Election bannerElection banner
Published:Updated:

கார்/பைக் வெச்சிருக்கீங்களா... மழைக்காலத்தில் சிக்கல்களை சமாளிப்பது எப்படி?!

Automobiles usage after Nivar Cyclone
Automobiles usage after Nivar Cyclone

புயல் மழையில் வாகனங்களைக் கையாள்வதற்கு, பார்க் செய்வதற்கு, டிரைவ் செய்வதற்கு என்று சில விதிமுறைகள் இருக்கின்றன.

சாதா தூறலை வேண்டுமானால், ரசித்து கவிதையெல்லாம் எழுதலாம். வெள்ளமாக உருவெடுத்து கரைபுரண்டு ஓடும் பெருமழையில் கவனமாகத்தான் இருக்க வேண்டும். வாகன விஷயங்களில் வெள்ளத்திடம் இரக்கத்தை எதிர்பார்க்க முடியாது. கார்/பைக் உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. இந்த புயல் மழையில் வாகனங்களைக் கையாள்வதற்கு, பார்க் செய்வதற்கு, டிரைவ் செய்வதற்கு என்று சில விதிமுறைகள் இருக்கின்றன. அது என்னவென்று பார்க்கலாம்.

1. காராக இருந்தாலும், பைக்காக இருந்தாலும் வாகனங்களை பார்க் செய்வதிலேயே நமக்குள் இருக்கும் ‘அலெர்ட் ஆறுமுகம்’ விழித்துக்கொள்ள வேண்டும். வெயில் என்றால், மரங்களுக்குக் கீழ் பார்க்கிங் ஓகே. இதுவே மழை, புயல் நேரங்களில் மரங்கள்தான் வாகனங்களுக்கு வில்லன். மரக்கொம்புகள் விழுந்து கார் டேமேஜ் ஆனால், இன்ஷூரன்ஸ் கம்பெனியைத் தேடி ஓட வேண்டியிருக்கும்.

Automobiles usage after Nivar Cyclone
Automobiles usage after Nivar Cyclone

2. பைக்காக இருக்கும்பட்சத்தில், சைடு ஸ்டாண்ட் போட்டே வைத்திருக்காதீர்கள். வலது பக்க ஹேண்டில்பார் வழியாக மழை நீர் கீழிறங்கி, கார்புரேட்டர் – மழை நீர் சேகரிப்புத் தொட்டியாகி விடும். Fi இன்ஜின் பைக்குகளிலும் இது ஃப்யூல் டேங்க் ஃப்ளோட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். பேட்டரியின் டெர்மினல்களும் நிலைகுலைந்து, சீக்கிரமே ஆயுள் இழக்கும் அபாயமும் உண்டு. வெயில் காலங்களில்கூட, சென்டர் ஸ்டாண்ட்தான் சிறந்த தீர்வு.

3. கெட்டிக் கிடக்கும் நீரில் வாகனங்களைச் செலுத்தும்போது, வேறு எந்தச் சிந்தனையும் இருக்கக் கூடாது. இடையூறுகள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு, முதல் கியரிலேயே செலுத்தி ஆக்ஸிலரேஷனை பொறுமையாக விட வேண்டும். ஆக்ஸிலரேஷன் விஷயத்தில் ஜென்டில்மேனாக நடக்க வேண்டும். சீரான ஆக்ஸிலரேஷன் கிடைக்கும் பட்சத்தில், தண்ணீர் சைலன்ஸருக்குள் புக வாய்ப்பு குறைவு.

4. சில பைக்குகளில் பெட்ரோல் டேங்க் வழியாகவும் தண்ணீர் இறங்கும் அபாயம் உண்டு. ஆனால், இது உங்களுக்குத் தெரியாமலே நடக்கும் என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம். பைக்கில் ஸ்டார்ட்டிங் பிரச்னை வரும்போதுதான் இதைக் கவனிக்க நேரும். மொத்தமாக டேங்க்கில் உள்ள பெட்ரோலையும் சேர்த்து டிரெய்ன் செய்ய வேண்டும். பண விரயம், நேர விரயம். எனவே, பெட்ரோல் டேங்க்குக்குக் கையோடு கவர் மாட்டுங்கள்.

Automobiles usage after Nivar Cyclone
Automobiles usage after Nivar Cyclone

5. சென்னை சாலைகளில் பயணிக்கும்போது, உங்களை அறியாமலே ஒரு பெரும்பள்ளத்தில் பைக்கை இறக்கி பேலன்ஸை இழந்து பைக் சாயலாம். அந்த நேரத்தில் பைக் உடனேயே ஸ்டார்ட் ஆகாது. ஆக்ஸிலரேட்டரைப் போட்டு திருகு திருகு எனத் திருகாமல், செல்ஃப் ஸ்டார்ட்டைப் படுத்தி எடுக்காமல், சூடாய் ஒரு இஞ்சி டீ அடியுங்கள். வலது பக்கம் பைக் சாய்ந்தால் வேக்யூம் லாக் ஆகியிருக்கும். இதனால், பைக் உடனே ஸ்டார்ட் ஆகாது. ஒரு நிமிடம் கழித்து தானாகவே பைக் ஸ்டார்ட் ஆகும். ஏர் லாக் இருக்கலாம். பெட்ரோல் டேங்க் மூடியை சில விநாடிகள் திறந்துவிட்டு மூடினால் ஏர் லாக் பிரச்னை தீரும். இது வெயில் காலத்துக்கும் பொருந்தும்!

6. உங்களுக்கு ஹைட்ரோ ப்ளானிங் பற்றித் தெரியுமா? கார்/பைக் டயர்கள் சாலையில் படாமல் மழை நீரில் வழுக்கிக் கொண்டு போவதுதான் ஹைட்ரோ ப்ளானிங். ஈரமான சாலைகளில் வாகனங்களை மெதுவாக ஓட்டினாலே இந்த ஹைட்ரோ ப்ளானிங் பிரச்னையைத் தவிர்த்து விடலாம். கார் எடை குறைந்ததுபோலவும், ஸ்டீயரிங் லைட்டாகவும் இருந்தால், நீங்கள் தண்ணீரில் மிதக்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் ஃப்ரன்ட் வீல் டிரைவ் காரில் பயணிக்கிறீர்கள் என்றால், எந்தப் பக்கமாக கார் வழுக்கிக் கொண்டு திரும்புகிறதோ, அதே பக்கம் ஸ்டீயரிங்கை லேசாகத் திருப்பி ஆக்ஸிலரேட்டரை மிதமாக ரிலீஸ் செய்ய வேண்டும். இதுவே ரியர் வீல் டிரைவ் கார் என்றால், வழுக்கும் திசைக்கு எதிர்ப்பக்கமாக ஸ்டீயரிங்கை லேசாகத் திருப்பி மிதமான ஆக்ஸிலரேஷன் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தால், ஹைட்ரோ ப்ளானிங்கில் இருந்து தப்பித்து விடலாம். அதேபோல், மழையில் ஹைவே டிரைவிங்கில் கார்களில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி வேண்டாம்!

Automobiles usage after Nivar Cyclone
Automobiles usage after Nivar Cyclone

7. என்னதான் ஏபிஎஸ், டிஸ்க் என இருந்தாலும், ஈரமான சாலைகளில் பிரேக் பிடிக்கும்போது ஸ்கேட்டிங் நடக்கத்தான் செய்யும். அதேபோல் வேகமும் வேண்டாம்; சடர்ன் பிரேக்கும் நிச்சயம் வேண்டாம். மழை நேரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பிரேக்குகள்தான். பிரேக் பிடிக்கும் ஒவ்வொரு முறையும் பிரேக் ஷூ தேய்ந்து தூசாக மாறி, பிரேக் டிரம்மிலேயே தங்கிவிடும். மழை நீர் சேரும்போது, பேஸ்ட் போல மாறிவிடும். டிஸ்க் என்றால் இன்னும் சிக்கல். கேலிப்பர் மற்றும் பிரேக் பேடுகளில் லேயர் உருவாகி விடும். இதில் பிரேக் ஃபெயிலியர் ஆக வாய்ப்பு அதிகம்.

