Published:Updated:

ஹூண்டாய் க்ரெட்டா VS கியா செல்ட்டோஸ்: வெல்லப்போவது யார்?

Creta VS Seltos
Creta VS Seltos ( Autocar India )

இந்த இரு மிட்சைஸ் எஸ்யூவிகளும் ஒரே பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுவதுடன், இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் ஒற்றுமையைப் பார்க்கமுடிகிறது. ஆனால் டிசைன், வசதிகள், கேபின் ஆகியவற்றில் இரண்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

குடும்பச்சண்டைகள் என்பது நம் நாட்டில் வெகு பிரசித்தம். ஆனால்,தொழில்முறையாகக் குடும்பச்சண்டை என்பது கொஞ்சம் வித்தியாசமான ஒன்றுதான். இந்திய ஆட்டோமொபைல் துறையில் தற்போது ஹூண்டாயும், அதன் குழும நிறுவனமான கியாவும், மிட்சைஸ் எஸ்யூவி செக்மென்ட்டின் ராஜா சிம்மாசனத்துக்காக மோதிக்கொண்டிருக்கின்றன. ஏறக்குறைய 5 ஆண்டுகளாக விற்பனையில் இருந்த முதல் தலைமுறை க்ரெட்டாவிடமிருந்து, அந்தப் பதவியை செல்ட்டோஸ் தட்டிப் பறித்தது தெரிந்ததே. எனவே, தான் இழந்த இடத்தை மீட்டெடுக்கும் விதமாக, இரண்டாம் தலைமுறை க்ரெட்டாவைக் களமிறக்கியுள்ளது ஹூண்டாய். இந்த இரு மிட்சைஸ் எஸ்யூவிகளும் ஒரே பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுவதுடன், இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் ஒற்றுமையைப் பார்க்கமுடிகிறது. ஆனால் டிசைன், வசதிகள், கேபின் ஆகியவற்றில் இரண்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இந்த இரண்டில் எந்த மிட்சைஸ் எஸ்யூவி பெஸ்ட்?

க்ரெட்டா Front
க்ரெட்டா Front
Hyundai India

டிசைன்

சீனாவில் ix25 என்ற பெயரில் ஹூண்டாய் விற்பனை செய்யும் கார்தான், இங்கே புதிய க்ரெட்டாவாக வந்திருக்கிறது. இதுவும் செல்ட்டோஸும் ஒரே 2,610மி.மீ வீல்பேஸ் மற்றும் 17 இன்ச் வீல்களைக் கொண்டுள்ளன. மற்றபடி உயரத்தில் க்ரெட்டா முன்னிலை வகித்தால் (1,635மி.மீ), நீளம் (4,315மி.மீ) மற்றும் அகலத்தில் (1,800மி.மீ) செல்ட்டோஸ் முந்துகிறது. மேலும், கிரில் வரை நீளும் LED DRL, Tiger Nose கிரில், ஃப்ளோட்டிங் ரூஃப் என ஸ்டைலான அம்சங்கள் இருந்தாலும், செல்ட்டோஸின் டிசைன் நீட் ரகம்தான். இதனுடன் ஒப்பிடும்போது 3 பாகங்களாக இருக்கும் Trio Beam ஹெட்லைட் - டெயில் லைட், சில்வர் நிற சி-பில்லர் மற்றும் பாடி கிளாடிங், Cascading கிரில், சதுரமான வீல் ஆர்ச் எனத் தனித்துவமான விஷயங்கள் க்ரெட்டாவில் நிறைந்துள்ளன. ஆனால், இது எல்லாருக்கும் பிடிக்குமா என்பது சந்தேகமே. ஏனெனில், முதல் தலைமுறை க்ரெட்டா, அனைத்து வயதினருக்குமான தோற்றத்தைக் கொண்டிருந்ததே அதன் அசூர வெற்றிக்கான காரணிகளில் ஒன்று. இடையிடையே காரில் தேவையான மாற்றங்களும் வந்துகொண்டிருந்தன.

Panaromic Sunroof
Panaromic Sunroof
Hyundai India

கேபின் மற்றும் வசதிகள்

Creta Cabin
Creta Cabin
Hyundai India

புதிய க்ரெட்டாவின் வெளிப்புறத்தில் சிக்ஸர் அடித்துவிட்டு, உட்புறத்தில் சிங்கிள் தட்டிவிட்டது ஹூண்டாய். தாழ்வாக அமைந்திருக்கும் டேஷ்போர்டின் சென்டர் கன்சோலில், 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. இதிலிருக்கும் 4 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், வெளிநாடுகளில் கிடைக்கும் சொனாட்டாவில் இருப்பதுதான். மிட்சைஸ் எஸ்யூவிகளிலே முதன்முறையாக, 7 இன்ச் டிஜிட்டல் மீட்டரைக் கொண்டிருக்கும் ஒரே கார் க்ரெட்டாதான். இதுதான் வெர்னா ஃபேஸ்லிஃப்ட், புதிய i20 ஆகியவற்றிலும் இடம்பெற உள்ளது. மேலும் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பேடில் ஷிஃப்ட்டர், பனரோமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜிங், 55 வசதிகளை உள்ளடக்கிய Advance Bluelink System ஆகியவையும் இங்கே மட்டுமே! Quilted லெதர் அப்ஹோல்சரி, கேபினை மேலும் அழகாக்குகிறது.

க்ரெட்டா - ix25
க்ரெட்டா - ix25
Hyundai India

செல்ட்டோஸின் உட்புறம், வெளிப்புறத்தைப் போலவே ஸ்மார்ட்டாகக் காட்சியளிக்கிறது. இதிலும் அதே 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம்தான் என்றாலும், அது கொஞ்சம் உயரத்தில் உள்ளது. இங்கே அனலாக் டயல்கள்தான் என்றாலும், MID-யில் அதிக தகவல்கள் தெரிகின்றன. க்ரெட்டாவில் இல்லாத Blind Spot Monitor, 360 Degree கேமரா, முன்பக்க பார்க்கிங் சென்சார்கள், Heads Up டிஸ்பிளே ஆகியவை செல்ட்டோஸில் உண்டு. இந்த மிட்சைஸ் எஸ்யூவிகளின் கேபினும் Beige/Black ஃபினிஷில் இருப்பதுடன், டர்போ மாடலில் சிவப்பு நிற வேலைப்பாடுகளும் உண்டு. மேலும் Two Step Rear Backrest Recline, 6 காற்றுப்பைகள், பின்பக்க டிஸ்க் பிரேக், TPMS, டிரைவிங் மோடுகள் (Comfort, Eco, Sport) & டிராக்ஷன் மோடுகள் (Snow, Sand, Mud), இன்டர்நெட் கனெக்ட்டிவிட்டி, Air Purifier, Bose ஆடியோ சிஸ்டம், முன்பக்க வென்டிலேட்டட் சீட்கள் போன்ற பல வசதிகள் இரண்டிலுமே இருக்கின்றன. தவிர இவற்றில் ஒரே வீல்பேஸ்தான் என்பதால், இடவசதி ஏறக்குறைய ஒரே மாதிரி இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

Creta Cabin
Creta Cabin
Hyundai India

இன்ஜின் - கியர்பாக்ஸ் மற்றும் ஓட்டுதல் அனுபவம்

செல்ட்டோஸ் மற்றும் க்ரெட்டா ஆகிய கார்களில், ஒரே 1.5 லிட்டர் பெட்ரோல்/டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள்தான் உள்ளன. இவற்றின் 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலில் (1,497சிசி - 115bhp பவர் / 14.4kgm டார்க் / 16.5கி.மீ மைலேஜ்) 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT இருந்தால், 1.5 லிட்டர் டீசல் வெர்ஷனில் (1,493சிசி - 115bhp பவர் / 25.5kgm டார்க் / 21கி.மீ) 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் உண்டு. 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் வேரியன்ட்டைப் பொறுத்தவரை (1,353சிசி - 140bhp பவர் / 24.2kgm டார்க் / 16.1கி.மீ), செல்ட்டோஸில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு ட்வின் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

