Published:Updated:

கர்நாடகாவில் அனைத்து வாகனங்களுக்கும் தடை... கண்டவுடனேயே பறிமுதல்; 144 முடிந்த பின் விடுதலை!

கர்நாடகா போலீஸ்
கர்நாடகா போலீஸ்

கர்நாடகாவில் உத்தரவு அமலுக்கு வந்த முதல் நாளே தடையை மீறியதற்காக 6,852 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க மட்டுமே வெளியில் வரலாம் என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது. இருந்தும், வாகனங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த கர்நாடக அரசு அதிரடியான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன்மூலம் ஏப்ரல் 14 வரை வாகனங்கள் சாலையில் வருவதற்குத் தடை விதித்துள்ளது. மேலும், இந்தத் தடையை மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஊரடங்கு முடிந்த பிறகே, தரப்படும் எனக் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா போலீஸ்
கர்நாடகா போலீஸ்

இதுகுறித்து கர்நாடக காவல் துறை இயக்குநர், தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தியைப் பதிவிட்டிருந்தார். அதில் "இந்த அறிவிப்பு ஒன்றும் ஏப்ரல் ஃபூல் விளையாட்டு இல்லை. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பயன்பாட்டிற்கு ஏப்ரல் 14 வரை தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்" என்றார்.

உத்தரவு அமலுக்கு வந்த முதல் நாளே தடையை மீறியதற்காக 6,852 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதை, பெங்களூர் காவல்துறை ஆணையர் பாஸ்கர் ராவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் ஏப்ரல் 1 இரவு 7 மணி வரை மட்டுமே 6,321 இருசக்கர வாகனங்களும், 227 மூன்று சக்கர வாகனங்களும், 304 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா போலீஸ்
கர்நாடகா போலீஸ்

இந்தத் தடையானது அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மற்றும் மருத்துவ அவசரக் கால வாகனங்களுக்குப் பொருந்தாது. பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய மற்றும் மருந்து பொருள்களை வாங்க அருகில் இருக்கும் கடைகளுக்கு நடந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்தத் துரித நடவடிக்கை மூலம் மக்கள் அநாவசியமாகக் கூடுவதையும் தவிர்க்க முடியும். மேலும், அவசரக் கால உதவிக்குப் பொதுமக்கள் ஆம்புலன்ஸையே பயன்படுத்துமாறு கர்நாடக அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

இதனால் நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதோடு, சாலையில் ஏற்படும் கூட்ட நெரிசலையும் குறைக்க முடியும். இதுமட்டுமல்ல, காவல்துறையின் 250 பாட்ரோல் கார்களை மக்களின் அவசரக் கால வாகனங்களாக மாற்றியுள்ளது கர்நாடக அரசு. இந்தச் சேவையைப் பயன்படுத்த மக்கள் 100-க்கு அழைத்தால் போதும். கர்நாடக அரசின் இந்த  முடிவிற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இப்படி ஒரு நடைமுறை சாத்தியமா?

அடுத்த கட்டுரைக்கு