Published:Updated:

வால்வோவுக்குப் போட்டியா வருதா கியா எலெக்ட்ரிக்?

கியா எலெக்ட்ரிக்
பிரீமியம் ஸ்டோரி
கியா எலெக்ட்ரிக்

கியா EV6 ஏற்கெனவே வெளிநாட்டு ஆட்டோமொபைல் விமர்சகர்களிடம் நல்ல பெயர் வாங்கி, நன்றாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. எனவே, இது இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

வால்வோவுக்குப் போட்டியா வருதா கியா எலெக்ட்ரிக்?

கியா EV6 ஏற்கெனவே வெளிநாட்டு ஆட்டோமொபைல் விமர்சகர்களிடம் நல்ல பெயர் வாங்கி, நன்றாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. எனவே, இது இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

Published:Updated:
கியா எலெக்ட்ரிக்
பிரீமியம் ஸ்டோரி
கியா எலெக்ட்ரிக்

சமீபத்தில் ஒளிவுமறைவு இல்லாமல் ஹைதராபாத்தின் சாலைகளில் கியா தனது EV6 எலெக்ட்ரிக் க்ராஸ்-ஓவரை டெஸ்ட் செய்து கொண்டிருந்தது. கியா வட்டாரங்களில் மே மாத இறுதியில் இதன் புக்கிங் தொடங்கப்படும் எனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், கியா EV6 ஏற்கெனவே வெளிநாட்டு ஆட்டோமொபைல் விமர்சகர்களிடம் நல்ல பெயர் வாங்கி, நன்றாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. எனவே, இது இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

டிசைன்:

மார்வெல் சூப்பர் ஹீரோ அயர்ன் மேன் நிச்சயம் தனது கார் கலெக்ஷனில் கியா EV6 காரைச் சேர்த்திருப்பார். அவரைப்போலவே, இது ஸ்டைலாகவும், கவர்ச்சியாகவும் அதே சமயம் ஸ்மார்ட்டாகவும் இருக்கிறது. எலெக்ட்ரிக் கார் என்பதால், கியா தனது ட்ரேட் மார்க் புலி மூக்கு கிரில்லை நினைவு கொள்ள வைக்கும் கிரில் டிசைனில் இருந்து விலகி, தனித்துவமான முகப்பை EV 6-க்குக் கொடுத்துள்ளது. பின்பக்கம் சாயும் கூரை மற்றும் டெயில்கேட்டைச் சுற்றி வளைத்த லைட் பார், ஆஸ்டன் மார்ட்டின் DBXபோலத் தோற்றமளிக்கிறது. பெரிய நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் விழாக்களில் ஸ்டைலாகப் போய் இறங்கலாம்.

உட்புற வசதிகள்:

EV6 -ன் வெளிப்புறத்தைப் பார்த்துவிட்டு, உட்புறம் பார்க்கும்போது வியக்கும் அளவுக்கு டிசைன் இல்லையென்றாலும், நேற்று வந்த தொழில்நுட்பம் வரை சேர்த்து நவீனமாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது கியா.

சமீபத்திய மெர்சிடீஸ் கார்களைப் போலவே தோற்றமளிக்கும் இரட்டை 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் டேஷ்போர்டில் ஆதிக்கம் செலுத்துகின்றன. டேஷ்போர்டில் இருந்து விலகி தனியாக `மிதக்கும்’ சென்டர் கன்சோல் வடிவமைப்பு உட்புறத் தோற்றத்துக்குச் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.

வால்வோவுக்குப் போட்டியா வருதா கியா எலெக்ட்ரிக்?

இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆடம்பரமாகத் தெரியும் அதேசமயம், பயன்படுத்த மிகவும் எளிதானது. ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இரண்டும் கொண்டுள்ளது. டாப் எண்ட் மாடல்கள் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் பெறுகின்றன. கிராஃபிக்ஸ் தெளிவாக இருப்பதோடு, சூரிய ஒளியைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒரு சிறப்புப் பூச்சைத் திரைகளில் பயன்படுத்தியுள்ளது கியா.

ஆனால், டெஸ்லா மாடல் 3 போல எல்லாக் கட்டுப்பாடுகளையும் டச் ஸ்கிரீனில் கொண்டு வராமல், AC போன்ற அடிப்படை கன்ட்ரோல்களை டச் பட்டனில் சென்சிட்டிவ் டைப்பில் கொடுத்துள்ளது கியா. டிரைவிங்கின்போது சாலையை விட்டுப் பார்வையைத் திருப்ப வேண்டியதில்லை என்பதால், இது ஒரு நல்ல விஷயம். இன்னும் சிறப்பாக, க்ளைமேட் கன்ட்ரோல் பட்டனே இன்ஃபோடெயின் மென்ட் சிஸ்டத்திற்கான ஷார்ட்கட் ஆகவும் செயல்படுகிறது.

வால்வோவுக்குப் போட்டியா வருதா கியா எலெக்ட்ரிக்?

காக்பிட்டில் உள்ள டிஜிட்டல் டயல் டிஸ்ப்ளே பெரியது, தெளிவானது. டிரைவருக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் அதிக சுமை இல்லாமல் வழங்குகிறது. மேலும் ஸ்டீயரிங் வீல் வடிவமைப்பும் புத்திசாலித்தனமாக உள்ளது. இன்போடெய்ன்மெண்ட் சிஸ்டம்போல டச் சென்சிட்டிவ் பட்டன்களை ஸ்டீயரிங்கில் வைக்காமல், எளிமையான ஸ்விட்சுகளை வைக்க வேண்டும் என கியா நினைத்தது ஸ்மார்ட்டான மூவ். அதனால், வாகனம் ஓட்டும்போது காட்சிகளை எளிதாக மாற்ற முடியும்.

முன்பக்கத்தில் நிறைய இடவசதி. அதே அளவுக்குப் பின்பக்கப் பயணிகளுக்கு ஏராளமான லெக் ரூம் உள்ளது EV6–ல். மேலும் முற்றிலும் தட்டையான தளம் காரணமாக, பெரியவர்கள் அதிக புகார் இல்லாமல் நடுவரிசை இருக்கையைப் பயன்படுத்தலாம். இதன் சாய்வான கூரையின் காரணமாக, உயரமான பெரியவர்களுக்குச் சற்று இறுக்கமாக இருப்பது ஹெட்ரூம் மட்டுமே! ஒட்டுமொத்தமாக பாகங்களின் தரம் மற்றும் பிட் அண்ட் ஃபினிஷ் மிகவும் நன்றாக உள்ளது. இந்திய மாடலில் காஸ்ட் கட்டிங் என்ற பெயரில் கியா தரத்தில் சமரசங்கள் செய்யாது என நம்புவோம்.

பவர் மற்றும் சார்ஜிங்:

UK-ல் கியா EV6 ஒற்றை மாடலில் ரியர் வீல் டிரைவ் அல்லது 4 வீல் டிரைவ் ஆப்ஷனுடன் வருகிறது. ஒற்றை மோட்டார் ரியர்-வீல் டிரைவ் மாடல் 228 hp-ஐ வெளியிடுகிறது. இது 0-100 km/h வேகத்தை 7.3 வினாடிகளில் அடைந்து விடுகிறது.

77kWh பேட்டரி மூலம் ரியர்- வீலில் இருக்கும் சிங்கிள் மோட்டாரை இயக்கும் மாடல், அதிகபட்சமாக 328 மைல்கள் வரை செல்லும். ஏறக்குறைய 500 கிமீ ரேஞ்ச் அளிக்கிறது EV6. நகரப் பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கும் இந்த ரேஞ்ச், நம்ம ஊர் நெடுந்தூரப் பயணங்களுக்கு செட் ஆகுமா என்பதை டெஸ்ட் டிரைவ் செய்த பிறகுதான் உறுதிப்படுத்த முடியும். ஒரு சிறிய ஒப்பீட்டுக்கு, சென்னையில் இருந்து கோவை அடைய 500 கிமீ பயணிக்க வேண்டும் என்பதால், நடுவில் சேலத்தில் சார்ஜ் செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இதில் ஒரு புத்திசாலித்தனத்தைக் கையாண்டுள்ளது கியா. ப்ரீமியம் கார்களில் மட்டுமே காணப்படும் 800V சார்ஜிங் அமைப்பைக் கொண்டுள்ளது EV6. இதனால், 350 kW விகிதத்தில் சார்ஜிங் செய்யும் முடியும். ‘சிம்பிளா சொல்லுங்க பாஸ்’ என நீங்கள் சொல்வது புரிகிறது.

ஹூண்டாய் மற்றும் கியா சார்ஜரை நீங்கள் கண்டுபிடிக்க முடிந்தால், நான்கு நிமிடங்களில் 100 கிமீ செல்வதற்கான சார்ஜை ஏற்றிக் கொள்ள முடியும்! மேலும், 10-80% சார்ஜை வெறும் 18 நிமிடங்களில் அடைந்து விடும். ஆனால், நம்மூரில் பெரும்பான்மையான சார்ஜிங் ஸ்டேஷனில் இருக்கும் 50kW சார்ஜரை கொண்டு இதே 80% சார்ஜை ஏற்ற சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும்.

325hp - ஐ வெளிப்படுத்தும் 4 வீல் டிரைவ் வெர்ஷனும் அதே 77.4kWh பேட்டரியுடன்தான் வருகிறது. இதனால் 2 வீல் டிரைவ் வெர்ஷனைக் காட்டிலும் ரேஞ்ச் சற்று குறைவாக 316 மைல்களைக் கொண்டுள்ளது. கியா தரும் 7kW ஹோம் சார்ஜரை கொண்டு 0% -ல் இருந்து 100% வரை சார்ஜ் செய்ய சுமார் 10 மணி நேரம் ஆகும். எனவே, இது இரவு சார்ஜிங்குக்கு மட்டுமே உகந்ததாக இருக்கும்.

சார்ஜிங்-க்கு அடுத்து இரண்டாவது புத்திசாலித்தனமான அம்சம், ‘Vehicle 2 Load’ (V2L) என கியா அழைக்கும் ஒரு சிஸ்டம். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், காரில் ஒரு கெட்டில் அல்லது மைக்ரோவேவ் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களைப் பொருத்திக் கொள்ளலாம். இதனால் நெடுந்தூரப் பயணங்களின்போது டீ, காபி, நூடுல்ஸ் போன்றவற்றைத் தயாரித்துக் கொள்ளலாம். தற்போது, ஒரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் இருந்து இன்னொரு போனுக்கு சார்ஜ் ஏற்றுவதைப்போல, EV6–ல் இருந்து மற்றொரு EV-க்கு ரிவர்ஸில் சார்ஜ் செய்யலாம்.

வால்வோவுக்குப் போட்டியா வருதா கியா எலெக்ட்ரிக்?

என்ன விலையில் வரும்?

தற்போது EV6 - ன் பேஸ் மாடல் 41,695 பிரிட்டிஷ் பவுண்டுகளுக்கு விற்பனையாகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் 41.5 லட்சம். ஹோமோலொகேஷன் செய்யாமல் ஆண்டுக்கு 2,500 யூனிட் கார்களை இறக்குமதி செய்ய முடியும் என்பதால், முதற்கட்டமாக 100 யூனிட் EV6 –களை CBU முறையில் கியா இறக்குமதி செய்யும். இதனால் விலை 60 லட்சத்துக்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், எப்போதும்போல விலை அறிவிக்காமல் வரும் மே 26 முதல் புக்கிங் தொடங்குகிறது. வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறும் வரவேற்பைப் பொருத்து விலை நிர்ணயம் செய்யும் உத்தியை இந்த முறையும் கையாள இருக்கிறதாம் கியா.

இதே செக்மென்ட்டில் தற்போதுதான் XC40 ரீசார்ஜ் - ஐ வால்வோ வெளியிட்டது. வால்வோ-வும் இன்னும் விலை அறிவிக்காத நிலையில், இரண்டும் ஒரே பட்ஜெட்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். ஒப்பீட்டளவில், லக்ஸூரி மாடலான வால்வோ-வைத் தாண்டி ப்ரீமியம் மாடலான கியா வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism