`விக்ரம்’ ஹிட் மூலம், சினிமா உலகில் தான் யார் என்று கமலும் லோகேஷும் வெறித்தனமாகக் காட்டிவிட்டார்கள். ‘‘நினைவு தெரிந்த நாள் முதல் நான் உலகநாயகன் ரசிகன். இப்போது அவரையே இயக்கியிருக்கிறேன். `விக்ரம்’ படம் ஒரு ரசிகனிடமிருந்து தலைவனுக்கு நான் கொடுக்கும் பரிசு!’’ என்று உருகியிருந்தார் லோகேஷ்.

அப்படிப்பட்ட தன் ரசிகனுக்குப் பரிசாக, அன்பின் வெளிப்பாடாக ஒரு செம காஸ்ட்லியான சொகுசு கார் ஒன்றைப் பதிலுக்குப் பரிசளித்திருக்கிறார் கமல்ஹாசன். அது, டொயோட்டா நிறுவனத்தின் லெக்ஸஸ் ES300h எனும் சொகுசு செடான் கார். ஏற்கெனவே சோஷியல் மீடியாக்களில் கடிதமும், ஸ்டேட்டஸும், ட்வீட்டுமாக கமல்ஹாசன், லோகேஷுக்கு தன் அன்பைப் பரிமாறிக் கொண்டிருந்தார். இப்போது வழக்கம்போல், எல்லா நடிகர்களையும்போல், ஒரு காஸ்ட்லி காரைச் சத்தமே இல்லாமல் பரிசளித்திருக்கிறார் கமல். (கூடவே, எல்லா உதவி இயக்குநர்களுக்கும் டிவிஎஸ் அப்பாச்சி 160 பைக்குகளும் கமலிடமிருந்து பரிசாக இறங்கியிருக்கின்றன). ஏற்கெனவே ஒரு காஸ்ட்லி காருக்கு உரிமையாளரான லோகேஷுக்கு, இது கமல் கையாலேயே கிடைத்திருக்கும் கார் என்பதில் ஸ்பெஷல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த Lexus ES300h-ல் அப்படி என்ன ஸ்பெஷல்?

லெக்ஸஸ் என்பது தனவான்களின் ஸ்டேட்டஸ் கார். லோகேஷுக்கும் இப்போது சினிமா இண்டஸ்ட்ரியில் ஒரு ஸ்டேட்டஸ் இருக்கிறதுதானே! அதனால்தான் லெக்ஸஸைத் தேர்ந்தெடுத்தாரோ என்னவோ உலகநாயகன். லெக்ஸஸ் என்பது டொயோட்டா நிறுவனத்தின் ஒரு லக்ஸூரி பிராண்ட். டொயோட்டாதான் லெக்ஸஸின் பேரன்ட் நிறுவனம். இரண்டுக்கும் ஹெட்குவார்ட்டர்ஸ் வேறு வேறு இடங்களாக இருந்தாலும், டொயோட்டா நிறுவனத்தில்தான் லெக்ஸஸ் லக்ஸூரி கார்கள் விற்பனை செய்யப்படும்.
கமல், ஒரு டொயோட்டா மற்றும் எஸ்யூவி விரும்பி என்றுகூடச் சொல்லலாம். அவர் ஏற்கெனவே டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிரேடோ கார் வைத்திருந்தார். இப்போதும் அவர் சென்னையில் உள்ள லெக்ஸஸ் ஷோரூமின் வாடிக்கையாளர். லெக்ஸஸின் 1.75 கோடி ரூபாய் எஸ்யூவிவை அவர் வைத்திருப்பதாகத் தகவல். 'விக்ரம்' படத்தில்கூட லேண்ட்ரோவர் டிஃபெண்டர் எஸ்யூவியைப் பார்த்திருப்பீர்கள்தானே! இப்போது, தனக்குப் பிடித்த அதே நிறுவனத்தின் லெக்ஸஸ் காரை லோகேஷுக்குப் பரிசளித்திருக்கிறார் கமல். ஆனால், எஸ்யூவி இல்லை; ஒரு செடான்.
ES300hதான் லெக்ஸஸ் நிறுவனத்தில் என்ட்ரி லெவல் சொகுசு செடான் கார். இது இரண்டு வேரியன்ட்களில் இருக்கிறது. Exquisite மற்றும் Luxury. எல்லா லெக்ஸஸ் கார்களின் முகப்பிலும் L எனும் லோகோ, ஒரு வித்தியாசமான புளூ ஷேடில் அழகாக மின்னும். அப்படி மின்னினால், அது ஹைபிரிட் என்று அர்த்தம். இப்போது இந்த ஃபார்முலாவைத்தான் ஹோண்டாவில் இருந்து எல்லோரும் கடைப்பிடிக்கிறார்கள். இதன் பேஸ் வேரியன்ட்டின் விலை சுமார் ரூ.68 லட்சம் வரும். உலக நாயகன் அளித்திருப்பது அநேகமாக டாப் வேரியன்ட்டான 'Luxury'யாகத்தான் இருக்கும். இதன் விலை சுமார் ரூ.75 லட்சம் வரும்.


