Published:Updated:

பெரிய டச் ஸ்க்ரீன், டிஜிட்டல் மீட்டர், LED DRL, புது ஸ்டீயரிங் வீல் - 2019 ரெனோ க்விட் எப்படி?

பார்ப்பதற்கு ஸ்மார்ட்டாக இருந்த க்விட் காரை, இன்னும் ஸ்மார்ட்டாக மாற்றியிருக்கிறது ரெனோ. லேட்டஸ்ட் கார்களில் இருக்கும் ஸ்ப்ளிட் ஹெட்லைட்ஸ், இந்த காரில் இடம்பெற்றிருப்பது செம.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

க்விட் ஃபேஸ்லிஃப்ட்... இந்த காரை மாருதி சுஸுகி நிறுவனம் எஸ்-பிரெஸ்ஸோவை அறிமுகப்படுத்திய அடுத்த நாளிலே விற்பனைக்குக் கொண்டுவந்ததுதான் ஹைலைட். பட்ஜெட் செக்மென்ட்டில் அந்தளவுக்குப் போட்டி வலுத்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு ஸ்பெஷல் எடிஷன்கள், குட்டிக் குட்டி அப்டேட்கள் வந்திருந்தாலும், இதுதான் க்வ்ட்டுக்கு முதல் பேஸ்லிஃப்ட். புதிய டிசைன் தவிர, மேம்படுத்தப்பட்ட கேபின் மற்றும் புதிய வசதிகள் என, காரில் கணிசமான மாற்றங்களைச் செய்திருக்கிறது ரெனோ.

டிசைன்

Kwid Facelift
Kwid Facelift
Autocar India

பார்ப்பதற்கு ஸ்மார்ட்டாக இருந்த க்விட்டை, இன்னும் ஸ்மார்ட்டாக மாற்றியிருக்கிறது ரெனோ. லேட்டஸ்ட் கார்களில் இருக்கும் ஸ்ப்ளிட் ஹெட்லைட்ஸ், இந்த காரில் இடம்பெற்றிருப்பது செம. அதன்படி LED DRL மேலேயும், ஹெட்லைட் கீழேயும் பொருத்தப்பட்டுள்ளன. க்ளைம்பர் மாடலின் பம்பர், ஹெட்லைட், மிரர்கள், ரூஃப் ரெயில்கள் ஆகியவற்றில் இருக்கும் ஆரஞ்ச் நிற வேலைப்பாடுகள் ரசிக்கும்படி அமைந்திருக்கின்றன. மேலும், முன்பைவிடப் பெரிய 165/70 R14 டயர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது, க்விட்டின் மினி எஸ்யூவி லுக்குக்கு வலுசேர்க்கிறது. இதன் வெளிப்பாடாக, காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 4 மிமீ அதிகரித்திருக்கிறது (184மிமீ). பின்பக்க பம்பரில் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் Reflectors மற்றும் டெயில் லைட்டில் உள்ள LED Light Guides, க்விட்டின் பின்பக்கத்தை ஃப்ரெஷ்ஷாகக் காட்டுகின்றன.

க்ளைம்பரின் முன்பக்கத்தைப் போலவே, பின்பக்க பம்பரிலும் ஆரஞ்ச் ஃபினிஷ் உள்ளது. தற்போது அமலுக்கு வந்திருக்கும் க்ராஷ் டெஸ்ட் மற்றும் அடுத்த ஆண்டில் அமலுக்கு வரவிருக்கும் Pedestrian Safety விதிகளுக்கேற்ப காரின் கட்டுமானத்தில் மாற்றங்களைச் செய்திருக்கிறது ரெனோ. இதனால் க்விட்டின் எடை, முன்பைவிட 35-40 கிலோ வரை உயர்ந்திருக்கிறது. இதனால் காரின் அனைத்து வேரியன்ட்களிலும் டிரைவர் காற்றுப்பை, ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைண்டர் ஆகியவை கட்டாயமாக்கப் பட்டிருக்கின்றன. தேவைபட்டால் டாப் வேரியன்ட்களில் பாசஞ்சர் காற்றுப்பை மற்றும் பின்பக்க பவர் விண்டோ ஆகியவற்றை 7,000 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்பது ப்ளஸ்.

Kwid Facelift
Kwid Facelift
Autocar India

கேபின்

ஃபேஸ்லிஃப்ட் என்றாலும், க்விட்டின் இன்டீரியரிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் செய்திருக்கிறது ரெனோ. Perforated லெதர் சுற்றப்பட்ட புதிய ஸ்டீயரிங் வீல், புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் பெரிய 8 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம் (இரண்டுமே டிரைபரில் இருந்துதான் பெறப்பட்டது) ஆகியவை கேபினுக்குப் புதுப்பொலிவைத் தந்திருக்கிறது. டேஷ்போர்டின் தோற்றத்திலும் மாறுதல் தெரிவதுடன், சில கன்ட்ரோல்கள் இடம் மாற்றப்பட்டிருக்கிறது. முந்தைய வெர்ஷனில் இரு க்ளோவ் பாக்ஸ் இருந்த நிலையில், இப்போது அது பெரிய ஒற்றை க்ளோவ் பாக்ஸாக மாறியிருக்கிறது. அந்த இடத்தில் பாசஞ்சர் காற்றுப்பை பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல AMT-க்கான Gear Selector Knob முன்பு சென்டர் கன்சோலில் இருந்தநிலையில், தற்போது அது வழக்கமான இடத்துக்கு வந்துவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், ஏசி கன்ட்ரோல்கள் மற்றும் பவர் விண்டோ ஸ்விட்ச்கள், அப்படியே இடம் மாறியிருக்கின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, கேபினின் வடிவமைப்பு மற்றும் வசதிகளில் முன்னேற்றம் தெரிந்தாலும், பிளாஸ்டிக் தரத்தில் எந்த மாறுதலும் இல்லை. இதில் ரெனோ கவனம் செலுத்தியிருந்தால், இன்டீரியர் முழுமையான உணர்வைத் தந்திருக்கும். இடவசதி மற்றும் சொகுசு அப்படியே தொடர்கின்றன. பழைய மாடலைவிடக் கொஞ்சம் உயரமாக இருக்கும் டிரைவர் சீட்டிலிருந்து வெளிச்சாலை தெளிவாகத் தெரிகிறது. ஆனால், பின்பக்க சீட்டில் இருவர் மட்டுமே வசதியாக உட்கார முடியும் என்பது நெருடல். கிளைம்பரில் கூடுதலாக சென்டர் ஆர்ம் ரெஸ்ட் மற்றும் ஆரஞ்ச் நிற வேலைப்பாடுகள் (டோர் பேடு, டச் ஸ்க்ரீன், கியர் லீவர், சீட் ஃபேப்ரிக், ஃப்ளோர் மேட்) இருப்பது வாவ் ரகம். 14 இன்ச் வீல்களினால், பூட் ஸ்பேஸ் 279 லிட்டராகக் குறைந்திருக்கிறது (முன்பு: 300 லிட்டர்).

Kwid Facelift
Kwid Facelift
Autocar India

இன்ஜின் பர்ஃபாமென்ஸ்

முந்தைய மாடலைவிட அதிக எடை மற்றும் பெரிய வீல் காரணமாக, க்விட்டின் அராய் மைலேஜில் அதிகப்படியான வித்தியாசம் தெரிகிறது. 800சிசி மாடல் 22.30 கிமீ (2.87 கிமீ குறைவு), 1000சிசி மாடலின் மேனுவல் மற்றும் AMT மாடல்கள் முறையே 21.70 கிமீ (1.34 கிமீ குறைவு) மற்றும் 22.50 கிமீ (1.54 கிமீ குறைவு) தருகின்றன. இன்ஜின் இன்னுமே BS-4 விதிகளையே பின்பற்றுவது முரண். ஏனெனில் எஸ்-பிரஸ்ஸோ BS-6 பெட்ரோல் இன்ஜினைக் கொண்டிருப்பதை இங்கே சொல்லியாக வேண்டும். நாங்கள் ஒட்டிய கிளைம்பர் மாடலில் இருந்த 1.0 லிட்டர் இன்ஜின், முன்பைப் போலவே சத்தம் போடுவதுடன், மந்தமான ஆரம்ப கட்ட பவர் டெலிவரியையும் கொண்டிருக்கிறது. காரை விரட்டி ஓட்டும்போது, இந்தக்குறைகள் கொஞ்சம் மறைகிறது. எடை குறைவான கிளட்ச் மற்றும் கியர்பாக்ஸ், பயன்படுத்தச் சிறப்பாக இருக்கிறது.

ஓட்டுதல் அனுபவம்

Kwid Facelift
Kwid Facelift
Autocar India

பழைய வெர்ஷனுடன் ஒப்பிடும்போது, குறைவான வேகத்தில் புதிய மாடலின் ஓட்டுதல் கொஞ்சம் இறுக்கமாக தெரிகிறது. மேலும், கரடுமுரடான சாலைகளில் செல்லும்போது, கார் கொஞ்சம் ஆட்டம் போடுகிறது. இந்த நேரத்தில் சஸ்பென்ஷன் தனது பணியைச் சிறப்பாகச் செய்தாலும், அதை காருக்குள்ளே இருப்பவர்களால் உணரமுடிகிறது. க்விட்டின் குறைவான எடையுடன் ஒப்பிட்டால், அதிக வேகத்தில் காரின் நிலைத்தன்மை அசத்தலாகவே உள்ளது.

பெரிய வீல்கள், திருப்பங்களில் அதிக ரோடு க்ரிப்புக்கு வழிவகுக்கின்றன. குறைவான வேகத்தில் ஸ்டீயரிங் எடை குறைவாக இருந்தாலும், அதிக வேகத்தில் டிரைவருக்குத் தேவையான நம்பிக்கையை அது தரவில்லை. மேலும் இது Self Centering ஆகாததும் மைனஸ்.

Kwid Facelift
Kwid Facelift
Autocar India

முதல் தீர்ப்பு

Kwid Facelift
Kwid Facelift
Autocar India

3.40 - 5.78 லட்ச ரூபாய் எனும் சென்னை ஆன்ரோடு விலையில் களமிறங்கியிருக்கும் க்விட் ஃபேஸ்லிஃப்ட், கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க காராகவே தொடர்கிறது. BS-6 மாடல் வரும்போது, இந்த விலை இன்னும் அதிகரிக்கும் என்பது நிதர்சனம். ஆனால் எப்படிப் பார்த்தாலும், டிசைன் மற்றும் வசதிகளில் முன்னேற்றம் கண்டிருக்கும் க்விட், தனது பலங்களையும் அப்படியே உடன் வைத்திருக்கிறது. ஆனால், இது மாருதி சுஸூகியின் எஸ்-பிரஸ்ஸோவுடன் எப்படிப் போட்டி போடும் என்பதற்கு, காலம்தான் பதில்சொல்லும்.

Kwid Facelift
Kwid Facelift
Autocar India
2.83 லட்சத்தில் `ரெனோ க்விட்’ ஃபேஸ்லிஃப்ட்.... என்ன ஸ்பெஷல்?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு