"பெட்ரோல், டீசல் கார்களைத் தயாரிக்கப்போவதில்லை" - ஜாகுவாரின் முடிவுக்குக் காரணம் என்ன?!

ஜாகுவார் நிறுவனத்தை 2008-ம் ஆண்டு இந்தியாவைத் சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
2025-ஆம் ஆண்டு முதல் மின்சார வாகனங்களை மட்டுமே தயாரிக்கப்போவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) அறிவித்துள்ளது. கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் பொருட்டு பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்குத் தடை விதிக்க பல்வேறு உலக நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இங்கிலாந்து அரசும் 2030-ம் ஆண்டு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கான தடை விதிக்கப்படும் என அறிவித்திருந்தது. எனவே பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் 2030-ம் ஆண்டிற்குள் பெட்ரோல் மற்றும் டீசல் ரக வாகனங்களுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட ஆர்வம் காட்டி வருகின்றன.

அந்த வகையில் 2025-ம் ஆண்டு முதல் வெளியாகும் அனைத்து வாகனங்களும் முழுமையான மின்சார வாகனங்களாகவே வெளிவரும் என ஜாகுவார் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், 2030-ம் ஆண்டிற்குள் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் ரக ஜாகுவார் கார் மாடல்கள் முழுமையாக மின்சார இயத்தில் இயங்கும் கார்களாக மாற்றப்படும் எனவும் அறிவித்திருக்கிறது. மின்சார வாகனங்கள் சார்ந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக 3.5 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஜாகுவார் நிறுவனத்தை 2008-ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் மற்றும் டீசல் ரக வாகனங்களைத் தடை செய்ய பல்வேறு நாடுகளும் பல்வேறு கால அளவை நிர்ணயித்துள்ளன. பிரான்ஸ் 2040-லும், நார்வே 2025-லும், கலிஃபோர்னியா 2035-ம் ஆண்டிலும் பெட்ரோல் மற்றும் டீசல் ரக வாகனங்களுக்கான தடை விதிக்கப்படும் என அறிவித்திருக்கின்றன. இந்தியாவும் 2023-ஆம் ஆண்டு முதல் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களுக்கும், 2025-ம் ஆண்டு முதல் 150சிசி-க்கு குறைவான இருசக்கர வாகனங்களுக்கும் தடை விதிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.