Advanced Bluelink & Smart Watch
Advanced Bluelink & Smart Watch
Autocar India

இதுவே க்ரெட்டாவில் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் மட்டும்தான் என்பதை குறிப்பிட்டாக வேண்டும். இந்த இன்ஜின்கள் அனைத்துமே வெளிப்படுத்தும் பவர் மற்றும் டார்க்கில் எந்த மாறுதலும் இல்லாவிட்டாலும், அராய் மைலேஜில் க்ரெட்டா 0.3 கி.மீ வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுவிட்டது! குறைவான எடை (உபயம்: 74.3% High Strength Steel கட்டுமானம்) மற்றும் Taller Gearing காரணமாக இருக்கலாம். செல்ட்டோஸும் க்ரெட்டாவும் ஒரே பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுவதால், கிட்டத்தட்ட இதன் ஓட்டுதல் அனுபவம் சமமாகவே இருக்கலாம். ஆனால், க்ரெட்டாவின் சஸ்பென்ஷன் மென்மையாகவும், செல்ட்டோஸின் சஸ்பென்ஷன் இறுக்கமாகவும் செட் செய்யப்பட்டிருக்கின்றன.

Creta Side
Creta Side
Autocar India

விலை விவரங்கள்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 18 வேரியன்ட்களில் செல்ட்டோஸ் அசத்தலான விலையில் அறிமுகமானதன் வெளிப்பாடாக, புக்கிங் தொடங்கிய முதல் நாளிலேயே 6,046 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டன. ஆனால், புத்தாண்டு முதலாக இதன் விலை 30-40 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டது தெரிந்ததே. எம்ஜி ஹெக்டர், நிஸான் கிக்ஸ், ரெனோ டஸ்ட்டர்/கேப்ச்சர், மாருதி சுஸுகி எஸ்-கிராஸ், டாடா ஹேரியர், மஹிந்திரா XUV5OO ஆகியவற்றுக்குப் போட்டியாக வரும் செல்ட்டோஸ், 7 மாதங்களில் 75,000 கார்கள் விற்பனையாகிவிட்டது! மேலும் இதனால் யுட்டிலிட்டி வாகனப் பிரிவில் 7.5% சந்தை மதிப்பையையும் இது பெற்றுவிட்டது. இன்றுமே கொடுக்கும் காசுக்கான மதிப்பில் கியா இன்னுமே நல்ல சாய்ஸாகவே உள்ளது.

Creta Rear
Creta Rear
Hyundai India

5 இன்ஜின் - கியர்பாக்ஸ் காம்போ மற்றும் 10 கலர் ஆப்ஷன்களுடன் (வெள்ளை, சிவப்பு, கறுப்பு, நீலம், சில்வர், கிரே, ஆரஞ்ச், பச்சை, இரு டூயல் டோன்) லேட்டஸ்ட்டாக வந்திருக்கும் க்ரெட்டா, அனைத்து வேரியன்ட்களிலுமே அதிகப்படியான வசதிகளை ஸ்டாண்டர்டாகக் கொடுத்திருக்கிறது. 14 வேரியன்ட்களில் 10-17 லட்ச ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் வந்திருக்கும் இது, ஏறக்குறைய செல்ட்டோஸ் மற்றும் முந்தைய க்ரெட்டாவின் மதிப்பிலேயே உள்ளது. இம்மாதத்தின் தொடக்கத்தில் க்ரெட்டாவின் புக்கிங் தொடங்கிவிட்ட நிலையில் (25,000 ரூபாய்), அதன் எண்ணிக்கை 14,000-ஐத் தாண்டிவிட்டது. இதில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக டீசல் மாடல்கள்தான் என்பதைக் கவனிக்க வேண்டும்; இதன் டெலிவரிகள் மற்றும் டெஸ்ட் டிரைவ் தொடங்கிவிட்டாலும், வெயிட்டிங் பீரியட் 2 மாதங்கள் என்ற அளவில் இருக்கிறது. சமீபத்திய ஹூண்டாய் தயாரிப்புகளைப் போலவே, 3 வருட RSA மற்றும் 3 விதமான வாரன்ட்டியுடன் (3 வருடம்/1 லட்சம் கிமீ, 4 வருடம்/50,000கிமீ, 3 வருடம்/40,000கிமீ) வந்துள்ளது க்ரெட்டா. கூடுதல் வசதிகளுடன் கூடிய சமீபத்திய மாடல் - பிராண்ட் & ரீசேல் மதிப்பு - டீலர் நெட்வோர்க் அடிப்படையில், இந்த ஒப்பீட்டில் க்ரெட்டா வெற்றிபெறுகிறது.

Creta Turbo
Creta Turbo
Autocar India
அடுத்த கட்டுரைக்கு