர்க்ஷாப்தான் இது.

Car Design August Event
Car Design August Event

அசோக் லேலாண்டில் டிசைன் துறையின் தலைவராகப் பணிபுரியும் சத்தியசீலனின் ஆயா அகாடமியுடன் இணைந்துதான் மோட்டார் விகடன் இந்த வொர்க்ஷாப்பை நடத்தியது. ஏற்கெனவே 10-ம் வகுப்பு மாணவர்கள் முதல், 10 ஆண்டு அனுபவம் வாய்ந்தவர்கள், குடும்பப் பெண்கள், கல்லூரி இளசுகள் வரை எல்லோருக்கும் இந்த வொர்க்ஷாப் நடந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆகஸ்ட் தொடக்கத்தில், மாணவர்களுக்கு மட்டுமே ஸ்பெஷலாக இந்த 2 நாள் கார் டிசைன் வொர்க்ஷாப்பை ஆன்லைனில் வெபினாராக நடத்தியது மோட்டார் விகடன்.

வொர்க்ஷாப் நடத்தத் திட்டமிட்டபோது, ‛‛ஏற்கெனவே ஆன்லைன் கிளாஸ்; இதுல இது வேறயா என்று மாணவர்களுக்குச் சலிப்பு ஏற்பட்டு விடுமோ’’ என்றுதான் பயந்தோம். ஆனால், வீக் எண்டில் லேப்டாப்பும் கையுமாக செம ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள் மாணவர்கள். ‛மாப்ளைக்கு அவ்ளோ வெறி’ என்று ஒரு படத்தில் வரும். அதுபோல், ‛மாணவர்களுக்கு கார் டிசைன் துறையில் அவ்ளோ வெறி’ என்றுதான் நினைக்கத் தோன்றியது. காலையில் தமிழிலும், மாலையில் ஆங்கிலத்திலும் நடந்த இந்த வெபினாரில் 7 நாடுகளில் - 5 வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆன்லைனில் ‛உள்ளேன் ஐயா’ சொன்னார்கள்.

Car Design Workshop
Car Design Workshop

ஒரு காரை நீங்கள் சின்ன வயசில் வரைந்திருக்கலாம். ஆனால், எப்படி வேண்டுமானாலும் வரையலாம் என்பதைத் தாண்டி, இப்படித்தான் வரைய வேண்டும் என்று சத்தியசீலன் சில ரூல்களைப் பட்டியலிட்டார். 'கோல்டன் புரொபோஷன்', 'ரூல் ஆஃப் தேர்டு' என்பதுதான் அது. நாம் பயன்படுத்தும் அழகு பொருள்கள் எல்லாவற்றிலும் 'கோல்டன் புரொபோஷன்'படிதான் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது என்பதை அவர் விவரித்த விதம் அருமை. ஐஸ்வர்யா ராயின் முக அமைப்பு, கடலில் ஏற்படும் ஸ்பைரல் ஸ்டைல் சுழல், செடிகளின் அமைப்பு எல்லாமே தக்க விகிதத்தின்படிதான் அமைந்திருக்கிறது என்று அவர் ரேஷியோபடி விளக்கிக்காட்டியது செம இன்ட்ரஸ்ட்டிங். அதுபோல், கார்களின் சக்கரங்களுக்கு இவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் என்று அவர் சட்டென ஒரு மஸ்டாங் காரை வரைந்து உதாரணம் சொன்னதும் நச்!

வெபினாரில் ‛உங்களுக்குப் பிடித்த மஸில் கார் என்ன’ என்ற கேள்விக்கு… ஃபோர்டு மஸ்டாங், செவர்லே கமேரோ, டாட்ஜ் சார்ஜர், போன்ட்டியாக் இப்படித்தான் வெரைட்டியாகப் பதில் வந்தது மாணவர்களிடமிருந்து. இன்னும் கோயினிக்செக், புகாட்டி என்று ஹைப்பர் கார்களையெல்லாம் பட்டியலிட்டார்கள். அதில் ஒரு மாணவர் மும்பை டிசைனர் திலிப் சாப்ரியாவின் ‛DC அவந்தி கார் வெச்சிருக்கேன்’ என்று சொன்னது, மாணவர்களுக்குள்ள கார் ஆர்வத்தைக் காட்டியது.

முதல் நாள், ஒரு காரை எப்படி வரைய வேண்டும்; எப்படிப்பட்ட பேப்பர்கள் பயன்படுத்த வேண்டும்; எந்த மாதிரி மார்க்கர் பயன்படுத்த வேண்டும்; கை நடுங்காமல் எப்படி வரைய வேண்டும் என்று எளிமையாகச் சொல்லிக் கொடுத்தார் சத்தியசீலன். வெபினார் போலவே இல்லை; வீடியோ, வரைதல் என்று வண்ணமயமாக இருந்தது ஆன்லைன் கிளாஸ்.

இது தவிர, 1 பாயின்ட் பெர்ஸ்பெக்ட்டிவ், 2 பாயின்ட் பெர்ஸ்பெக்ட்டிவ், 3 பாயின்ட் பெர்ஸ்பெக்ட்டிவ், Horizon என்று வரைதலுக்கான இன்னும் சில எளிமையான யுக்திகளையும் சொன்னார் சத்தியசீலன். வெறும் ஒரே ஒரு புள்ளியை மையமாக வைத்து, ஒரு அடுக்குமாடிக் கட்டடம் முதல் ஒரு பென்டிரைவ் வரை எது வேண்டுமானாலும் வரையலாம் என்று சொன்னதோடு, ஒரு ஸ்போர்ட்ஸ் காரை அவர் வரைந்து காட்டியது நிச்சயம் மாணவர்களை நிமிர வைத்திருக்கும்.

Car Design Workshop Online
Car Design Workshop Online

வெபினாரில் மாணவர்களுக்கு அசைன்மென்ட்டும் கொடுக்கப்பட்டன. அதாவது, அவர்களே கேட்டு வாங்கிக் கொண்டார்கள். ஒரு மாணவன், ‛‛சார், கார்களோட ஏரோடைனமிக் பத்திச் சொல்லவே இல்லையே’’ என்று அடுத்த லெவலுக்குத் தாவினான்.

‛‛ஒரு காருக்கு ஏரோ டைனமிக் என்பது மிக முக்கியம்; அதை நாளைய வகுப்பில் பார்க்கலாம்’’ என்று தொடர்கதைபோல் சஸ்பென்ஸ் வைத்து முடிக்கப்பட்டது ஆன்லைன் வகுப்பு.

இரண்டாம் நாள் மாணவர்கள் 10 நிமிடங்கள் முன்னதாகவே ஜூம் செயலியில் லாகின் செய்து, 'உள்ளேன் ஐயா' சொல்லியிருந்தார்கள். சில மாணவர்கள் வந்தவுடனேயே கேள்விகளை ஆரம்பித்துவிட்டார்கள்.

‛‛என்னிடம் சில மாடல் கார்களின் ஸ்கெட்ச்கள் உள்ளன. நானே வரைந்தது. வாட் இஸ் தி புரொஸிஜர் டு க்ளே மாடல் திஸ் புரொஜெக்ட்?’’ என்று ‛வசூல்ராஜா’ படத்தின் மாணவன் மாதிரி கேட்க ஆரம்பித்துவிட்டார் ஒரு மாணவர்.

அதாவது, பேப்பரில் ஸ்கெட்ச்சால் வரையப்பட்ட ஒரு காருக்கு உயிர் கொடுக்கும் அடுத்த ஸ்டேஜ்தான் க்ளே மாடல். மாணவர்களுக்கு க்ளே மாடல் உருவாகும் விதம் பற்றி வீடியோ காட்டப்பட்டது. ஒரு சிற்பி சிலையைச் செதுக்குவதைப்போல் அத்தனை அற்புதமாக காரைச் செதுக்கினார்கள் டிசைனர்கள்.

Design Sketch
Design Sketch

க்ளே மாடலுக்குப் பிறகு சர்ஃபேஸ் என்றொரு இன்ட்ரஸ்ட்டிங்கான கான்செப்ட் பற்றிச் சொன்னார் சத்தியசீலன். Alias எனும் மென்பொருள் மூலம் உருவாக்கப்படும் சர்ஃபேஸ் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காரில் உள்ள லைன்கள் மாறினால்… பெரும் சிக்கலாகி விடும். கூடவே சர்ஃபேஸ் பாக்கெட்ஸ் பற்றியும் தியரியாகப் பாடம் நடத்தப்பட்டது. டிசைனர்களுக்கு என்று மட்டுமில்லை; யாராக இருந்தாலும் ஒரு பொருளை நீங்கள் உருவாக்கினால், அதை நிச்சயம் டாக்குமென்டேஷன் செய்ய மறக்காதீர்கள். இது மாணவர்களுக்குக் கண்டிப்பாகப் பொருந்தும்.

