Published:Updated:

"மெக்கானிக்னா பொண்ணு கொடுக்க மாட்டேங்கிறாங்க!"

 சண்முக சுந்தரம்
பிரீமியம் ஸ்டோரி
சண்முக சுந்தரம்

‘‘சின்ன வயசுலயே ஸ்பானர் பிடிச்ச கைம்மா! பார்க்கிறதுக்கு முரடா இருந்தாலும் பைக்குங்க மேல ரொம்பப் பாசமா இருப்பேன்!’’

"மெக்கானிக்னா பொண்ணு கொடுக்க மாட்டேங்கிறாங்க!"

‘‘சின்ன வயசுலயே ஸ்பானர் பிடிச்ச கைம்மா! பார்க்கிறதுக்கு முரடா இருந்தாலும் பைக்குங்க மேல ரொம்பப் பாசமா இருப்பேன்!’’

Published:Updated:
 சண்முக சுந்தரம்
பிரீமியம் ஸ்டோரி
சண்முக சுந்தரம்

குழந்தைத் தொழிலாளிகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று காலங்காலமாக எல்லாத் திசைகளிலும் பேசப்பட்டு வந்தாலும், அதில் சிக்காமல் இருக்கும் குழந்தைகள் கொஞ்சம் பேர்தான். அப்படி ஒரு குழந்தைத் தொழிலாளிதான் மேடவாக்கத்தைச் சேர்ந்த சண்முக சுந்தரம். இப்போது அந்தக் குழந்தைக்கு 43 வயதாகிறது. ‘‘சின்ன வயசுலயே ஸ்பானர் பிடிச்ச கைம்மா! பார்க்கிறதுக்கு முரடா இருந்தாலும் பைக்குங்க மேல ரொம்பப் பாசமா இருப்பேன்!’’ என்கிறார் சண்முக சுந்தரம்.

நிஜம்தான். பைக்குகளை அவர் கையாளும் விதத்திலேயே தெரிந்தது – அவரது குழந்தை உள்ளமும், தொழிலில் உள்ள மெச்சூரிட்டியும்!

‘‘ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிற வரைக்கும் இங்கிலீஷ் மீடியம்தான் படிச்சேன். அப்பதான் அப்பா இறந்துட்டாரு… பணம் கட்ட முடியாத கஷ்டத்துல கவர்மென்ட் ஸ்கூல்ல சேர்த்தாங்க. அங்க போயி நாலாம் கிளாஸ் வரைக்கும் படிச்சேன். படிப்பு ஏறல. காரணம், பைக்ஸ் மேல வந்த காதல். பைக் மெக்கானிக் ஆகணும்னு முடிவு பண்ணி ஸ்பானர் பிடிச்சேன்.

அப்படியே கொஞ்சம் கொஞ்சமா தொழிலைக் கத்துக்கிட்டேன். இன்னிக்கு மேடவாக்கத்தில் சத்யா ஆட்டோஸ்னு கடையே வெச்சிட்டேன்!’’ என்று சொல்லும் சண்முகம், ஒரு மல்ட்டி பிராண்ட் பைக் மெக்கானிக். ஸ்கூட்டி முதல் புல்லட் வரை எல்லாவற்றையுமே பிரித்து மேய்கிறார். BS-4 முதல் BS-6 வரை எல்லா வாகனங்களும் அவர் கராஜில் மராமத்துப் பணிகளுக்காக நின்று கொண்டிருக்கின்றன. ‘‘முன்பெல்லாம் 2 ஸ்ட்ரோக் வாகனங்களைப் பிரித்து மேய்வது பெரிய டாஸ்க்காக இருக்கும். இப்போது BS-6 வாகனங்கள் நல்ல தொழில்நுட்பத்துடன் வந்துவிட்டன. வேலையும் எங்களுக்குச் சுலபமாகவே இருக்கிறது!

