பைக் என்றாலே ஆண்களுக்குரியது என்ற ஒரு சமூகத்தில் பரவலாகவே இருக்கிறது. பைக் ஆண்களுக்கு, ஸ்கூட்டர் பெண்களுக்கு என்பது எழுதப்படாத விதிபோலப் பலரும் நினைக்கிறார்கள். ஸ்கூட்டரில் பெண்கள் செல்வது சாதாரண விஷயம், ஆனால் பெண்கள் பைக் ஓட்டும்போது ஒரு நொடியாவது அவர்களை நின்று மேலும் கீழும் பார்த்து விட்டுத் தான் செல்கிறார்கள். பெண்களில் பலரும் 'நமக்குகெதுக்கு இதெல்லாம்' என்ற ரீதியில் பைக் ஓட்டுவது குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. பெண் என்றால் இதுதான் செய்ய வேண்டும், இப்படித் தான் இருக்க வேண்டும் எனப் பெண்கள் தங்கள் மீது இருக்கும் கட்டுப்பாடுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து வெளியேறி வந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு உலகமெங்கும் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் தங்களது எல்லைகளைக் கடந்து வெளியே வர வேண்டும் என்ற நோக்கத்துடனே இந்த மார்ச் 8 ஆகிய இன்றைய தினம் பெண்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஏற்கனவே, ஸ்பெஷலாக இருக்கும் இன்றைய தினத்தை மேலும் ஸ்பெஷலாக்க நினைத்தார்கள் பீஸ்ட் ரைடர்ஸ் குழுவினர்.
ஆட்டைமொபைல், ரேஸிங், ரோடு ட்ரிப் எனப் பெண்கள் மற்றும் பைக் காம்பினேஷன் குறித்த கட்டுப்பாடுகளை எல்லாம் உடைத்துவிட்டு அதில் சிகரத்தை அடைய உழைத்து வரும் பெண்களைச் சிறப்பிக்க விரும்பியது பீஸ்ட் ரைடர்ஸ் குழு. இந்தியாவில் பைக்குடன் தொடர்புடைய, பைக்கிங்கில் ஆர்வம் உடைய, அதில் சாதித்து வரும் பெண்களைச் கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு விருதளிக்கச் சென்னையில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள் பீஸ்ட் ரைடர்ஸ் பைக்கிங் குழுவினர். International Women's Day Meet 2k22 என்ற அந்த நிகழ்வில் நடந்த நிகழ்வுகளில் சில!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மார்ச் 6-ம் நாள் சென்னையில் இருக்கக்கூடிய சன் ப்ளாஸாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது நிகழ்வு. மொத்தம் 17 விருதாளர்கள், ஆட்டோமொபைல் ஷோரூமில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண்கள் முதல் தங்கள் வீடுகளை அழகாக்கும் ஹோம் மேக்கர்கள் வரை பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு விருது பெற்றுக் கொண்டார்கள். Most Inspiring Women, Most Inspiring Biker Women, Most Inspiring Social Biker Women, Emerging Biker Women, Emerging Girl Racer என ஒவ்வொரு விருதாளருக்கும் தனிப்பட்ட முறையில் அவர்களைக் கவுரவிக்கும் விதமாக விருதுகள் கொடுக்கப்பட்டன. இந்த விருது வழங்கும் விழாவிற்குச் சென்னையில் இருக்கும் சில பைக்கர்ஸ் குழுக்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். பைக்கர்களுக்கான உடையோடு அவர்களும் விழாவில் கலந்து கொள்ளக் களைகட்டியது பைக்கிங் கம்யூனிட்டியில் இருக்கும் பெண்களைக் கவுரவிக்கும் விருது விழா.
விருது பெற்ற பெண்கள்:
விருதைப் பெரும் ஒவ்வொருவரின் முகத்திலும் அவ்வளவு மகிழ்ச்சி. "நான் பைக் சாதாரணமாகத்தான் ஓட்ட ஆரம்பிச்சேன், அது என்னை இங்க கொண்டு வந்து நிறுத்தும்னு எதிர்பார்க்கலை" என ஒவ்வொருவரும் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். இறக்கைகள் இல்லாத நமக்கு பைக்தான் இறக்கைகள். பைக் என்பது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நம்மைக் கூட்டிச் செல்லும் எந்திரம் மட்டுமல்ல, பைக் ஓட்டுவது என்பது ஒரு உணர்வு. இறக்கைகள் என்பதை வெறும் வார்த்தைகளுக்காகச் சொல்லவில்லை, பைக் ஓட்டும்போது உண்மையாகவே நமக்கு இறக்கைகள் கிடைத்தது போன்றதொரு உணர்வு ஏற்படும். ஆண்கள் பைக் ஓட்டுவது என்பது சாதாரணமான விஷயம். ஆனால், போராடி பைக் ஓட்டும் ஒரு பெண்ணிடம் அந்த அனுபவத்தைப் பற்றிக் கேட்டால்தான் தெரியும், அது எப்படியான ஒரு பேரானந்தத்தை, இது வரை யாரும் தனக்குக் கொடுக்காத அந்த நம்பிக்கையை எப்படி ஒரு பைக் அல்லது ஸ்கூட்டர் தனக்குக் கொடுத்ததென்று அவர்கள் கூறுவார்கள். அந்த வகையில் இந்த நிகழ்வு பைக் ஓட்ட விரும்பும் இன்னும் பல பெண்களுக்கும் ஒரு உந்துதலாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு நிகழ்ச்சியை முடித்து வைத்தார்கள் பீஸ்ட் ரைடர்ஸ் குழுவினர்.