கான்ஃபரன்ஸில் ஃபோர்டு காரின் மஸ்டாங்கைத்தான் உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டார் சத்தியசீலன். பொதுவாக, அமெரிக்க நிறுவனங்களின் கார்களைக் கவனித்திருக்கிறீர்களேயானால், ஒன்றைக் கண்டுபிடிக்கலாம். ஹூட் என்று சொல்லக்கூடிய பானெட் மிக நீளமாக இருக்கும். விபத்தின்போது பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவாக இருக்கும் என்பதைத் தாண்டி, அதில் இன்னொரு சிம்பிள் விஷயமும் அடங்கியிருக்கிறது. அது, அமெரிக்காவின் கலாசாரம். ஆம், நாம் பயன்படுத்தும் ஒரு டிசைனில் நம் கலாசாரம் தெரிய வேண்டும் என்றார் சத்தியசீலன். இந்திய மாடல் கார்களில் அது ரொம்பவே மிஸ்ஸிங் என்று ஆசிரியருக்கு முன்னால், மாணவர்களே ஆதங்கப்பட்டுவிட்டார்கள்.

Clay Model
Clay Model

‛உங்களுக்குப் பிடித்த கார் எது?’ என்று ஆசிரியரைக் கேள்வி கேட்கவும் தவறவில்லை மாணவர்கள். எஸ்யூவிதான் தனது விருப்பம் என்றும், ரேஞ்ச்ரோவர் மாடல்தான் தனக்குப் பிடித்த மாடல் என்று சொன்னார், அசோக் லேலாண்டில் பல வாகனங்களை உருவாக்கும் சீஃப் டிசைனரான சத்தியசீலன்.

கார் என்றில்லை; எது வரைந்தாலும், லைனில்தான் ஆரம்பித்து வரைய வேண்டும் என்று.. ‛3 பாயின்ட் பெர்ஸ்பெக்ட்டிவ்வில் மஸ்டாங் வரையப் போறேன்’ என்று சொல்லி, சில கோடுகளைப் போட்டு, சட்டென ஒரு காரை வரைந்து, அதை கூகுளில் ஸ்கேன் செய்து பார்த்தால்… அட, மஸ்டாங் என்று சொல்லியது கூகுள். மாணவர்கள் ஆன்லைனிலேயே கை தட்டினார்கள்.

மாணவர்களின் ஆர்வத்துக்குப் பஞ்சமே இல்லை. ‛ஒரு டீ பிரேக் விடலாமா’ என்று சத்தியசீலன் கேட்டதற்கு, ‛நோ’ என்றே பதில் வந்தது அனைத்து மாணவர்களிடம் இருந்தும்.

பொதுவாக, காரில் லைன்கள் ஏராளம் உண்டு. பாடி லைன், ஷோல்டர் லைன், பெல்ட் லைன், பேஸ் லைன், கேரக்டர் லைன், A லைன் என்று பல லைன்கள் பற்றிப் பார்த்தது நிச்சயம் மாணவர்களுக்குப் புதுமையாக இருந்திருக்கும்.

கார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு

வீடு வெளிப்பக்கம் மட்டும் ஸ்டைலாக இருந்தால் போதாது; உள்ளேயும் இடவசதியோடு பிராக்டிக்கலாக இருக்க வேண்டும். அதுபோல்தான் காரிலும். வெளிப்பக்கம் மட்டும் காரின் டிசைன் முடிந்துவிடாது. காருக்கு உள்ளேயும் டிசைன் பக்காவாக இருக்க வேண்டும். வீட்டுக்குள் ரூம்கள் இருப்பதுபோல், காருக்குள்ளேயும் ரூம்கள் உண்டு. ஒவ்வொரு பயணிக்கும் ஹெட்ரூம் லெக்ரூம், ஷோல்டர் ரூம் என்று உள்ளேயும் பார்த்துப் பார்த்த வடிவமைக்க வேண்டிய அம்சம் பற்றி விளக்கப்பட்டது.

எல்லாம் ஓகே… மாணவர்கள் டிசைன் துறையில் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்பதற்கான விடை தேடித்தான் எல்லோரும் ஜூம் செயலியில் கண்களை ஜூம் செய்து காத்திருக்கிறார்கள். இதற்கான பதில், அடுத்த வாரம் தொடரப் போகும் வொர்க்ஷாப்பில் தெரியும்.
அடுத்த கட்டுரைக்கு