8. மழை நேரங்களில் விண்ட்ஷீல்டில் பனி படர்ந்து வெளிச்சாலை தெரியாது. இதில் இரவு நேரம் என்றால், ஹை பீம் தொந்தரவுகள் வேறு கண்ணைக் கூசும். டீஃபாகர் உள்ள கார்களில் பிரச்னை இருக்காது. சாதாரண கார்களில் நிறைய பேர் இந்தத் தொந்தரவுக்கு ஆளாவார்கள். ஏர் வென்ட்டுகளை மேல்நோக்கி வைத்துவிட்டு, வெறும் புளோயரை மட்டும் ஓட விட்டு, ‘ஃப்ரெஷ் ஏர்இன்டேக் மோடு’–ஐ ஆன் செய்யுங்கள். பனி சட்டென மறையும். (சிலர் ரீ–சர்க்குலேட் மோடில் வைத்து பனி போகமாட்டேங்குதே என்று குறைப்படுவார்கள்.)

9. எலெக்ட்ரிக்கல் சிஸ்டம்தான் மழைக்காலத்தில் வாகனங்களின் மிகப்பெரிய எதிரி. உள்ளேயும் சரி, பானெட்டிலும் சரி, வொயர்கள் வெளியே தெரிந்தால் ஆபத்துதான். அதேபோல், தண்ணீர் ஏரியாக்களில் காரை ஐடிலிங்கில் விட்டு ஏசி ஆன் செய்து நீண்ட நேரம் இருப்பது தவறு. போன வெள்ளத்தில் நடந்த சம்பவம் இது. வெள்ளத்தில் சிக்கிய ஒருவர், கீழே இறங்க வழியில்லாமல் காருக்குள்ளேயே ஏசியை ஆன் செய்து தூங்கியிருக்கிறார். எலெக்ட்ரிக்கல் சிஸ்டத்தில் ஸ்பார்க் ஏற்பட்டு, கார் எரிந்து போன அசம்பாவிதம் நடந்து ஸ்பாட்டிலேயே உயிரிழந்தார். எலெக்ட்ரிக்கல் அசெம்பிளியை அசால்ட்டாக நினைக்காதீர்கள்.

10. மழை முடிந்திருக்கும். ஆனால், பைக்கின் பின் பக்கத்திலிருந்து ‘கரகர’வென ஒரு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். பைக் ஓட்டும்போது இது எரிச்சல்தானே! அது, நிச்சயம் செயின் ஸ்ப்ராக்கெட்டில் இருந்து வரலாம். (இது செயின் கார்டு இல்லாத பைக்குகளுக்குத்தான் பொருந்தும்.) மழை நீரில் பயன்படுத்திவிட்டு, ஈரம் காய்ந்ததும் தூசி படிந்து அது தன் வேலையைக் காட்ட ஆரம்பிக்கும். அதனால், செயின் ஸ்ப்ரே அடித்துவிட்டு, சத்தமில்லா பயணத்தைத் தொடரலாம்!

Automobiles usage after Nivar Cyclone
Automobiles usage after Nivar Cyclone

11. பூமி தொடாத மழை நீர்தான் உலகின் சுத்தமான விஷயம். ஆனால், அது பார்க் செய்யப்பட்ட காரின் விண்ட்ஷீல்டுக்கு வந்து விழும்போது, கெமிக்கல் கன்டென்ட்/உப்பு என எல்லாமே நமக்கே தெரியாமல் நம் காரில் கலந்து விழும். பறவைகளின் எச்சமும் அதில் சேர்ந்திருந்தால், உடனே ஒரு பாட்டில் நல்ல தண்ணீர் கொண்டாவது கழுவி விடுங்கள். நாட்கணக்கில் ஆனால், சர்வீஸில் பெயின்ட் ஷாப் ஆட்களுக்கே இதைச் சரி செய்வது கஷ்டம். காருக்கு எப்போதுமே பாடி கவர் அவசியம். அதிலும் காரைக் காதலிப்பவர்களுக்கு UV Protected Body Cover – ஐ ரெக்கமண்ட் செய்கிறோம். கொஞ்சம் விலை அதிகம். ஆனால் இது மழை நீர், வெயில் எல்லாவற்றில் இருந்தும் பாதுகாக்கும்.

