Election bannerElection banner
Published:Updated:

திருடப்பட்ட இந்தியர்களின் கார்/பைக் டேட்டா... இப்போது அத்தனை விவரங்களும் ஜெர்மனியின் கையில்!

Car and Bike data
Car and Bike data

சல்லிசான விலைக்கு விற்கப்பட்ட நமது லைசென்ஸ் விவரம்!

‘பாய்ஸ்’ திரைப்படத்தில் செந்தில் இப்படிச் சொல்வார். ‘‘எந்த விஐபி வீட்ல என்னைக்கு பிரியாணி கிடைக்கும்; எந்தக் கோயில்ல தயிர் சாதம் கிடைக்கும். இப்படி எல்லா டேட்டா பேஸும் என் கையில இருக்கு!’’

அதேபோல்தான் இப்போது ஒரு ஜெர்மன் நிறுவனத்தின் கையில் நம் இந்தியர்களின் மொத்த டேட்டா பேஸும் இருக்கிறது. இது நமக்குச் சொந்தமான வாகனங்கள் பற்றியது; நமது ரெஜிஸ்ட்ரேஷன் பற்றியது; இன்ஷூரன்ஸ் பற்றியது. அதாவது, நீங்கள் என்ன வாகனம் பயன்படுத்துகிறீர்கள்; உங்கள் வாகனத்தின் ரெஜிஸ்ட்ரேஷன் எண்; எத்தனை ஆண்டு பழைய வாகனம்; எப்போது FC ரென்யூவல் செய்ய வேண்டும் – இப்படி உங்களின் எல்லா டேட்டா பேஸும் பக்காவாக இருக்கிறது, Manserv எனும் ஜெர்மன் நிறுவனத்திடம்.

அது சரி; இந்தியாவின் டேட்டா பேஸ் பல்க்காக எப்படி ஜெர்மனுக்குப் போனது. அதற்குக் காரணம் – நமது இந்தியாவைச் சேர்ந்த Fast Lane Automotive எனும் ஆட்டோமேட்டிவ் நிறுவனம்.

திருடப்பட்ட இந்தியர்களின் கார்/பைக் டேட்டா... இப்போது அத்தனை விவரங்களும் ஜெர்மனியின் கையில்!


சுருக்கமாக ஒரு முன்கதைச் சுருக்கம்..

மார்ச்–2019–ல் நமது (MoRTH) தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், Bulk Data Sharing Policy என்றொரு பாலிஸியை அறிமுகப்படுத்தியது. இந்த பாலிஸி மூலமாக இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களின் விவரங்களையும் – ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கோ, வங்கிகளுக்கோ, தனியார் நிறுவனங்களுக்கோ விற்கலாம் என்பதுதான் இந்தத் திட்டம். (சில சர்ச்சைக்குரிய பாதுகாப்புக் காரணங்கள் கருதி, ஜூன் 2020–ல் இது காலாவதியாகி விட்டது என்பது வேறு விஷயம். ஆனால், அதற்கு இடைப்பட்ட காலத்துக்குள் நடந்ததுதான் விஷயம்.)

இந்தச் சமாச்சாரங்களை வாங்கும் நிறுவனங்களுக்கு இருக்கும் ஒரே விதி – அது இந்தியாவைச் சேர்ந்த நிறுவனமாகவோ, அல்லது 50% இந்திய நிறுவனங்களுடன் பார்ட்னர்ஷிப் வைத்த கம்பெனியாகவோ இருக்க வேண்டும்.

அப்படி நமது புள்ளி விவரங்களை, மத்திய அரசு - சில பல கோடிகளுக்கு விற்ற நிறுவனம்தான், குர்கானில் இயங்கும் Fast Lane Automotive எனும் நிறுவனம். இதில் இன்னொரு குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் – இந்த Data Sharing Agreement 2014–லேயே ஒப்புதலுக்குக் கையெழுத்தாகிவிட்டது என்பதுதான். இதற்குப் பெயர் National Register Policy என்கிற திட்டம். 2019–ல் அறிமுகம் ஆன ‘Bulk Data Policy’யைவிட அடுத்த லெவல் இது. அதாவது, இதில் ஒரு நபரின் தனிப்பட்ட லைசென்ஸ், சில பெர்சனல் விவரங்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என்பதுதான் அது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2016–ல் இந்த டீலை முடிக்கச் சொல்லி ஒப்பந்தம் போட்டுவிட்டது அரசு.

