`கவாஸாகியின் 1000சிசி அட்வென்ச்சர் டூரர்..!' - வெர்சிஸ் பைக்கில் என்ன ஸ்பெஷல்?

இந்த விலை உயர்வுக்குப் பிறகும்கூட, 1000சிசி அட்வென்ச்சர் டூரர் செக்மென்ட்டில் கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க பைக்காக வெர்சிஸ் 1000 இருக்கிறது.
BS-6 விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பே, தனது சில பைக்குகளின் விலைகளை உத்தேசமாக அறிவித்திருந்தது கவாஸாகி. நின்ஜா 650, W800, வெர்சிஸ் 1000 ஆகியவை அவற்றில் அடக்கம். ஆனால், ஆச்சர்யப்படும் வகையில், சொன்னதைவிடக் குறைவான விலை உயர்வுடனேயே அந்த பைக்குகள் களமிறங்கியிருக்கின்றன. தற்போது அதன் நீட்சியாக, வெர்சிஸ் 1000 பைக்கின் BS-6 வெர்ஷனை, 10.99 லட்ச ரூபாய்க்கு (டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை) அறிமுகப்படுத்தியிருக்கிறது கவாஸாகி.

இது கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் அறிமுகமான ஃபேஸ்லிஃப்ட்டைவிட 30,000 ரூபாய் மட்டுமே அதிகம். இந்த விலை உயர்வுக்குப் பிறகும்கூட, 1000சிசி அட்வென்ச்சர் டூரர் செக்மென்ட்டில் கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க பைக்காக இது இருக்கிறது. வெர்சிஸ் 1000-ன் புக்கிங் தொடங்கிவிட்டதுடன், டெலிவரிகள் ஜூனில் தொடங்கலாம். Pearl Stardust White/Metallic Spark Black மற்றும் Candy Lime Green/Metallic Spark Black எனும் இரு கலர் ஆப்ஷன்களில் வரும் இந்த கவாஸாகி பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 150 மி.மீ-தான் என்பது நெருடல்.
கடந்த ஆண்டில் வெளியான வெர்சிஸ் 1000 ஃபேஸ்லிஃப்ட்டில் இருந்த அதே அம்சங்கள், இந்த BS-6 மாடலிலும் தொடர்கின்றன. அதன்படி இரட்டை LED ஹெட்லைட், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட் ஸ்க்ரீன், LCD ஸ்க்ரீன் உடனான அனலாக் - டிஜிட்டல் மீட்டர், 17 இன்ச் அலாய் வீல்கள் (முன்: 120/70 ZR-17 டயர், பின்: 180/55 ZR-17 டயர்), 40W DC Socket ஆகியவை அதற்கான உதாரணம். மற்றபடி எலெக்ட்ரானிக் க்ரூஸ் கன்ட்ரோல், 2 பவர் மோடுகள், Kawasaki Traction Control (KTRC), Kawasaki Cornering Management Function (KCMF), Kawasaki Intelligent anti-lock Brake System (KIBS), Bosch Five-Axis IMU, முன்பக்க ரேடியல் மோனோ ப்ளாக் டிஸ்க் கேலிப்பர் என டெக்னிக்கலாகவும் இந்த கவாஸாகி பைக் அசத்துகிறது.

255 கிலோ எடையுள்ள பெரிய பைக்காக இருந்தாலும், ரிலாக்ஸ்டான சீட்டிங் பொசிஷன் காரணமாக, இதைக் கையாள்வது கொஞ்சம் சுலபம்தான். மேலும் பெரிய 21 லிட்டர் பெட்ரோல் டேங்க் & 1,520 மிமீ வீல்பேஸ், இது ஒரு அட்வென்ச்சர் டூரர் என்பதை உறுதிபடுத்துகிறது. ட்வின் டியூப் அலுமினிய ஃபிரேம் - 43 மிமீ USD & Back-Link மோனோஷாக், சிறப்பான ஓட்டுதலுக்கு கியாரன்டி.
வெர்சிஸ் 1000 பைக்கில் இருக்கும் 1,043 சிசி - இன்லைன் 4 சிலிண்டர் இன்ஜின், ஸ்லிப்பர் க்ளட்ச் மற்றும் எலெக்ட்ரானிக் த்ராட்டில் வால்வ்களைக் கொண்டிருக்கிறது. நின்ஜா 1000 பைக்கில் இருக்கும் அதே இன்ஜின்தான் என்றாலும், அட்வென்ச்சர் டூரருக்கு ஏற்றபடி ரீடியூன் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இது வெளிப்படுத்தும் 120bhp@9,000rpm பவர் மற்றும் 10.4kgm@7,500rpm டார்க்கை ஸ்மூத்தாக வெளிப்படுத்தும் என நம்பலாம். 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த ஷார்ட் ஸ்ட்ரோக் இன்ஜின், 16 வால்வ்கள் & Fi உதவியுடன் இயங்குகிறது.

பிஎம்டபிள்யூ F900XR, டுகாட்டி Multistrada 950, ட்ரையம்ப் டைகர் 900 GT-Line, ஹோண்டா CRF1100L ஆஃப்ரிக்கா ட்வின் ஆகியவற்றுடன் வெர்சிஸ் 1000 போட்டிபோடுகிறது. இந்த அட்வென்ச்சர் டூரர் பைக், CKD முறையில் பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, புனேவில் உள்ள தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது. இதர வெர்சிஸ் மாடல்களின் (300சிசி, 650சிசி) BS-6 வெர்ஷன்களை எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாம்.