Published:Updated:

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்... 2020-ல் இப்படித்தான் இருக்கும்!

Verna Facelift
Verna Facelift ( Hyundai )

சர்வதேச சந்தைகளில் அறிமுகமாகியிருக்கும் சொனாட்டா, Ioniq, எலான்ட்ரா ஆகிய லேட்டஸ்ட் ஹூண்டாய் கார்களில் பின்பற்றப்பட்டிருக்கும் டிசைன் கோட்பாடுகளை, வெர்னா ஃபேஸ்லிஃப்ட்டிலும் பார்க்க முடிகிறது.

இந்தியாவில் எஸ்யூவி அலை பயங்கரமாக அடித்ததில், மிட்சைஸ் செடான் செக்மென்ட் பலத்த சேதத்தைச் சந்தித்திருக்கிறது எனலாம். சியாஸ், யாரிஸ், சிட்டி, வென்ட்டோ, ரேபிட் என ஏறக்குறைய அனைத்து மாடல்களுமே சிற்சில மாற்றங்களைப் பெற்றிருக்கும் நிலையில், வெர்னா கொஞ்சம் அமைதியாகவே இருந்தது. தற்போது விற்பனையில் இருக்கும் மாடலை அடிப்படையாகக்கொண்டு, சீனாவில் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் வெளிவந்துவிட்டது; Chengdu Motor show-வில் முதன்முறையாகக் காட்சிப்படுத்தப்பட்ட இந்த கார், 2020-ம் ஆண்டின் பிற்பாதியில் நம் ஊர்ச் சாலைகளிலும் டயர் பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசைன், இன்ஜின், வசதிகள், கேபின் ஆகியவற்றில் என்ன மாற்றம் இருக்கிறது? வாருங்கள் பார்ப்போம்.

டிசைன் அம்சங்கள்

Verna Facelift
Verna Facelift
Hyundai

சர்வதேசச் சந்தைகளில் அறிமுகமாகியிருக்கும் புதிய சொனாட்டா, Ioniq மற்றும் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் ஆகிய லேட்டஸ்ட் ஹூண்டாய் கார்களில் பின்பற்றப்பட்டிருக்கும் டிசைன் கோட்பாடுகளை, வெர்னா ஃபேஸ்லிஃப்ட்டிலும் பார்க்க முடிகிறது. காரின் முன்பகுதி மற்றும் பின்பகுதியில் கணிசமான மாறுதல் இருப்பதால், முற்றிலும் புதிய கார் போலவே இது இருக்கிறது. முன்பைவிட ஷார்ப்பாகக் காட்சியளிக்கும் முன்பக்கத்தில், அகலமான க்ரோம் Cascading கிரில் மற்றும் பெரிய ஹெட்லைட்ஸ் இடம்பெற்றுள்ளன. க்ரோம் ஃபினிஷால் 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் ஹெட்லைட்டில், LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட் - பார்க்கிங் லைட் - இண்டிகேட்டர் ஆகியவை அழகாகப் பொருந்தியுள்ளன.

Gloss கறுப்பு & Satin க்ரே வேலைப்பாடுகளுடன்கூடிய பம்பர், பானெட், Fender புதிதுதான். பக்கவாட்டுப் பகுதியில் டூயல் டோன் டயமண்ட் கட் அலாய் வீல்கள் (iX 25-ல் இருப்பது) தவிர, எந்த வித்தியாசமும் தெரியவில்லை. பின்பகுதியில் டெயில் கேட், டெயில் லைட்ஸ், பம்பர் என எல்லாமே மாறியிருக்கிறது. இருபுறமும் உள்ள LED டெயில் லைட்டை, LED பட்டை ஒன்றுசேர்க்கிறது. நம்பர் பிளேட் டெயில்கேட்டிலேயே இருந்தாலும், அதன் பொசிஷன் கொஞ்சம் கீழே இறங்கி வந்திருக்கிறது. பம்பரில் Vertical Reflectors தவிர, Satin அலுமினிய ஃபினிஷ் மற்றும் அகலமான Faux Diffuser பயன்பாட்டுக்கு வந்துள்ளன. புதிய பம்பர்கள் காரணமாக, காரின் நீளம் 25மி.மீ அதிகரித்திருக்கிறது.

கேபின் மற்றும் வசதிகள்

Verna Facelift
Verna Facelift
Hyundai

வெர்னா ஃபேஸ்லிஃப்ட்டின் வெளிப்புறத்துடன் ஒப்பிட்டால், உட்புறத்தில் அதிக மாற்றம் இல்லை எனலாம். சீட் ஃபேப்ரிக் மற்றும் டேஷ்போர்டின் கலர் காம்பினேஷன் ஆகியவை தவிர, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரும் புதிது. இது, முற்றிலும் புதிய க்ரெட்டா மற்றும் i20 ஆகிய கார்களிலும் இருக்கும் என்பது பெரிய ப்ளஸ். முன்பைவிடப் பெரிய 8 இன்ச் டச் ஸ்க்ரீனில் (எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட்டில் இருப்பது), Bluelink மற்றும் மேம்படுத்தப்பட்ட Interface உள்ளன. எனவே, வென்யூ மற்றும் எலான்ட்ராவைத் தொடர்ந்து, இன்டர்நெட் கனெக்ட்டிவிட்டியைப் பெறப்போகும் மூன்றாவது ஹூண்டாய் கார் வெர்னாதான்! அதிக வசதிகளுக்குப் பெயர்பெற்ற வெர்னா, அந்தப் பலத்தை ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் கொண்டிருக்கும் என்றே தெரிகிறது.

இன்ஜின் - கியர்பாக்ஸ்

Verna Facelift
Verna Facelift
Autocar India

சீனாவில் கிடைக்கும் மாடலில், 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மட்டுமே பயன்படுத்தப்படும் சூழலில், கியா செல்ட்டோஸில் உள்ள 1.5 லிட்டர் BS-6 பெட்ரோல்/டீசல் இன்ஜின்கள்தான் இந்தியாவில் வரப்போகும் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்டிலும் இருக்கும். முற்றிலும் புதிய க்ரெட்டாவில் அடுத்தபடியாக இவை அமலுக்கு வரும். இரண்டுமே 115bhp பவரை வெளிப்படுத்தும். வழக்கமான 6 ஸ்பீடு மேனுவல் தவிர, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படலாம். சியாஸ் போலவே, பெட்ரோல் இன்ஜினில் 48V ஹைபிரிட் சிஸ்டம் வழங்கப்படலாம் (சீன வெர்னாவில் உண்டு). இது, கூடுதல் பர்ஃபாமன்ஸ்/மைலேஜ் மற்றும் குறைவான காற்று மாசுக்கு வழிவகுக்கும் என்பது வரவேற்கத்தக்கது. தற்போதைய மாடலில் இருக்கும் 1.6 லிட்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின்கள், முறையே 123bhp பவர்/15.1kgm டார்க் மற்றும் 128bhp பவர்/26kgm டார்க்கை வெளிப்படுத்துகின்றன. எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட்டில் டீசல் இன்ஜின் இல்லாதது குறிப்பிடத்தக்கது.

வெர்னா
வெர்னா
Hyundai
Vikatan
அடுத்த கட்டுரைக்கு