FLA-வின் கடிதம்
FLA-வின் கடிதம்

பெயருக்கு ஏற்றாற்போலவே கொஞ்சம் ஃபாஸ்ட் ஆகவே வேலை பார்த்துவிட்டது ஃபாஸ்ட் லேன் நிறுவனம். அதாவது, இந்த இடைப்பட்ட காலத்துக்குள்… சுமாராக மூன்றே மாதங்களில் ஜெர்மனியைச் சேர்ந்த ManServ எனும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்து, மேலும் சில பல கோடிகளுக்கு நமது டேட்டாக்களை விற்றுவிட்டது ஃபாஸ்ட் லேன். அதாவது, இந்தியாவில் உள்ள ஒரு வாகன உரிமையாளரின் லைசென்ஸ், பதிவுச் சான்றிதழ் போன்ற சமாச்சாரங்களும், ஜெர்மனியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் கையில்.
இதில் கூடுதலாக Manserv யோசித்ததன் விளைவு – ‘விலை அதிகமா இருக்கு… நான் ஏன் ஒரு தனியார் நிறுவனத்திடம் தகவல்களை வாங்க வேண்டும்; நேரடியாக மத்திய அரசிடமே டேட்டாவை கம்மி விலைக்கு வாங்கி விடலாமே’ என்று மத்திய அரசிடமே டீல் வைக்க ஆரம்பித்து விட்டது Manserv.

திருடப்பட்ட இந்தியர்களின் கார்/பைக் டேட்டா... இப்போது அத்தனை விவரங்களும் ஜெர்மனியின் கையில்!

ஆனால், ஏற்கெனவே உள்ள விதிகளின்படி – Manserv என்பது இந்திய நிறுவனம் இல்லை. அதனால், ‘வேறு ஒரு இந்திய நிறுவனத்திடம் பார்ட்னர்ஷிப் வைத்தால் ஓகேதானே’ என்று டீல் பேசி விட்டது. இதில் இன்னொரு விஷயம் – ஜூன் 2020–ல் பல்க் டேட்டா பாலிஸியும் காலாவதி ஆகிவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்துக்குள்தான் 50–க்கும் 100–க்கும் நமது டிரைவிங் லைசென்ஸ், வாகனப் பதிவுச் சான்றிதழ் போன்ற விஷயங்கள் அடிமட்ட விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது.

‘‘ FLA–வுக்கும் மத்திய அரசுக்கும் உள்ள டீல் முடிந்து போனதால், அந்த ஜெர்மன் நிறுவனத்திடம், புள்ளிவிவரங்களை டெலீட் செய்யச் சொல்லிக் கேட்கப் போவதில்லை. அதற்கு எங்களுக்கு உரிமையில்லை’’ என்று கையை விரித்து விட்டார் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி.

இதில் FLA–ன் நிலைப்பாடு இப்படி இருக்கிறது. ‘‘நாங்கள் சென்ஸிட்டிவ்வான, பெர்சனல் ஆன விஷயங்கள் எதையும் விற்கவில்லை. நாங்கள் டம்மி டேட்டாவைத்தான் கொடுத்திருக்கிறோம். இருந்தாலும் அந்த ஜெர்மன் நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்’’ என்கிறது FLA.

எது எப்படியோ… நீங்கள் எந்த காரை ஓட்டுகிறீர்கள்; உங்கள் டிரைவிங் லைசென்ஸ் எப்போது காலாவதியாகிறது; எப்போது நீங்கள் புது கார் வாங்க திட்டமிடுவீர்கள்… என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும் முன்பு ஜெர்மனிக்குத் தெரிந்திருக்கும்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு