Published:Updated:

மழை வெள்ளத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை ஓட்டலாமா? பேட்டரி ரேட்டிங்கிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

வாகனத்தின் பேட்டரி IP ரேட்டிங் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?

‘இல்லம் தோறும் வெள்ளம்’ புகுந்துவிட்டது. வீட்டுக்குள் புகுந்த வெள்ள நீரிலிருந்து உடைமைகளைப் பாதுகாக்க அவற்றை – சில அடி உயரத்திலோ, மொட்டை மாடியிலோ ஷிஃப்ட் செய்துவிடலாம். ஆனால் வாகனங்களை?

வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க சென்னை முழுதும் மேம்பாலம் மேம்பாலங்களாகத் தேடித் தேடி கார்/பைக்குகளை பார்க் செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் எலெக்ட்ரிக் வாகனங்கள் சிலவற்றையும் பார்த்தபோதுதான், லேசாக ஸ்பார்க் அடித்தது. ‘ஆமால்ல... மழை நேரங்களில் IC (Internal Combustion) இன்ஜின் வாகனங்களைவிட எலெக்ட்ரிக் வாகனங்களை மழையில் ஓட்டலாமா?’ எனும் கேள்வி எழுந்தது.

பெட்ரோல்/டீசல் வாகனங்கள் மழையில் மூழ்கினால் வாகனங்களுக்குத்தான் பிரச்னை. ஆனால், பேட்டரியில் ஷார்ட் ஷர்க்யூட் ஆகிவிட்டால்? இதில் வேறு ஏதும் அபாயம் உண்டா? அவற்றை மழை நீரில் ஓட்டுவதில் சிக்கல்கள் இருக்கின்றனவா?

பொதுவாக, எலெக்ட்ரிக் வாகனங்கள் - அது காராக இருந்தாலும் சரி; டூ-வீலராக இருந்தாலும் சரி - அதன் எலெக்ட்ரிக் மோட்டாரை போதுமான அளவு மழை நீர் மூழ்காத அளவுக்குத்தான் பொசிஷன் செய்திருப்பார்கள். பெட்ரோல்/டீசல் வாகனங்களை மழை வெள்ளத்தில் ஓட்டும்போது, சைலன்ஸர் மட்டும் மூழ்காமல் பார்த்துக் கொண்டால் ஓகே! வீட்டுக்குப் போய் விடலாம். ஆனால், எலெக்ட்ரிக்கில் பேட்டரியும் மோட்டாரும்தான் இதயமே! இது நனைந்தால்... சிக்கல்தான். ஆனால், இப்போது விற்பனையாகும் அனைத்து வாகனங்களிலும் பேட்டரி நன்றாக ஷீல்டு செய்யப்பட்டிருக்கும். மேலும் – ஏத்தர், ஐ-க்யூப், பஜாஜ் சேட்டக் போன்ற காஸ்ட்லி டூ-வீலர்களில் Well-Insulated, Sealed Enclosure மற்றும் வாட்டர் ப்ரூஃப் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி உண்டு. இதை நன்றாக ஷீல்டு செய்திருப்பதால், நீருக்குள் செல்லும்போதும் – இதன் பெர்ஃபாமன்ஸ் டல் அடிக்குமோ, ஷார்ட் ஷர்க்யூட் ஆகிவிடுமோ என்று கவலைப்படத் தேவையில்லை என்கிறார்கள்.

லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு IP (Ingress Protection) என்று ஒரு ரேட்டிங் உண்டு. ஸ்மார்ட் போன்களுக்கும்கூட இந்த ரேட்டிங் இருப்பதைக் கவனித்திருக்கலாம். உங்கள் போன் செட்டிங்கில் நீங்கள் இதைப் பார்க்கலாம். பேட்டரியின் IP ரேட்டிங் அதிகரிக்க... அதிகரிக்க… மழை நீர், வெயில் போன்றவற்றில் இதற்குப் பாதுகாப்பு உண்டு என்று அர்த்தம்.

ஏத்தர் போன்ற ஸ்கூட்டர்களில் IP67 அளவு என்பதால், கவலைப்படத் தேவையில்லை. இதன் அர்த்தம், இந்த பேட்டரி 25 - 30 நிமிடங்கள் வரை தண்ணீருக்குள் மூழ்கியிருந்தாலும் பிரச்னை இல்லை என்கிறது அந்நிறுவனம். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கென்றே உள்ள சில IP ரேட்டிங் உண்டு.

wiring
wiring

IP0 - இதற்கு ரேட்டிங்கே கிடையாது. வாட்டர் ரெசிஸ்டன்ட் இருந்தாலும், ஈரமான நேரங்களில் மூச்!

IPX4 – தொடர் மழை, தொடர்ந்து நீடிக்கும் பனிக்காலங்களுக்கு இது உகந்ததில்லை.

IPX5 – விட்டு விட்டுப் பொழியும் மழை, கொஞ்சூண்டு நீர்த் தேக்கம் போன்றவற்றை வேண்டுமானால் தாங்கும்.

IP34 – தூசு தும்புகள், கற்கள் நிறைந்த சாலைகள், ஈரமான சாலைகள், மழை, பனி போன்றவற்றைத் தாங்கும். தொடர்மழைக்கு இது செட் ஆகாது!

IP54 – இது 34–க்கு அடுத்த ரேட்டிங். வேண்டுமானால் சின்ன ஆஃப்ரோடிங் செய்து கொள்ளலாம். சேறு சகதி போன்றவற்றுக்குத் தடா! தொடர்மழைக்கும் நோ! இதை வாட்டர் புரூஃப் என்று சொல்ல முடியாது.

IP55 – இது 54–ஐவிட ஒரு படி மேலே! தொடர்ச்சியான மழையில் இதை ஓட்டும் அளவுக்கு இதை செட் செய்துள்ளார்கள்.

IP65 – இந்த ரேட்டிங் உள்ள பேட்டரியைத் தொடர் மழையைத் தாண்டி, ஆல்–டெரெய்ன்களுக்கும் இந்த பேட்டரி தாங்கும்.

IP67 – இப்போதைக்கு இந்த ரேட்டிங்தான் உயர்தரம். ஆல்டெரெய்ன்களிலும், வாகனத்தின் டயர் மூழ்கும் அளவு தண்ணீரிலும் இதை ஓட்டலாம்; 25 முதல் 30 நிமிடங்கள் வரை தண்ணீருக்குள் மூழ்கினாலும் அதைத் தாங்கும் சக்தி கொண்டது என்பதுதான் இந்த IP67 ரேட்டிங்.

‘பேட்டரி ஓகே! எலெக்ட்ரிக் மோட்டார் இருக்கே’ என்று நீங்கள் சொல்வது சரிதான். ‘‘ஒரு IC இன்ஜின் தண்ணீருக்குள் மூழ்கி சேதாரம் ஆகி ரிப்பேர் செய்யும் செலவைவிட, ஒரு எலெக்ட்ரிக் மோட்டார் தண்ணீருக்குள் மூழ்கினால் அதைச் சரி செய்வது ரொம்பவும் எளிது. அதேபோல், மழை நீர் நேராகப் பட்டாலும் டச் ஸ்க்ரீனுக்கும் டேஷ் போர்டுக்கும் எந்தப் பிரச்னையும் வராது’’ என்கிறார் ‘ஏத்தர்’ எலெக்ட்ரிக் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு டெக்னிஷீயன்.

மழை ரைடு
மழை ரைடு

ஆனாலும், சில காஸ்ட்லி ஸ்கூட்டர்களில் டச் ஸ்க்ரீன், டேஷ்போர்டு போன்றவற்றில் பிரச்னை ஏற்பட்டால்… பர்ஸ் பழுத்துவிடும் என்பதும் நிஜம்! ஏத்தர் டச் ஸ்க்ரீனின் IP ரேட்டிங் 65. ஏத்தர் எலெக்ட்ரிக் மோட்டாருக்கு IP66.

எலெக்ட்ரிக் கார்களைப் பொறுத்தவரை, சிலவற்றில் பேட்டரியை அண்டர் சேஸியில் பொருத்தி இருப்பார்கள். மாருதி போன்ற சில ஹைபிரிட் வாகனங்களில் இதை நீங்கள் கவனிக்கலாம். இது பற்றி மாருதி கிவ்ராஜின் சர்வீஸ் வைஸ் பிரசிடென்ட் விஜயராகவன், ‘‘மழை நீர் கெட்டிக் கிடக்கும் இடத்தில் ஹைபிரிட் வாகனங்களை எடுத்துச் செல்வதை நாங்கள் எப்போதுமே ரெக்கமண்ட் செய்வதில்லை. இதுவே பெட்ரோல்/டீசல் வாகனங்கள் என்றால், ஏர்ஃபில்டர் டக்ட்டிலும், சைலன்ஸரிலும் தண்ணீர் போகாதவரை ஓகே! முக்கியமாக, ஹைபிரிட் கார்களை வெள்ளத்தில் பயணம் வேண்டாமே!’’ என்கிறார்.

‘இதுவரை மழை நேரங்களில் என் ஸ்கூட்டர் ஷார்ட் சர்க்யூட் ஆகிடுச்சு’ என்று புகார்கள் வரவில்லை என்றாலும், எலெக்ட்ரிக் வாகனங்களைப் பொறுத்தவரை காஸ்ட்லியான Li பேட்டரியாக இருந்தாலும் சரி - விலை குறைவான லெட்-ஆசிட் பேட்டரி கொண்ட எலெக்ட்ரிக் டூ-வீலராக இருந்தாலும் சரி - எதற்கும் வெள்ளத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களிடம் கொஞ்சம் அலார்ட் ஆறுமுகமாக இருப்பது நல்லதுதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு