Published:Updated:

செல்ட்டோஸ் & ஹெக்டருக்குப் போட்டி... Next Gen ஹூண்டாய் க்ரெட்டா எப்படி இருக்கும்?

க்ரெட்டா BS-6
க்ரெட்டா BS-6 ( Hyundai India )

சீனா, தென் அமெரிக்க நாடுகளில் iX25 எனும் பெயரில் விற்பனை செய்யப்படும் மாடலின் அதே பிளாட்ஃபார்ம், பாடி பேனல்கள், இன்டீரியர் உடன்தான் இந்தியாவில் வெளியாகவிருக்கும் க்ரெட்டாவும் இருக்கும்.

போட்டி மிகுந்த இந்திய கார் சந்தையில், ஒரு செக்மென்ட்டில் ஒரு மாடலே நீண்ட நாள்களாகத் தனித்துக் கோலோச்சுவது (4 ஆண்டுகள்) என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இனோவாவுக்கு அடுத்தபடியாக அந்த ஸ்டேட்டஸ், க்ரெட்டாவுக்கு வாய்த்தது என உறுதியாகச் சொல்லலாம். என்னதான் மிட்சைஸ் எஸ்யூவி பிரிவை டஸ்ட்டர் தொடங்கி வைத்திருந்தாலும், அதைப் பிரபலப்படுத்திய பெருமை க்ரெட்டாவையே சேரும்! ப்ரீமியம் ஹேட்ச்பேக் மற்றும் காம்பேக்ட் எஸ்யூவியிலிருந்து அப்கிரேடு ஆக விரும்புபவர்களுக்கு ஏற்ற சாய்ஸாகவும், எக்ஸிக்யூட்டிவ் செடான் அல்லது XL சைஸ் எஸ்யூவி வைத்திருப்போருக்கு இரண்டாவது காராகவும் இது இருந்தது என்றால் மிகையில்லை; கச்சிதமான சைஸ் மற்றும் ப்ரீமியம் அனுபவத்தைத் தாண்டி, பெட்ரோல்/டீசல் இன்ஜின்கள் - மேனுவல்/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் - பல வேரியன்ட்கள் என ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஏற்ற வகையில் க்ரெட்டாவைப் பொசிஷன் செய்ததிலேயே, ஹூண்டாயின் வெற்றி தவிர்க்க முடியாததாகிவிட்டது (5 லட்சத்துக்கும் அதிகமான கார்கள் விற்பனையாகிவிட்டன).

Creta BS-6
Creta BS-6
Hyundai india

ஆனால், கடந்த ஆண்டில் ஏறக்குறைய இதே ஃபார்முலாவைப் பின்பற்றி களமிறக்கப்பட்ட செல்ட்டோஸ், இந்த காரின் வெற்றிநடைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது என்பதே நிதர்சனம். மோட்டார் விகடனின் `கார் ஆஃப் தி இயர் 2020' விருதை இந்த கியா எஸ்யூவி பெற்றிருப்பது தெரிந்ததே. மேலும், யுட்டிலிட்டி வாகனச் சந்தையில் 6.34% சந்தை மதிப்பை வெறும் நான்கு மாதங்களிலேயே செல்ட்டோஸ் பெற்றிருப்பதும் வியப்பளிக்கிறது! எனவே, தான் இழந்த இடத்தை மீட்டெடுக்க, ஒரு லட்ச ரூபாய் வரை தள்ளுபடிகளை க்ரெட்டாவுக்கு ஹூண்டாய் வழங்குவதுடன், பவர்ஃபுல் 1.6 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினை ஆரம்ப வேரியன்ட்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், இந்த மிட்சைஸ் எஸ்யூவியின் அடுத்த தலைமுறை மாடலின் டெஸ்ட்டிங்கை, அந்த நிறுவனம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது; இந்த ஆண்டில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரப்போகும் புதிய க்ரெட்டாவில் என்ன/எப்படி இருக்கும்?

இன்டர்நேஷனல் To இந்தியா... டிசைனில் என்னென்ன மாற்றங்கள்?

Creta BS-6
Creta BS-6
Hyundai India

சீனா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் iX25 எனும் பெயரில் விற்பனை செய்யப்படும் மாடலின் அதே பிளாட்ஃபார்ம், பாடி பேனல்கள், இன்டீரியர் உடன்தான், இந்தியாவில் வெளியாகப்போகும் க்ரெட்டாவும் வரும். ஆனால், நம் நாட்டுக்கு ஏற்றபடி காரில் சிற்சில மாறுதல்கள் இருக்கும் எனத் தகவல் வந்திருக்கிறது. அதன்படி சர்வதேச மாடலின் க்ரில் Honeycomb Pattern-ல் இருந்தால், இந்திய மாடலின் க்ரில் Chequered Pattern-ல் இருக்கும். க்ரோம் வேலைப்பாடும் இடம்பெறலாம். Brushed அலுமினிய ஃபினிஷில், Faux Skid Plate பயன்படுத்தப்பட்டுள்ளது. டூயல் டோன் கலர்களும் கிடைக்கலாம். அதேபோல சில்வர்/க்ரே/டயமண்ட் கட் அலாய் வீலும் வேறு தோற்றத்திலும் சைஸிலும் இருக்கும். அதேபோல கேபினின் அப்ஹோல்சரி மற்றும் டூயல் டோன் ஷேடு ஆகியவையும் வேறு மாதிரி இருக்கலாம். எம்ஜி ஹெக்டரைப் போலவே, புதிய க்ரெட்டாவிலும் பனரோமிக் சன்ரூஃப் இடம்பெறும். இந்த வசதி செல்ட்டோஸில் இல்லை என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

Creta BS-6
Creta BS-6
Hyundai India

4,300 மிமீ நீளம் (முன்பைவிட 30 மிமீ அதிகம்) - 1,790 மிமீ அகலம் (முன்பைவிட 10 மிமீ அதிகம்) - 1,622 மிமீ உயரம் (முன்பைவிட 8மிமீ குறைவு) என அளவுகளில் மாற்றம் கண்டிருக்கிறது க்ரெட்டா. ஆனால், இந்தியச் சாலைகளுக்கு ஏற்றபடி, காரின் கிரவுண்ட் கிளியரன்ஸில் வித்தியாசம் இருக்கும். Pallisade மற்றும் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்டில் காணப்பட்ட ஹூண்டாயின் புதிய டிசைன் கோட்பாடுகளை, புதிய க்ரெட்டாவிலும் பார்க்க முடியும் என்பது பெரிய ப்ளஸ். இதனால் வழக்கமான ‘Cascading Grille’ தவிர, லேட்டஸ்ட் கார்களில் பரவலாகக் காணப்படும் ஸ்ப்ளிட் ஹெட்லைட் அமைப்பும் (மெலிதான LED DRL மேலே, LED ஹெட்லைட் கீழே) இங்கே இருக்கும். இதுதவிர, L வடிவ DRL மற்றும் LED ஹெட்லைட்டுக்கு இடையே ஒரு Light Strip இருப்பது செம. க்ரில்லைத் தொடர்ந்து, ஹெட்லைட்டிலும் க்ரோம் வேலைப்பாடு இருக்கிறது. இண்டிகேட்டர் மற்றும் பனி விளக்கு தனியாக வழங்கப்பட்டிருக்கிறது. இவற்றுடன் தட்டையான பானெட் சேரும்போது, காரின் முன்பக்கம் முன்பைவிடப் பார்க்க நன்றாகவே உள்ளது. சதுரமான வீல் ஆர்ச்கள், இது எஸ்யூவிதான் என்பதை உணர்த்திவிடுகின்றன. ஹெட்லைட்டைப் போலவே, பின்பக்கத்தில் டெயில் லைட்டும் ஸ்ப்ளிட் செட்அப்புக்கு மாறிவிட்டது; இதன்படி Light Strip மேலேயும், பிரேக் லைட் - இண்டிகேட்டர்கள் கீழேயும் இடம்பிடித்துள்ளன.

கேபின் மற்றும் இன்ஜின்களில் என்ன ஸ்பெஷல்?

க்ரெட்டா கேபின்
க்ரெட்டா கேபின்
Hyundai India

ஹெக்டரைப் போலவே, சென்டர் கன்சோலில் 10.25 இன்ச் டச் ஸ்க்ரீனைச் செங்குத்தாக க்ரெட்டா கொண்டிருக்கிறது. கிளைமேட் கன்ட்ரோல் ஏசியைக்கூட இதிலிருந்தே கட்டுப்படுத்த முடியும் என்பது, எத்தனை பேருக்குப் பிடிக்கும் எனத் தெரியவில்லை. இதனால் பட்டன்களின் எண்ணிக்கை சொற்பமாக ஆகிவிட்டது! மற்றபடி க்ரூஸ் கன்ட்ரோல், Ventilated முன்பக்க இருக்கைகள், Tilt அட்ஜஸ்ட் ஸ்டீயரிங், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் - TPMS - ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் (செல்ட்டோஸ் போலவே), புஷ் பட்டன் ஸ்டார்ட், எலெக்ட்ரானிக் மிரர்கள், வயர்லெஸ் சார்ஜிங் என முன்பைப் போலவே அதிக வசதிகள் கேபினில் இடம்பெறும். முதற்கட்டமாக 5 சீட்டர் மாடலே வரும் என்றாலும், பின்னாளில் 7 சீட்டரை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருக்கிறது ஹூண்டாய்! எனவே BR-Vயைத் தொடர்ந்து, அதன் வகையிலேயே 7 சீட்களைக் கொண்ட மாடலாக க்ரெட்டா இருக்கும்!

Creta BS-6
Creta BS-6
Hyundai India
கியா செல்ட்டோஸ் முதல் ஹூண்டாய் கோனா வரை... 2019 -ன் டாப் 10 கார்கள் இவைதாம்!

இதில் செல்ட்டோஸில் இருக்கும் 1.5 லிட்டர் BS-6 பெட்ரோல்/டீசல் இன்ஜின்களைத் தவிர, 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினும் பயன்படுத்தப்படும் என்பது ஸ்பெஷல். மாருதி சுஸூகியைத் தொடர்ந்து, Mild Hybrid தொழில்நுட்பத்தை க்ரெட்டாவில் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. செல்ட்டோஸ் மற்றும் ஹெக்டர் தவிர, ஹேரியர் - XUV 5OO - கேப்ச்சர்/டஸ்ட்டர் - கிக்ஸ்/டெரானோ - S க்ராஸ் - BR-V ஆகிய கார்களுடனும், ஹூண்டாயின் இந்த மிட்சைஸ் எஸ்யூவி போட்டிபோடுகிறது. அனேகமாக பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் புதிய க்ரெட்டா காட்சிபடுத்தப்படலாம். அசப்பில் பெரிய வென்யூ போல இருக்கும் புதிய க்ரெட்டா, அதை விடப் பெரிய வெற்றியைச் சுவைக்க வேண்டும் என்பதே ஹூண்டாயின் ஆசையாக இருக்கும். எப்படி இருந்தாலும், `மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு'!

அடுத்த கட்டுரைக்கு