Published:Updated:

இந்தியாவில் மீண்டும் இயங்கத் தொடங்கிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள்... எப்படி?

ஆட்டோமொபைல் தொழிற்சாலை #lockdown
ஆட்டோமொபைல் தொழிற்சாலை #lockdown

நிறுவனங்கள் தொழிற்சாலையை மீண்டும் திறந்தாலும் ஏற்றுமதிக்கே முன்னுரிமை.

கொரேனா காரணமாக இந்தியா முழுவதும் லாக் டௌனில் இருக்கும் நேரத்தில் ஏப்ரல் 20-க்குப் பிறகு சில துறைகள் மட்டும் குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு இயங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. எந்தெந்த உற்பத்தித் துறைகள் இயங்கலாம் என்பதை மாநில அரசுகளே முடிவுசெய்யட்டும் என்று விடப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் சில ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

Lockdown in tamilnadu
Lockdown in tamilnadu

உத்ராகண்ட் மாநிலம் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இயங்கலாம் என்று அறிவித்திருந்த நிலையில் பாட்நகரில் இருக்கும் பஜாஜ் தொழிற்சாலை, ருத்ரபூரில் இருக்கும் மஹிந்திராவின் டிராக்டர் தொழிற்சாலை போன்றவை இன்று முதல் இயங்கத்தொடங்கிவிட்டன. உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் நிறுவனமான லூமாக்ஸ் தம் பணியைத் தொடங்கிவிட்டது. இவை எதுவுமே கொரோனா ஆபத்து அதிகம் இருக்கும் ரெட் ஸோனில் இல்லை என்பது குறிப்பிடவேண்டிய விஷயம்.

அறுவடை காலம் நெருங்குவதால் டிராக்டர்களின் தேவை மற்றும் விற்பனை அதிகரிக்கும். இதனால், மஹிந்திரா போன்ற ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் தங்களது டிராக்டர் பிரிவுக்கே இப்போது முன்னுரிமை கொடுத்துவருகிறார்கள்.

ஒரு பக்கம் சில நிறுவனங்கள் தொழிற்சாலையைத் திறந்தாலும் இன்னொரு பக்கம் மாருதி, ஹோண்டா, டொயோட்டா போன்ற நிறுவனங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. தேசிய அளவிலான ஊரடங்கினால் உற்பத்திக்குத் தேவையான பாகங்கள் மற்றும் பொருள்கள் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. பெரும்பாலான உதிரிப் பாக தயாரிப்பு நிறுவனங்கள் ரெட்ஸோன் எனப்படும் ஆபத்தான பகுதிகளில் இருப்பதால் அவை தொடங்குவதற்கு முன்பு தொழிற்சாலைகளைத் திறப்பது பயனற்றது.

சாகுபடிக்காக டிராக்டர் மூலம் நிலத்தை உழும் விவசாயிகள். #lockdown
சாகுபடிக்காக டிராக்டர் மூலம் நிலத்தை உழும் விவசாயிகள். #lockdown

மேலும், தற்போது சோஷியல் டிஸ்டன்சிங் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கவனம் தேவை என்பதால் அதற்கேற்ப உற்பத்தி முறையை எப்படி மாற்றுவது என்பதையும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் திட்டமிட வேண்டும். அதற்கான நேரத்தை எடுத்துக்கொள்கிறார்கள்.

ஹூண்டாய், ஃபோர்டு, டஃபே, பிஎம்டபிள்யூ, ரெனோ-நிஸான், ராயல் என்ஃபீல்டு, டிவிஎஸ் எனப் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மே 3 வரை ஊரடங்கில் எந்த மாற்றமும் இல்லை என்பதால் தற்போது எந்த நிறுவனமும் தொழிற்சாலையை ஆரம்பிக்கமுடியாது. இந்த நிறுவனங்கள் தொழிற்சாலையை மீண்டும் திறந்தாலும் ஏற்றுமதிக்கே முன்னுரிமை இருக்கும்.

Daimler Factory
Daimler Factory

கடந்த 15 மாதங்களாகத் தேவை குறைந்திருப்பதால் தற்போது உள்நாட்டு விற்பனை பெரிதளவு இருக்காது. செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு உள்நாட்டு விற்பனை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு