ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
கார்ஸ்
Published:Updated:

செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் லாரி/ட்ரக் வாங்கும்போது...?

ஹெவி வெஹிக்கிள்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெவி வெஹிக்கிள்ஸ்

டிப்ஸ்: ஹெவி வெஹிக்கிள்ஸ்

செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் லாரி/ட்ரக் வாங்கும்போது...?

போன மாதம் மோட்டார் விகடன் இதழில் இப்படி ஒரு தலைப்பில் ஒரு கட்டுரையே வந்தது.

`முன்பு ஒரு லாரி சைலன்ஸரின் விலை 15,000… இப்போது 4.5 லட்சம்? ஏன்?' - இது ஏன் என உங்களுக்குத் தெரியுமா? நாமக்கல் ஆட்டோ எக்ஸ்போவில் பதில் கிடைத்திருந்திருக்கும்.

பழைய கார் மார்க்கெட்டில் கார் வாங்கும்போது எவ்வளவு விஷயங்களைப் பார்க்கிறோமோ… அதேபோல், செகண்ட் ஹேண்டில் லாரி போன்ற ட்ரக்குகளை வாங்கும்போதும் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அது என்னவென்று பார்க்கலாம்! இந்த மாதம் ஒரு பெரிய லாரியின் இன்ஜினை எப்படிப் பார்த்து வாங்க வேண்டும் என்று பார்க்கலாம்.

கார்/பைக்குகளைவிட பெரிய வாகனங்கள் லாரிகள். கார்/பைக்குகளுக்கே இன்ஜின் செட் ஆகுமா என்று பார்த்துத்தான் வாங்குவோம். அப்படியென்றால், லாரி வாங்கும்போது எத்தனை சூதானமாக இருக்க வேண்டும். அதைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.

இன்ஜின்தான் ஒரு வாகனத்தின் அனைத்திற்குமான முக்கியக் காரணி. வண்டியின் விலையில் பாதி இன்ஜினுக்கே உரித்தானது. முதலில் லாரியில் ஏறியதும், வாகனத்தை ஸ்டார்ட் செய்யுங்கள். கொஞ்ச நேரம் ஐடிலிங்கில் விட்டுப் பார்க்கவும். நண்பர்கள் இருந்தால், அவர்களை எக்ஸாஸ்ட் பக்கமாக நின்று கொள்ளச் சொல்லுங்கள். கொஞ்சம் ஆக்ஸிலரேட்டரை மிதித்து, சோதனை போடுங்கள்.

செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் லாரி/ட்ரக் வாங்கும்போது...?
செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் லாரி/ட்ரக் வாங்கும்போது...?

எந்தக் காரணம் கொண்டும் கறுப்புப் புகையோ வெள்ளைப் புகையோ வண்டியில் தள்ளக்கூடாது. இன்ஜின் மௌன்ட்டாகி இருக்கும் ஸ்பிராக்கெட்டுகள், அதிர்வின்றி ஸ்மூத்தாக ரன்னாக வேண்டும். வண்டியில் தடதடவென உதறல்கள் இருக்கக் கூடாது. அதேபோல் நன்றாக ஆக்ஸிலரேட்டரை மிதித்து விட்டபின், டேஷ்போர்டு அல்லது க்ளஸ்ட்டரில் டெம்பரேச்சர் லைட்; சர்வீஸ் லைட் போன்ற சென்சார் எரர்கள் காண்பிக்கிறதா என்று பாருங்கள்.

 பிறகு கீழே இறங்கி இன்ஜினை நேரடியாக செக் செய்ய வேண்டிய தருணம். இன்ஜின் ஆயில் லெவல் சரியாக இருக்கிறதா; நன்றாக இருக்கிறதா என்று சோதனை போடுங்கள். இதிலேயே இன்ஜின் கண்டிஷனை நாம் அறிந்து கொள்ளலாம். ‘இப்போதாங்க ஆயில் மாற்றினேன்’ என்று உரிமையாளர்கள் சொன்னாலும், ஆயில் கண்டிஷனை செக் செய்யுங்கள்.

 ஆயில் தடித்துக் கறுப்பாக, கொரகொரப்பாக இருந்தால், அதாவது நெய் போல் இருந்தால் கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஆக்ஸிலரேட்டர் மிதித்து ரெவ் ஆகும்போது, எந்தவித இடர்பாடும் இன்றி ஒரே சீராக ரைஸ் ஆகாமல் இருக்கிறதா என்று பாருங்கள். நடுவில் ஏதாவது லேக் தெரிந்தால்.. உடனே உஷாராக வேண்டிய நேரம். அதற்காக மொத்த இன்ஜினுமே காலி என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளக் கூடாது. டீசல் இன்ஜினாக இருந்தால், சில சமயம் நாஸிலிலும் பிரச்னை இருக்கலாம். வண்டி ரெவ் ஆகும்போது, ‘ம்ம்ம்ம்ம்’ என்ற ஹம்மிங் சவுண்ட் தவிர, ‘கரகர’ என்று வித்தியாசமான சப்தங்கள் வந்தால், வல்லுநர்களைத் தொடர்பு கொள்வது சிறப்பு. முக்கால்வாசிப் பேர் இன்ஜினைத்தான் முதலில் செக் செய்வார்கள். எனவே, இன்ஜினை மட்டும் புதிதாக மாற்றி, வாகனத்தை விற்க வாய்ப்புள்ளது. வாகனத்தின் RC புத்தகத்தை வாங்குங்கள். அதில் உள்ள இன்ஜின் நம்பர், வாகனத்தின் இன்ஜினுடன் மேட்ச் ஆனால், பிரச்னையே இல்லை!

 சில பேர், வண்டியை விற்பது என்றாகி விட்டால், நன்றாக சர்வீஸ் செய்து இன்ஜினை வேலை பார்த்து, பக்காவாக விற்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி உள்ள வண்டிகளை எப்படி நாம் கண்டறிவது? இது சற்று சிரமமான காரியம்தான்; ஏனென்றால், இன்ஜின் கண்டிஷன், சர்வீஸ் செய்த பின்பு அருமையாக இருக்கும்.

 ‘இதுவரை இன்ஜின் பிரச்னையே இல்லை; அதனால் வேலை செய்யவே இல்லை’ என்று கூறுவார்கள். நாம் ஓட்டிப் பார்த்தாலும் இன்ஜினில் எந்தவிதமான பிரச்சனைகளும் இருக்காது. ஏனென்றால், தற்போதுதான் சர்வீஸ் சென்டரில் சர்வீஸ் செய்திருப்பார்கள். வண்டியின் கிலோமீட்டரை வைத்து இதுவரை இன்ஜின் சர்வீஸ் செய்திருக்கிறார்களா இல்லையா என்று தோராயமாக நாம் கணக்கிட முடியும். இது வண்டிக்குத் தகுந்ததுபோல் மாறுபடும்.

செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் லாரி/ட்ரக் வாங்கும்போது...?
செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் லாரி/ட்ரக் வாங்கும்போது...?

 சிலர் வெளி மார்க்கெட்டில் சர்வீஸ் விட்டிருப்பார்கள். ‘இதுவரை கம்பெனி சர்வீஸ்தான்; நான் லோக்கலில் சர்வீஸ் பார்த்ததில்லை’ என்று சொல்லி, வண்டி விற்பனையாளர்கள் உங்கள் தலையில் கட்ட வாய்ப்புள்ளது.

 சம்பந்தப்பட்ட வாகனத்தின் கார்ப்பரேட் டீலர்ஷிப்பில் – வண்டி நம்பர், இன்ஜின் நம்பர், சேஸி நம்பரைக் காட்டி, சர்வீஸ் ஷெட்யூல் மற்றும் சர்வீஸ் ஹிஸ்டரிகூடத் தாராளமாக வாங்கிக் கொள்ள மறக்காதீர்கள். இதிலும் நமக்குச் சில பல்புகள் கிடைக்க வாய்ப்புண்டு. எனவே, கவனம் தேவை.

 நாம் பழைய மார்க்கெட்டில் லாரி/ட்ரக் எடுக்கப் போவது உறுதி என்றால், முன்னமே புது வாகனத்தின் விலை, அதனுடைய ஸ்பெசிபிகேஷன்கள் போன்றவற்றை கொட்டேஷன் வாங்கிக் கொண்டு, பின்பு அலசி ஆராயுங்கள். ‘நான் வாங்கப் போறது பழைய வண்டி; புது வண்டியோட கொட்டேஷன் எதுக்கு’ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இதில் மறைமுகமாக பல நல்ல விஷயங்கள் உண்டு. காரணம், இதன் மூலம் நீங்கள் பழைய வாகனத்தின் விலையைப் பேரம் பேசலாம்; இன்ஜின் விவரங்களைச் சரி செய்து கொள்ளலாம்; அதைத் தாண்டி, டீலர்ஷிப்பில் உள்ள விற்பனையாளர்களின் தொடர்பு கிடைத்தால் நமக்கு நல்லதுதானே! அவர்களே சில நேரங்களில் நமக்குப் பழைய மார்க்கெட்டில் வாகனங்கள் வாங்க உதவலாம். அதுக்கும் மேலே, எதிர்காலத்தில் நமது வாகனத்தைப் பழைய மார்க்கெட்டில் விற்கவும் உதவும். இது கார்களுக்கும் பொருந்தும் என்றால் நம்புவீர்களா? இப்படி எனக்கே சில நல்ல அனுபவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

 நீங்கள் என்னதான் எக்ஸ்பெர்ட்டாக இருந்தாலும், ஒரு மெக்கானிக்கை உடன் அழைத்துச் செல்வது சாலச் சிறந்தது. இன்ஜினைப் பார்த்தால் போதுமா… லாரி வாங்கும்போது வேறு எதுவும் கவனிக்கத் தேவையில்லையா என்றால்… உண்டு! வாகனத்தின் இன்ன பிற பாகங்களை எப்படி அலசி ஆராய்ந்து, நல்லதோர் வாகனத்தை நண்பனாக்கிக் கொள்வது எப்படி என்பதை நான் அடுத்த இதழில் கூறுகிறேன்!

(தொடரும்)

- சிரஞ்சீவி ராஜமோகன் (அசோக் லேலாண்ட் சர்வீஸ் இன்ஜீனியர், கும்பகோணம்)