காரில் இருக்கும் டேஷ் கேமராவின் வீடியோ... சாட்சியாகப் பயன்படுமா? #DoubtOfCommonMan

பெயருக்கேற்றபடி இதை கார் டேஷ்போர்டின் மேல்பகுதியில் பொருத்திக் கொள்ளலாம். மற்றபடி இதன் பணியும் Go Pro போலவே ஆக்ஷன் கேமராதான்.... அதாவது, முன்னே நடக்கும் விஷயங்களை அப்படியே பதிவு செய்துகொள்வது ஆகும்.
``நம்மில் பலர் கார்களில் டேஷ் கேம் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறோம். இதைச் சட்டபூர்வமாகப் பயன்படுத்துவதில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? ஒருவேளை விபத்து நேர்ந்தால், டேஷ் கேமரா எடுத்திருக்கும் வீடியோவைச் சாட்சியாகக் கொடுக்கலாமா?'' என விகடனின் #DoubtOfCommonMan பகுதியில் கேள்வி எழுப்பியிருந்தார், விகடன் வாசகரான குமார். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.

வாகன ஓட்டிகள் தற்போது கேமராக்களைப் பயன்படுத்துவது என்பது, ஒரு ஹை-டெக் உணர்வைத் தருவதைத் தாண்டிச் சொந்தப் பயன்பாட்டுக்கும் பல வழிகளில் உதவுகிறது. ஆம், பைக்குகளில் நீண்ட நேர/தூரப் பயணங்களை அடிக்கடி மேற்கொள்பவர்கள், ஹெல்மெட்களில் Go Pro வைத்துக்கொண்டுச் செல்வதைப் பார்க்கலாம். இதனால் அவர்கள் பயணிப்பதை அப்படியே வீடியோவாக எடுத்துக்கொள்ள முடியும் என்பது பெரிய ப்ளஸ். ஆனால், நெடுஞ்சாலை/போக்குவரத்து போலீஸாருக்கு, அதுகுறித்த விழிப்புணர்வு பெரிதாக இல்லாதது கொஞ்சம் நெருடல்தான். ஏனெனில் வேறு நகரத்திலிருந்து வரும் அந்த வாகனத்தின் ஆவணங்களைப் பரிசோதிக்கும்போது, Go Pro வைத்திருப்பதற்காக பைக் உரிமையாளரைப் போலீஸார் திட்டுவதை ஆங்காங்கே பார்க்க முடிகிறது. இதுபோன்ற நேரத்தில் அவர்கள் ஏதேனும் லஞ்சம் பெற முயன்றால், அது அப்படியே பதிவு செய்யபட்டுக்கொண்டிருக்கும் என்பதே இதற்கான காரணம்.
இதன் அடுத்தகட்ட வளர்ச்சிதான் Dash Camera எனப்படும் டேஷ்போர்டு கேமராக்கள்; பெயருக்கேற்றபடி இதை கார் டேஷ்போர்டின் மேல்பகுதியில் பொருத்திக்கொள்ளலாம். மற்றபடி இதன் பணியும் Go Pro போலவே ஆக்ஷன் கேமராதான்... அதாவது, முன்னே நடக்கும் விஷயங்களை அப்படியே பதிவுசெய்து கொள்வது ஆகும். இதனால் ஒருவேளை ஏதேனும் விபத்து/திருட்டு நேரும்போது, இந்த கேமராவில் இருப்பதை அப்படியே சாட்சியாகக் கொடுக்கலாம்.
இது இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் மற்றும் போலீஸ் விசாரணை நேரத்தில் பெரிதும் கைகொடுக்கும். இதேபோன்ற கேமராவை வைத்துக்கொண்டு, மும்பையில் உள்ள மாருதி சுஸூகியின் டீலர், தனது காரின் சர்வீஸில் செய்த மோசடியை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார்! இது முக்கிய ஆவணமாகக் கருதப்பட்டதால் (கார் உரிமையாளர் அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றிவிட்டார்), அந்த டீலர் மற்றும் நிறுவன அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தாகவேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டனர்.

இப்படிப் பல ஆதாயங்களைக் கொண்டிருக்கும் Go Pro/Dash Camera-வில், 4K Video Recording - Night Vision - Auto Recording & Saving - Driver Assistance - Alexa/Google Voice Command - Wifi/Bluetooth - Apple/Android Connectivity - Shock & Water Proof With MicroPhone - AUX/USB - SOS - Time Lapse/Parking Mode - Surveillance Mode - G Sensor/GPS போன்ற பல வசதிகள் உண்டு. எனவே, விலை அதிகரிக்க அதிகரிக்க, அதன் திறன் மற்றும் வசதிகளில் எதிர்பார்த்தபடியே முன்னேற்றம் தெரியும். இதில் Go Pro அதனூடே இருக்கும் பேட்டரியில் இயங்கும் என்பதுடன், தேவைப்பட்டால அதை ப்ளூடூத் வாயிலாக மொபைலுடன் இணைத்துக்கொள்ளமுடியும்.

இதில் எடுக்கப்படும் வீடியோக்களை மெமரி கார்டில் சேமித்துக் கொள்ளலாம். ஆனால் Dash Camera-க்கள் நேரடியாகக் காரின் பேட்டரியிலேயே கனெக்ட் செய்துகொள்ள வசதியுண்டு என்பதால், இவை Go Pro-க்களைவிட அதிக நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கின்றன. மேலும் இவை எடுக்கும் காட்சிகள், Go Pro-வை விடத் துல்லியமாகவும் தெளிவாகவும் இருப்பது முக்கியமானது. Go Pro-வில் பல வெர்ஷன்கள் இருப்பதால், அவரவர் தேவை மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற மாடலை வாங்கிக் கொள்ளலாம். இதுவே Dash Camera என்றால் Garmin, Nextbase, Thinkware, Vantrue, BlackVue, Kenwood போன்ற பல பிராண்டுகள் இருக்கின்றன.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்க!