இதன் இன்டீரியர், விமானத்தின் காக்பிட் போல சும்மா மிரட்டலாக இருக்கும். இதன் டச் ஸ்க்ரீன், பெரிய டேப்லெட் போல இருக்கும். இதன் அளவு 12.3 இன்ச். லெக்ஸஸின் இன்னொரு ஸ்பெஷல் – இதன் கட்டுமானமும், ஏரோடைனமிக் டிசைனும். GAK (Global Architecture-K) என்னும் உறுதியான கட்டுமானத்தில் தயாரான கார் இது. விபத்தின்போது பெரிய சேதாரம் ஏற்படாமல் இருக்க, அதிகப்படியான ஹை ஸ்ட்ரென்த் ஸ்டீலைக் கொண்டு ரெடி செய்திருப்பார்கள். காற்றைக் கிழித்துக் கொண்டு விமானம் போல் பறக்கும் இந்த கார், வெறும் 8.9 விநாடிகளில் 0-100 கிமீ-யைக் கடக்கும்.
இது ஒரு ஹைபிரிட் கார். அதாவது, பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் இரண்டிலும் ஓடக் கூடிய கார். எலெக்ட்ரிக் மோட்டாரோடு இதில், 204 செல்கள் கொண்ட மிகப்பெரிய நிக்கல் ஹைட்ரைடு பேட்டரி உண்டு. ஸ்டார்ட்டிங் ட்ரபுளே லெக்ஸஸில் இருக்காது. இதிலிருக்கும் 2,487 சிசி – 4 இன்லைன் சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினின் பவர், 218 bhp. இந்த அதிகப்படியான காசுக்கு இந்த பவர் ரொம்பக் குறைவு என்பது மட்டும்தான் இந்த லெக்ஸஸின் ஒரே குறை. எலெக்ட்ரிக் மோட்டாரில் ஓட்டுவதற்கு டிரைவ் மோடும் உண்டு. சத்தம்… சுத்தமாக வராது இந்த லெக்ஸஸில்! பிரேக் பிடிக்கப் பிடிக்க… தானாக பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் இந்த லெக்ஸஸ் ES300h.


பொதுவாக, இத்தனை பெரிய காஸ்ட்லி கார்களின் மைலேஜ் சிங்கிள் டிஜிட்டில்தானே இருக்கும்! ஆனால், இந்த ES300h–ன் பெரிய ஸ்பெஷலே இதன் மைலேஜ்தான். அட, மாருதி கார் மாதிரி இது மைலேஜ் தரும் என்றால் நம்புவீர்களா? சுமார் 22.6 கிமீ என்று க்ளெய்ம் செய்கிறது லெக்ஸஸ். ஆனால், 17 - 20 கிமீ மைலேஜ் தருகிறது என்று சொல்லும் லெக்ஸஸ் வாடிக்கையாளர்கள் உண்டு. காரணம், இதன் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் சிஸ்டமும்தான். ஒரு லக்ஸூரி கார், இத்தனை மைலேஜ் தருவதெல்லாம்... சூப்பர்!
மற்றபடி இந்த காரில் 360 டிகிரி கேமரா, சாலையை விட்டுப் பார்வையை எடுக்காமல் விண்ட்ஷீல்டிலேயே டிஸ்ப்ளே தெரியும் ஹெட்அப் டிஸ்ப்ளே, 17 ஸ்பீக்கர் சிஸ்டம், டிரைவர் – பயணிகள் என எல்லோருக்கும் சேர்த்து காரைச் சுற்றி 10 காற்றுப்பைகள், (எத்தனை உருண்டாலும் பயணிகளுக்குக் கீறல்கூட விழாதாம்!), பக்கவாட்டிலும் ரொம்பதூரம் வெளிச்சம் பீய்ச்சியடிக்கும் Wide Angle ஹெட்லைட்ஸ், எத்தனை ஈரத்திலும் வழுக்காமல் ஓடும் 19 இன்ச் டயர்கள் கொண்ட VSC (Vehicle Stability Control), வெயில் காலத்தில் முதுகில் வியர்க்காமல் இருக்கும் வென்டிலேட்டட் சீட்கள் என்று ஏகப்பட்ட வசதிகள் இதில் உண்டு.
மொத்தத்தில், இந்த காரை ஓட்டும்போது, ஏதோ கடவுளே நமக்காக கார் ஓட்டுவதுபோல், அத்தனை பாதுகாப்பானதாக இருக்கும். ஆண்டவர் கொடுத்த காராச்சே! பின்னே இருக்காதா!