எந்த ஒரு தொழிலா இருந்தாலும் அதை லவ் பண்ணிப் பண்ணணும். அந்தத் தொழில்ல முழுவித ஈடுபாடு இருக்கணும். மெக்கானிக் தொழில் எனக்குள்ள குடி கொண்டதைச் சுலபமா என்னால நிறைய இடத்தில உணர முடிந்தது. உதாரணத்துக்கு, சிக்கலான ஏதாவது ஒரு கஸ்டமர் கம்ப்ளெய்ன்ட் வந்தா எனக்குத் தூக்கமே வராது. அதுதான் தொழில உள்வாங்கி விரும்பிச் செய்கிற விஷயமா நான் பார்க்கிறேன்!’’ எனும் சண்முக சுந்தரம், இந்த மெக்கானிக் தொழிலுக்காகத் திருமணமே செய்து கொள்ளவில்லையாம். அதற்குக் காரணமாக அவர் சொன்ன விஷயமும் கேட்பதற்குச் சங்கடமாகவே இருந்தது.

‘‘43 வயதாகியும் எனக்குக் கல்யாணம் ஆகலை. நான் வேணும்னே கல்யாணம் பண்ணிக்கலைனு நினைச்சுடாதீங்க! பொண்ணு கிடைக்காததுதான் மேடம் நான் பேச்சிலரா இருக்கிறதுக்குக் காரணம்! மெக்கானிக்னாலே அழுக்கு அப்படிங்கிற எண்ணம்தான் எல்லார் மனசுலயும் இருக்கு. 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குறவங்களுக்குக் கிடைக்கிற மரியாதை, 50 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிற எங்களுக்குக் கிடைக்க மாட்டேங்குது! காரணம், படிப்பு. அப்படி இப்படின்னு சொல்லி பொண்ணு தேடுனோம், பொண்ணு எதுவும் அமையலை, அதுக்காகக் கவலைப்படலை! அதான் எனக்கு பைக்குகளும் என் வொர்க்ஷாப்பும் இருக்கே!’’ என்று சிரிக்கிறார் சண்முகம்.

2
2

பைக்குகளைப் பராமரிக்க சண்முகம் தரும் டிப்ஸ்!

 ஒரு பைக்கின் ஸ்மூத்னெஸ்தான் அந்த பைக்கின் வாழ்நாளை அதிகப்படுத்தும். டிரைவிங் ஸ்மூத்தா இருக்கிறதுக்கு செயின் ஸ்ப்ராக்கெட், க்ளட்ச், பிரேக் ஷூ, இடுப்பு எலும்பு. இந்த நான்கையும் ஒழுங்கா பராமரிச்சாலே போதும்.

 இடுப்பு எலும்பு பத்திச் சொன்ன விஷயம் சிரிப்பாக இருந்தாலும், அதுதான் உண்மை. அதுக்கு சஸ்பென்ஷனையும் ஒழுங்கா பராமரிக்கணும்! லீஃப் ஸ்ப்ரிங்கில் ஆயில் லீக்கேஜ் ஆகியிருந்தா, பைக் ஓடுறவரை ஓடட்டும் என்று விட வேண்டாம்; உடனே சஸ்பென்ஷனை மாத்திடுங்க!

 வெயில் காலத்தில் முடிந்தவரை பைக்குகளை வெட்ட வெயிலில் பார்க் பண்ணுவதைக் குறைக்கலாம். இதனால் டயர்களிலிருந்து பாடி பெயின்ட் வரை எல்லாவற்றுக்குமே ஆபத்து உண்டு. மர நிழல்கள் ஓகே!

 மழைக்காலத்திலும் பார்க்கிங்கில் மிகக் கவனம். டேங்க், கேபிள்கள் வழியாக தண்ணீர் இன்ஜினுக்குள்ளோ… டேங்க்குக்குள்ளோ இறங்கும் அபாயம் உண்டு.

 டயர் ப்ரஷரில் பலர் கவனம் வைப்பதே இல்லை! வாரத்துக்கு ஒருமுறை 25PSi - 35Psi என்கிற அளவில் டயர்களில் காற்று நிரப்பிக் கொள்ளுங்கள்.

 சர்வீஸ் முடிந்ததும் குறித்துக் கொள்ளுங்கள். 2,000 கிமீ ஓடிவிட்டால், அட்லீஸ்ட் ஆயிலை மட்டுமாவது மாற்றுங்கள். இன்ஜின் செம ஸ்மூத்தாக இயங்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism