Published:Updated:

ஹூண்டாயின் மின்சார கோனா...

ஹூண்டாய் கோனா
பிரீமியம் ஸ்டோரி
ஹூண்டாய் கோனா

அறிமுகம் ஹூண்டாய் கோனா

ஹூண்டாயின் மின்சார கோனா...

அறிமுகம் ஹூண்டாய் கோனா

Published:Updated:
ஹூண்டாய் கோனா
பிரீமியம் ஸ்டோரி
ஹூண்டாய் கோனா

``புதுசா, கரன்ட்ல ஓடுற கார் வந்திருக்காமே… அதை எப்படி சார்ஜ் பண்றது, ஒரு தடவை சார்ஜ் பண்ண எவ்வளவு நேரமாகும், அதிகபட்சம் எவ்வளவு தூரம் போகும், வேகமா போகாதுன்னு சொல்றாங்களே…’' - எங்கே போனாலும் இப்படிப் பல கேள்விகள் வட்டமடிக்கின்றன. இந்தச் சூழலில்தான் ஹூண்டாய் தன்னுடைய எலெக்ட்ரிக் காரான கோனாவை அறிமுகம் செய்திருக்கிறது. கோனாவைப் போல பேட்டரியில் ஓடக்கூடிய 23 எலெக்ட்ரிக் கார்களை அடுத்தடுத்து களம் இறக்கும் மாபெரும் ‘மின்சாரக் கனவு’ம் ஹூண்டாய்க்கு இருக்கிறது. இந்தக் கனவை 2025-ம் ஆண்டுக்குள் நிகழ்த்திக் காட்ட அதனிடம் திட்டமும் கார்களும் ரெடி. இதை ஏன் சொல்கிறோம் என்றால் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார் காலமாகத்தான் இருக்கும் என்று ஹூண்டாய் திடமாக நம்புகிறது.

சரி, கோனா எப்படி இருக்கிறது?

`அது என்ன கோனா..?’ என்று கேட்டால், இது அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கூட்டத்தில் இருக்கும் ஒரு குட்டித் தீவின் பெயர். சாகசப் பயணிகளின் சொர்க்கபூமியாகத் திகழும் ஊர் என்பதால், அந்தப் பெயரைக் களவாடியிருக்கிறது ஹூண்டாய்.

ஹூண்டாய், கோனாவை எஸ்யூவி என்கிறது. ஆனால் நமக்கு அது ஒரு பெரிய ஹேட்ச்பேக், இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், க்ராஸ்ஓவரின் சாயல்களைக் கொண்ட பெரிய i20 ஆக்டிவ் போலத் தெரிகிறது. கோனா, க்ரெட்டாவைவிட நீளம் குறைவு. அதாவது 4,180 மிமீ-தான். ஆனால் இதன் வீல்பேஸும் அகலமும் க்ரெட்டாவைவிட அதிகம்.

ஹூண்டாயின் 
மின்சார கோனா...

கோனாவில் சத்தம் போடும் IC இன்ஜின் கிடையாது. கார் சூடாகாது. அதனால் சூட்டைக் குளிர்விக்க, பானெட்டில் காற்றோட்டம் தேவையில்லை. ஏர் டேமும் இல்லை. அதனால் மெல்லிய சில்வர் நிற ஒற்றைக் கிரில்லுக்கு கீழே இருக்கும் ஏர் டேமுக்கான ஏரியாவில் அது தன் கலைநயத்தைக் காட்டியிருக்கிறது. ஸ்ப்ளிட் ஹெட்லைட்ஸ், ஸ்லிம் இண்டிகேட்டர் இருப்பதே தெரியாமல், காரின் முகப்பில் இருக்கும் சார்ஜிங் யூனிட் ஆகியவை… `ஓ... எலெக்ட்ரிக் கார்னா இப்படித்தான் இருக்குமோ' என்ற புதிய படிமத்தை நம் மனதில் ஏற்படுத்த முயற்சி செய்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தன்னுடைய வென்யூ மற்றும் க்ரெட்டா ஆகிய இரண்டுக்கும் இடையேயான ஒரு காம்பேக்ட் எஸ்யூவியாக, கோனாவை பொசிஷன் செய்திருக்கிறது ஹூண்டாய். அதனால் எஸ்யூவி மாதிரியே இதற்கும் ரூஃப் ரெயில், சைடு க்ளாடிங், 17 இன்ச் அலாய் வீல், 172 மிமீ (Unladen) அளவுக்கு கிரவுண்ட் கிளியரன்ஸ் கொடுக்கும் உயரமான, உப்பலான வடிவமைப்பு என்று பார்த்துப் பார்த்துச் செதுக்கியிருக்கிறது ஹூண்டாய்.

உள்ளலங்காரம்

காரை ஓட்டுவதற்கு N, R, D, P என்று நான்கு சில்வர் பட்டன்கள் மட்டும்தான். அதனால் காரின் முன்வரிசை `நீட்’டாக இருக்கிறது. ஸ்டீயரிங் உட்பட ஒரு சில பாகங்கள் வென்யூவில் இருப்பதைப்போலத்தான் இருக்கின்றன.

முன்வரிசையில் இருக்கும் சீட்டுகள் எலான்ட்ராவில் இருக்கும் அதே சீட்டுகள்தான். வசதியாக இருக்கின்றன. டிரைவர் சீட்டை பத்துவிதமாக அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். முன்பக்க சீட்டுகள் வென்டிலேட்டட் சீட்டுகள், ஏ.சி காற்றில் உடம்பு சில்லிட்டுப் போனால் சீட்டின் துவாரங்களில் இருந்து இளஞ்சூடான காற்று வந்து சுகம் அளிக்கிறது. ஹெட்ரூம் டைட்டாகவே இருக்கிறது. பின்பக்க விண்ட்ஷீல்ட் குறுகலாக இருப்பதால், பின்பக்கம் சாலையைப் பார்ப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. பின்பக்க சீட்டுகளில் கால்களைத் தாராளமாக நீட்டி மடக்க முடியவில்லை. பின் சீட்டுக்குச் செல்லும் வழி, இன்னும்கூட சிறிது தாராளமாக இருந்திருக்கலாம். 6 காற்றுப்பைகள், ABS, EBD, ESP, ஹில் அசிஸ்ட், டயர் ப்ரஷர் மானிட்டர், க்ரூஸ் கன்ட்ரோல் என்று வசதிகளுக்குப் பஞ்சமில்லை. 332 லிட்டர் டிக்கியில் ஒரு குடும்பத்துக்குத் தேவையான பெட்டி படுக்கைகளை வைக்க முடியும்.

முப்பது லட்ச ரூபாய் கார் என்பதால், ஒரு ப்ரீமியம் காரைப்போல இதற்கு ஃபிட் அண்ட் ஃபினிஷாவது கொடுத்திருக்கலாம்.

ஹூண்டாயின் 
மின்சார கோனா...

1. இந்தியன் ஆயில் பங்க்கில் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன் உண்டு. 2. அட... அருமையான சன்ரூஃப்...

3. பெரிய லக்‌ஸூரி கார் போன்ற கியர் செலெக்டர்.. 4. வொயர்லெஸ் மொபைல் சார்ஜிங் உண்டு.

5. கியர் லீவர் இல்லாததால் சென்டர் கன்ஸோலில் எக்கச்சக்க இடவசதி...

பேட்டரி மற்றும் ஓட்டுதல் அனுபவம்

இதில் இருப்பது 39.2kWh பேட்டரி. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 452 கி.மீ போகலாம் என்று ARAI கணக்கு சொல்கிறது ஹூண்டாய். ஒரே சீராக ஐம்பது கி.மீ வேகத்தில் இரண்டே இரண்டு பேர் மட்டும் பயணித்தால் மட்டுமே இது சாத்தியம்! சாதாரணமாகப் பயணித்தால் நிச்சயம் 300 கி.மீ-தான் செல்ல முடியும் என்று தோன்றுகிறது. ஆனாலும், ஒரு எலெக்ட்ரிக் காருக்கு இது நிச்சயம் பெரிய விஷயம்தான்.

எலெக்ட்ரிக் கார் என்றால் வேகம் போகாது என்ற பொதுச் சிந்தனை கோனாவுக்குச் செல்லுபடியாகாது. 136bhp சக்தியும், 39.5kgm டார்க்கும் கொடுக்கும் கோனா, எந்த வேகத்தில் சென்றாலும் தேவையான சக்தியை அள்ளி அள்ளி வழங்குகிறது. ஆக்ஸிலரேட்டரில் காலை வைத்தாலே டயர்கள் வேகமாகச் சுழல ஆரம்பித்து விடுகின்றன. அதனால் 0 - 100 கி.மீ வேகத்தை இது வெறும் 9.7 விநாடிகளில் எட்டிவிடுகிறது. இதை டெல்லியின் புத் இன்டர்நேஷனல் ரேஸ் மைதானத்தில் ஓட்டியபோது150 கி.மீ வேகம் வரை போக முடிந்தது.

இதில் எக்கோ, எக்கோ ப்ளஸ், கம்ஃபர்ட், ஸ்போர்ட்ஸ் என்று 4 வகையான ‘மோட்ஸ்’ உண்டு. எக்கோ ப்ளஸ்ஸில் ஓட்டினால் அதிகபட்சம் 90 கி.மீ வேகம்தான் போக முடியும். ஏ.சி.யும் தானாக ஆஃப் ஆகிவிடும். இதில் ரீ-ஜெனரேட்டீவ் பிரேக்கிங் என்று இன்னுமொரு அம்சமும் உண்டு. ஆக்ஸிலேட்டரைவிட்டு காலை எடுத்தாலே காரின் வேகம் குறையும். அப்போது பிரேக்ஸும் வேலை செய்ய... அதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் பேட்டரியில் சேமிக்கப்படுகிறது. ரீ-ஜெனரேட்டீவ் பிரேக்கிங் எந்த லெவலில் இருக்க வேண்டும் என்பதை பேடில் ஷிஃப்ட் மூலம் இதில் தேர்வு செய்துகொள்ள முடியும். பழகிவிட்டால் பிரேக் பெடலில் காலையே வைக்காமல் வெறுமனே ஆக்ஸிலரேட்டர் பெடலில் மட்டுமே காலை வைத்து கோனாவை ஓட்ட முடியும். கோனாவை ஸ்போர்ட்ஸ் மோடில் வைத்து ஓட்டினால் அதிகபட்ச சக்தி கிடைக்கிறது.

ஹூண்டாயின் 
மின்சார கோனா...

ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்ஸும் குறைவாக வேலை செய்கிறது.

காரின் எடையில் கணிசமான பங்கு பேட்டரியின் எடை. இது காரின் வீல்பேஸுக்கு இடையே அதாவது சீட்களுக்கு அடியில் இருப்பதால், திருப்பங்களில் வேகமாகச் செல்லும்போதுகூட பாடி ரோல் தெரியவில்லை. ஸ்டீயரிங் - ஷார்ப் என்று சொல்ல முடியாது. ஆனால் இது குறைவான வேகத்தில் லைட்டாகவும், வேகமாகச் செல்லும்போது மெல்ல மெல்ல டைட்டாகவும் மாறுகிறது.

எப்படி சார்ஜ் செய்வது?

காரை வாங்கும்போதே இரண்டு சார்ஜரைக் கொடுத்துவிடுவார்கள். இதில் 7.2kW சார்ஜரை `வால் சார்ஜர்’ என்கிறார்கள். காரை வாங்கும்போது இதை கார் டீலரே நமது கராஜின் சுவரில் அமைத்துக் கொடுத்து விடுவார்கள். இதில் காரை ஃபுல் சார்ஜ் செய்ய 6 மணி நேரம் ஆகும். இந்த பேட்டரி தவிர, 2.8kW சார்ஜரும் கொடுக்கிறார்கள். இதை வீடுகளில் இருக்கும் 3 பின் ஸாக்கெட்டிலேயே பயன்படுத்த முடியும். ஆனால், இதில் கோனாவை ஃபுல் சார்ஜ் செய்ய 19 மணி நேரமாகும்.

இந்த இரண்டு ஆப்ஷன்கள் தவிர, இன்னொரு விதமாகவும் கோனாவை சார்ஜ் செய்ய முடியும். இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களில் பொருத்தப்பட இருக்கும் DC சார்ஜரில் இதை சார்ஜ் செய்தால், 57 நிமிடத்தில் 80% சார்ஜ் செய்துவிட முடியும். ஆனால் எத்தனை நிலையங்களில், எத்தனை ஊர்களில் இந்த வசதி இருக்கும் என்பதற்கெல்லாம் இப்போது விடை இல்லை. ஏனெனில், கோனா இப்போது இந்தியா முழுக்க வெறும் 15 விற்பனை நிலையங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது.

இது விலை அதிகமான கார்தான். இந்த விலையில் நல்ல அந்தஸ்து கொண்ட ஒரு ஜெர்மன் காரைக்கூட வாங்கிவிட முடியும். ஆனால் விலை மட்டுமே எல்லா விஷயங்களையும் தீர்மானிப்பதில்லையே? சுற்றுச்சூழல் குறித்துக் கவலைப்படுகிறவர்கள், இரண்டு கார் வைத்துக்கொள்ளும் அளவுக்கு வசதி கொண்டவர்கள் ஆகியோருக்கு கோனா ஒரு நல்ல சாய்ஸ்.