12. ஸ்டார்ட்டிங் டிரபுளுக்கு உற்ற நண்பனே ஸ்பார்க் பிளக்தான். மழை நேரங்களில் பைக் ஓடும்போது, குளிரும் வெப்பமும் சேர்ந்து ஸ்பார்க் பிளக்கின் தன்மைக்கு எதிராக மோதிப் பார்க்கும். சில பிளக்குகளில் பாயின்ட்கள் தேய்ந்திருக்கும் பட்சத்தில் ஸ்டார்ட் ஆகாது. இந்த நேரத்தில் புதுசை மாட்டிவிட்டுப் பறக்கலாம். எனவே, ஸ்பார்க் பிளக் கைவசம் இருந்தால் நல்லது. இது BS-4 கார்புரேட்டர் இன்ஜின் கொண்ட பைக்குகளுக்குத்தான் பொருந்தும். BS-6 Fi இன்ஜின்களுக்குப் பிரச்னை இல்லை.

13. ரெயின் கோட், ஹெல்மெட் எல்லாம் போட்டு உடம்பை ஃபுல்கவர் செய்வது எல்லாம் ஓகே! மழையில் பைக்கில் செல்லும்போது, உங்கள் ஹெல்மெட்டின் வைஸர், பார்வைக் குறைபாட்டை நிச்சயம் ஏற்படுத்தும். விண்ட்ஷீல்டில் வைப்பர் பயன்படுத்தாமல், உங்களால் மழையில் கார் ஓட்ட முடியுமா? அதே கதைதான் ஹெல்மெட்டுக்கும். ஹெல்மெட் வைஸரின் மேல் மழைத்துளிகள் விழுந்து, திட்டுத் திட்டாகத் தெரியும்போது, சாலை அரைகுறையாகத்தான் தெரியும். இரவு நேரங்களில் இது ரொம்பவும் ஆபத்து. எனவே, வைஸரை ஏற்றிவிடுங்கள். மழை நீரை முகத்தில் வாங்கி, குறைவான வேகத்தில் போனால் தப்பில்லை. அதேபோல், கார்களைப் பொருத்தவரை மழைதான் சுத்தப்படுத்திடுச்சே என்று உடனே வைப்பரை ஆன் செய்யாதீர்கள். விண்ட்ஷீல்டைத் துடைத்துவிட்டு ஆன் செய்யுங்கள். ஸ்க்ராட்ச்கள், வைப்பர் பிளேடு ஃபெயிலியர் போன்றவற்றைத் தவிர்க்கலாம். அதேபோல், காரை ஸ்டார்ட் செய்த பிறகுதான் வைப்பரை ஆன் செய்ய வேண்டும். இல்லையென்றால், வைப்பர் மோட்டார் காலியாக வாய்ப்புண்டு.

Automobiles usage after Nivar Cyclone
Automobiles usage after Nivar Cyclone

14. சாதாரண நேரங்களிலேயே சில பைக்குகளில் கிரிப் கிடைக்காது. காரணம், தேய்ந்து போன டயர்களாக இருக்கலாம். மழைக் காலம் வருவதற்கு முன்பே உங்கள் டயர்கள் எந்தளவு தேய்ந்திருக்கிறது என்பதைச் சோதனையிடுங்கள். காற்றும் சரியான அளவில் இருப்பது அவசியம். டயரில் பட்டன்கள் தேய்ந்திருந்தால், பள்ளங்களில் ஸ்லிப் ஆவது நிச்சயம். டயர்கள் நன்றாக இருக்கிறதா என்பதை ஒரு 5 ரூபாய் நாணயம் வைத்து செக் செய்யலாம். நாணயத்தை டயர்களின் த்ரெட்டுக்குள் நுழையுங்கள். நாணயம் நன்றாக உள்ளே போனால், டயர் நன்றாக இருக்கிறது. த்ரெட்கள் தேய்ந்திருந்தால், புதிய டயர் மாற்றி மழையில் ஓட்டிப் பாருங்கள்; அத்தனை தன்னம்பிக்கை கிடைக்கும்.

15. மழை வெள்ளத்தில் சைலன்ஸர் அளவு மூழ்கிய கார்/பைக்குகளை மறந்து போய்க்கூட ஸ்டார்ட் செய்து விடாதீர்கள். யோசிக்காமல் சர்வீஸுக்கு போன் செய்து விடுங்கள். பயணத்தை நிம்மதியாகத் தொடருங்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு