கார் க்ராஷ் கார்டுகளில் இவ்வளவு ஆபத்தா... ஏன் தவிர்க்கவேண்டும்? #CarBumper

காருக்கு க்ரேஷ் கார்டு… இவ்வளவு ஆபத்தா? Car Bumper | Extra Car Bumper - பலமா? பலவீனமா?
காரை வாங்கியதும் சிலர் அப்படியே காரின் இயல்பு மாறாமல் ஓட்டுவார்கள். சிலர் சீட் கவர், அலாய் வீல், LED லைட்ஸ், ஸ்பீக்கர் சிஸ்டம், நேவிகேஷன் சிஸ்டம், ரியர் ஸ்பாய்லர், மேலே லக்கேஜ் எடுத்துப் போக ரூஃப் ரெயில் என்று எக்ஸ்ட்ரா ஆக்சஸரீஸ் எல்லாம் பொருத்தி செம கெத்து காட்டுவார்கள். எக்ஸ்ட்ரா ஃபிட்டுங்களில் தேவையானது, தேவையில்லாதது, ஆபத்தானது, அழகானது என்று பலவற்றைப் பிரிக்கலாம். ரிவர்ஸ் கேமரா, சீட் கவர், டோர் மேட், ஜிபிஎஸ் – இவையெல்லாம் நிச்சயம் தேவை. சிலர் காரைப் பாதுகாக்கிறேன் என்று காரின் முன் பக்க பம்பருக்கு முன்னே இரும்பில் க்ராஷ் கார்டு பொருத்துவார்கள். இது காரை பிரமாண்டமாகக் காட்டலாம், அழகைக் கூட்டலாம். ஆனால், இது முழுக்க முழுக்க ஆபத்தானது.

ஒரு காரின் பம்ப்பர் என்பது, ஃப்ளெக்ஸிபிளான ஃபைபர் மற்றும் ப்ளாஸ்டிக்ஸ் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும். இது காரின் ஏரோ டைனமிக்ஸுக்கு மிகவும் உதவும். க்ராஷ்கார்டு பொருத்தும்போது, காரின் டைனமிக்ஸ் நிச்சயம் பாதிக்கும்.
காரின் பம்ப்பரை மிகவும் வளைந்து நெளியும் தன்மை கொண்டு, கார் நிறுவனங்கள் தயாரித்திருப்பதற்குக் காரணம் – இது பாதசாரிகளின் மேல் பட்டால், பாதிப்புகள் மிகவும் குறைவாக இருக்கும் என்பதற்காகத்தான். நாம் எக்ஸ்ட்ரா பம்ப்பர் போட்டால், பாதசாரிகளின் மேல் மோதினால் பெரிய ஆபத்து ஏற்படும்.

ஹேட்ச்பேக், செடான், எஸ்யூவி, க்ராஸ்ஓவர் என்று ஒவ்வொரு காருக்கும் ஒரு கிராஸ் எடையை (Gross Weight) நிர்ணயித்திருப்பார்கள். க்ராஷ் கார்டு பொருத்தும்போது, காரின் எடை அதிகரிக்கும். காரின் கிராஸ் எடையைத் தாண்டி இது போகும்போது, இன்ஜின் திணறும். இதனால் பெர்ஃபாமன்ஸும், மைலேஜும் பாதிக்கும். சிலர் நூற்றுக்கணக்கான எடை கொண்ட இரும்பினாலான க்ராஷ் கார்டைப் பொருத்துவார்கள். இது இன்னும் ஆபத்து.
க்ராஷ் கார்டு பொருத்தும்படி எந்த காரிலும் டிசைன் இருக்காது. இதை இன்ஜின் சேஸியில் கனெக்ட் செய்துதான் வெளிமார்க்கெட்டில் பொருத்துவார்கள். க்ராஷ் கார்டு, இன்ஜின் சேஸியை அழுத்தும். திணறியபடிதான் கார் போகும்.
பம்ப் ஆவது… அதனால்தான் அதற்குப் பெயர் பம்ப்பர். கார்களின் பம்ப்பரை, விபத்தின்போது அதன் தாக்கத்தை கார் உள்வாங்கும்படி இப்படி பம்ப் ஆகும்படி டிசைன் செய்திருப்பார்கள். இதனால், டிரைவர்களுக்கும் பயணிகளுக்கும் பாதிப்பு குறைவாக இருக்கும். க்ராஷ் கார்டு பொருத்தப்பட்ட கார்கள் எதிலாவது நேருக்கு நேர் மோதும்போது, பம்ப்பரின் ஃப்ளெக்ஸிபிளிட்டி குலைந்து போகும். சட்டென இடிக்கும்போது, அது காரைத் தாண்டி உள்ளே இருக்கும் பயணிகளின் மேல்தான் அந்தத் தாக்கத்தை வெளிப்படுத்தும்.
பம்ப்பரைச் சுற்றி க்ராஷ் கார்டு பொருத்தப்பட்ட கார்கள், வேறு ஒரு மெட்டலில் மோதி விபத்துக்குள்ளானால், காரைத் தாண்டி பயணிகளின் கழுத்தெலும்பில்தான் கடைசியாக அதன் பாதிப்பு வந்து விழும். எக்ஸ்ட்ரா கார்டுகள் இருக்கும் கார்கள் விபத்தானால், முதலில் ஃப்ராக்ச்சர் ஆவது நமது கால்கள், அடுத்து கழுத்து.
முக்கியமான ஒரு விஷயம் – விபத்தின்போது காற்றுப்பைகள் விரிவடைய வேண்டும் என்றால், காரின் எல்லா சென்ஸார்களும் பக்காவாக இருக்க வேண்டும். முக்கியமாக சீட் பெல்ட். அதைத்தாண்டி க்ராஷ் கார்டு பொருத்தப்பட்ட கார்களில் விபத்துக்கான காற்றுப்பைகளுக்கான சென்ஸார் சிக்னல் வேலை செய்யாது. இதனால், காற்றுப்பைகள் நிச்சயம் திறக்காது.

காற்றுப்பைகள் இல்லாத கார்களில் அதற்காக எக்ஸ்ட்ரா பம்ப்பர் பொருத்தலாமா என்றால், அதற்கும் கூடாது என்பதுதான் பதில். விபத்தின்போது, கார் ஓரளவுக்கு உருக்குலைந்தால்தான் காருக்குள்ளே இருக்கும் பயணிகள் பாதுகாப்பாக இருக்க முடியும். இதை Crumple Zone என்பார்கள். பம்ப்பர், இன்ஜின், ஃபயர்வால் – இவற்றைத் தாண்டித்தான் கேபினுக்குள் தாக்கம் தெரியும். க்ராஷ் கார்டுகள், இந்த சிஸ்டம் மொத்தத்தையும் காலி செய்துவிடும். அதாவது, க்ராஷ் கார்டுகள் அழகுதான். ஆனால், ஆபத்தானது.
எல்லாம் ஓகே! இவ்வளவு பாதிப்பு கொண்ட எக்ஸ்ட்ரா கார்டுகளை அகற்ற வேண்டும் எனும் ஐடியா, இவ்வளவு நாள் கழித்துத்தான் அரசாங்கத்துக்கு வந்திருக்கா என யாரும் கமென்ட் செய்யக்கூடாது! ஓகேவா?!