Published:Updated:

களமிறங்கும் புதிய BS-6 யூனிகார்ன்- என்ன ப்ளஸ்... என்ன மிஸ்ஸிங்? ஓர் அலசல்

யூனிகார்ன் BS-6
யூனிகார்ன் BS-6 ( Honda 2 Wheelers )

பைக்கின் பெயரிலிருந்தே மாற்றம் தொடங்கிவிட்டது. ஆம், முன்பிருந்த CB அடைமொழி இப்போது கிடையாது. மேலும், இன்ஜின் திறனைக் குறிக்கும்படி எந்த நம்பரும் பெயரில் சேர்க்கப்படவில்லை.

யூனிகார்ன்... 2004-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான இந்த பைக், கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் வரை பெரிய மாற்றங்கள் இன்றி விற்பனை செய்யப்பட்டது. தனது முதல் பைக்காக இருந்ததாலோ என்னவோ, இதில் மோனோஷாக் சஸ்பென்ஷனைக் கொடுத்து, போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்தது ஹோண்டா. 2010ல் இதன் மாடர்ன் வெர்ஷனாக வெளிவந்த Dazzler/Trigger மற்றும் 2015-ல் களமிறங்கிய CB யூனிகார்ன் 160 ஆகியவை, இந்த நிறுவனம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. எனவே, 2016-ம் ஆண்டில், BS-4 அவதாரத்தில் இந்த பிரிமியம் கம்யூட்டர் பைக் மீண்டும் நம் நாட்டில் வெளியானது. ஸ்மூத் இன்ஜின், சொகுசுக்குப் பெயர்பெற்ற யூனிகார்னின் 16 ஆண்டுகால வரலாற்றில், இதுவரை 2.5 மில்லியன் பைக்குகள் விற்பனையாகியுள்ளன.

Unicorn BS-6
Unicorn BS-6
Honda 2 Wheelers

இதன் அடிப்படைத் தோற்றம் மற்றும் கலர் ஆப்ஷன்கள் அப்படியே இருந்தாலும், காலப்போக்கில் அலாய் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள், MF பேட்டரி, DC வயரிங், சிங்கிள் சேனல் ஏபிஎஸ், இன்ஜின் கில் ஸ்விட்ச் எனத் தேவையான முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த இடைப்பட்ட காலத்தில், Dazzler/Trigger போலவே CB யூனிகார்ன் 160 சத்தமில்லாமல் போனதைச் சொல்லியாக வேண்டும் (BS-4 அப்டேட் வந்தாலும், ஏபிஎஸ் மற்றும் BS-6 வெர்ஷன் வரவில்லை). ஆனால், தற்போது 96,854 ரூபாய்க்கு (சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை) வெளிவந்திருக்கும் யூனிகார்ன் 160, யூனிகார்ன் 150 மற்றும் CB யூனிகார்ன் 160 கலந்த கலவையாக இருப்பதுதான் ஆச்சர்யம். பல்ஸர் 150 சீரிஸுக்குப் போட்டியாக வந்திருக்கும் இது எப்படி இருக்கிறது?

BS-6 யூனிகார்னில் இருக்கும் மாற்றங்கள் என்ன?

பைக்கின் பெயரில் இருந்தே மாற்றம் தொடங்கிவிட்டது. ஆம், முன்பிருந்த CB அடைமொழி இப்போது கிடையாது. மேலும், இன்ஜின் திறனைக் குறிக்கும்படி எந்த நம்பரும் பெயரில் சேர்க்கப்படவில்லை. ஆனால், டெக்னிக்கல் விவரங்களைப் பார்க்கும்போது, யூனிகார்ன் 160 பைக்கின் Diamond ஃபிரேம் மற்றும் 162.71 சிசி இன்ஜின் ஆகியவை இங்கே இடம்பெயர்ந்திருக்கும் எனத் தோன்றுகிறது. இதனால் 11மி.மீ நீளம் (2,081 மி.மீ) - 1 மி.மீ குறைவான வீல்பேஸ் (1,335மிமீ) - 6 கிலோ எடை குறைந்திருந்தாலும் (140 கிலோ), 3 மி.மீ அதிக உயரம் (1,103 மி.மீ) - 8 மி.மீ அதிக கிரவுண்ட் கிளீயரன்ஸ் (187 மி.மீ) - 24 மி.மீ நீளமான சீட் (715 மி.மீ) எனப் புதிய யூனிகார்னின் அளவுகளில் கணிசமான மாறுதல் இருக்கிறது.

Unicorn BS-6
Unicorn BS-6
Honda 2 Wheelers

ஆனால், சீட் உயரம் (756 மி.மீ), அகலம் (798 மி.மீ), 18 இன்ச் டயர்கள் (முன்: 80/100. பின்: 100/90), பிரேக்ஸ் (முன்: 240 மி.மீ டிஸ்க், பின்: 130 மி.மீ டிரம்), சஸ்பென்ஷன் (முன்: டெலிஸ்கோபிக், பின்: மோனோஷாக்), 13 லிட்டர் பெட்ரோல் டேங்க் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல, BS-4 யூனிகார்னில் 7Ah பேட்டரி இருந்த நிலையில், அது BS-6 யூனிகார்னில் 4Ah பேட்டரியாகச் சுருங்கியுள்ளது.

டிசைன் மற்றும் வசதிகள்

DC Headlight
DC Headlight
Honda 2 Wheelers

CB யூனிகார்ன் 160 சொதப்பிவிட்டதால், ஹிட்டடித்த யூனிகார்னின் BS-6 வெர்ஷனில் எந்த ரிஸ்க்கையும் எடுக்க ஹோண்டா விரும்பவில்லை. எனவே, இன்ஜின் திறன் மாறியிருந்தாலும், பார்த்துப் பழகிய அதே டிசைன்தான் அப்படியே தொடர்கிறது. சிவப்பு, கறுப்பு, கிரே என கலர் ஆப்ஷன்களும் அதேதான். ஆனால், BS-6 மாடலை உற்றுநோக்கும்போது, மூன்று வித்தியாசங்கள் தெரிந்தன. ஹாலோஜன் ஹெட்லைட்டில் உள்ள க்ரோம் வேலைப்பாடு, மாற்றியமைக்கப்பட்ட பக்கவாட்டு பேனல்கள், அனலாக் மீட்டரின் Grey டயல் ஆகியவை அதற்கான உதாரணம்.

Analogue Meter
Analogue Meter
Honda 2 Wheelers

மற்றபடி, HET பின்பக்க டயர், MF பேட்டரி, இன்ஜின் கில் ஸ்விட்ச், DC ஹெட்லைட் எனப் புதிய வசதிகள் எட்டிப்பார்ப்பது பெரிய ப்ளஸ். ஆனால், போட்டி வாகனமான பல்ஸர் 150 சீரிஸில் இருக்கும் டிஜிட்டல் மீட்டர், LED டெயில் லைட், பின்பக்க டிஸ்க் பிரேக், கிராஃபிக்ஸ், ஸ்ப்ளிட் சீட் & கிராப் ரெயில், அகலமான டயர்கள், Open Sprocket, பொசிஷன் லைட் ஆகியவை இல்லாதது மைனஸ்தான்.

இன்ஜின் பர்ஃபாமன்ஸ்

Engine Kill Switch
Engine Kill Switch
Honda 2 Wheelers

CB யூனிகார்ன் 160 பைக்கில் Diamond ஃபிரேமைத் தொடர்ந்து, அதிலிருந்த 162.71சிசி இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணியை, BS-6 யூனிகார்னுக்கு கட் பேஸ்ட் செய்திருக்கிறது ஹோண்டா. இந்த HET இன்ஜின், எதிர்பார்த்தபடியே கார்புரேட்டருக்குப் பதிலாக PGM-Fi சிஸ்டத்தைப் பெற்றுள்ளது. இது, முந்தைய யூனிகார்னுக்குச் சமமான 12.74bhp@7,500rpm பவரையே தந்தாலும், டார்க் விஷயத்தில் முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது (1.4kgm@5,500rpm). 57.3 Bore X 63.1 Stroke என Long Stroke அமைப்பைக் கொண்டுள்ள இந்த சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், ஆரம்பகட்ட மற்றும் மிட் ரேஞ்ச் பர்ஃபாமன்ஸை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டிருப்பது புரிகிறது. இதோடு, குறைவான எடை சேரும்போது, கொஞ்சம் துடிப்பான ஓட்டத்தையும் எதிர்பார்க்கலாம்.

முதல் தீர்ப்பு

Side Panels
Side Panels
Honda 2 Wheelers

சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்ட யூனிகார்ன் BS-4 பைக்கின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை 74 ஆயிரம் ரூபாய். அதைவிட 12,852 ரூபாய் அதிக விலையில் வந்திருக்கிறது, BS-6 யூனிகார்ன். இந்த அதிக விலை உயர்வை நியாயப்படுத்தும் விதமாக, டிசைன் மற்றும் வசதிகளில் பெரிய மாற்றமில்லாதது நெருடல். 3+3 வருட வாரன்ட்டி, ஸ்மூத் இன்ஜின், சொகுசான ஓட்டுதல் ஆகியவை யூனிகார்னின் வாடிக்கையாளர்களைக் கவரும் எனத் தெரிகிறது. ஆனால், பைக்கின் விலையுடன் ஒப்பிட்டால், ஹோண்டாவின் லேட்டஸ்ட் BS-6 வாகனங்களில் இருக்கக்கூடிய சைலன்ட் ஸ்டார்ட், சைடு ஸ்டாண்டு, இன்ஜின் Cut Off ஸ்விட்ச், LED ஹெட்லைட், ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் ஆகியவற்றில் சிலவாவது இங்கே இடம்பெயர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு