Published:Updated:

LIVE: `இது கார் இல்ல வீடு!' அசத்தும் பென்ஸின் V-க்ளாஸ் Marco Polo #AutoExpo2020 Day-2

பென்ஸின் V-க்ளாஸ் Marco Polo
பென்ஸின் V-க்ளாஸ் Marco Polo ( AutoCar | Vikatan )

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோ எக்ஸ்போவின் லைவ் அப்டேட்ஸ்!

06 Feb 2020 3 PM

'இது கார் இல்ல வீடு!' அசத்தும் பென்ஸின் V-க்ளாஸ் Marco Polo

V-க்ளாஸ், V-க்ளாஸ் Elite ஆகியவற்றைத் தொடர்ந்து, மூன்றாவதாக V-க்ளாஸ் Marco Polo எனும் வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது மெர்சிடீஸ் பென்ஸ். இந்த லக்ஸூரி எம்பிவியின் டாப் வேரியன்ட்டாகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் இதன் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை 1.38 கோடி ரூபாய் (Marco Polo Horizon)! இதுவே ஸ்டாண்டர்டு Marco Polo மாடலின் விலையோ ஜஸ்ட் 1.46 கோடிதான்! பெயருக்கு ஏற்றபடியே, outdoor camping-யை மனதில்வைத்து இந்த V-க்ளாஸ் தயாராகியுள்ளது. Camper மோடில், வீடு போல 4 பேருக்கான இடவசதி இருக்கிறது. மேலும் சோஃபா-cum-படுக்கை, Wardrobe, மடிக்கக்கூடிய டேபிள், 40 லிட்டர் ஃபிரிட்ஜ், Kitchenette, மர வேலைப்பாடுடன் கூடிய தரைப்பகுதி என

Home On Wheels போல அசத்துகிறது Marco Polo ஸ்டாண்டர்டு. இதுவே விலைகுறைவான Marco Polo Horizon-ல், Kitchenette மற்றும் Wardrobe கிடையாது! V220d Elite போலவே, Marco Polo மாடல்களிலும் 163bhp பவர் மற்றும் 38kgm டார்க்கைத் தரும் 2.0 லிட்டர் BS-6 டர்போ டீசல் இன்ஜின் - 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணிதான்! இதன் அளவும் V-க்ளாஸ் Elite போலத்தான் உள்ளது.

06 Feb 2020 3 PM

மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா!

மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா
மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா

போட்டிமிகுந்த காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டின் தாதாவாக இருக்கும் விட்டாரா பிரெஸ்ஸா, தனது முதல் ஃபேஸ்லிஃப்ட்டைச் சரியான நேரத்தில் பெற்றிருக்கிறது எனலாம்! மேலும் எதிர்பார்த்தபடியே BS-6 வெர்ஷனாக வந்திருக்கும் இந்த மாடல், டீசல் இன்ஜினுக்கு டாடா காண்பித்துவிட்டது; அதற்குப் பதிலாக சியாஸ், எர்டிகா, XL-6 ஆகிய கார்களில் இருக்கும் 1 5 லிட்டர் K15B பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதைப் போலவே 105bhp பவர் மற்றும் 13.8kgm டார்க்கைத் தரும் இது, 5 ஸ்பீடு மேனுவல் (17.03கிமீ அராய் மைலேஜ்) மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் (18.76கிமீ அராய் மைலேஜ்) என இரு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இதனால் 1,200சிசி பெட்ரோல் இன்ஜின் - 4 மீட்டருக்குட்பட்ட கார்களுக்குக் கிடைக்கக்கூடிய கலால் வரி விலக்கு, இனி விட்டாரா பிரெஸ்ஸாவுக்குக் கிடைக்காது! முன்பக்கத்தில் LED DRL உடனான புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், பனி விளக்குகள், க்ரோம் கிரில், பம்பர் எல்லாமே புதிது. மற்றபடி பக்கவாட்டில் புதிய டூயல் டோன் அலாய் வீல்கள் மற்றும் பின்பக்கத்தில் பம்பரைத் தாண்டி, டிசைனில் எந்த மாற்றமும் இல்லை. கேபினில் ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், க்ரூஸ் கன்ட்ரோல், 7 இன்ச் ஸ்மார்ட் பிளே சிஸ்டம், அப்ஹோல்சரி ஆகியவை புதிது. பாதுகாப்பு அம்சங்கள் அப்படியே தொடர்கின்றன. பெட்ரோல் விட்டாராவின் விலையை இந்த மாதத்தில் மாருதி சுஸூகி அறிவிக்கும் எனத் தெரிகிறது.

06 Feb 2020 3 PM

புதிய க்ரேட்டாவில் என்ன ஸ்பெஷல்?

புதிய க்ரேட்டா
புதிய க்ரேட்டா

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இரண்டாம் தலைமுறை க்ரெட்டாவை டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் காட்சிபடுத்தியிருக்கிறது ஹூண்டாய். BS-6 பெட்ரோல்/டீசல் இன்ஜின்கள் தவிர, முற்றிலும் புதிய டிசைன் மற்றும் கேபின் என எதிர்பார்த்தபடியே அதிகப்படியான மாற்றங்கள் காரில் இருக்கிறது. ஸ்ப்ளிட் ஹெட்லைட்ஸ், பெரிய Cascading கிரில், அகலமான Scuff பிளேட் என லேட்டஸ்ட் டிசைன் அம்சங்கள், புதிய க்ரெட்டாவின் முன்பக்கத்தை அலங்கரிக்கின்றன. பக்கவாட்டுப் பகுதி, தற்போது விற்பனையில் இருக்கும் மாடலை நினைவுபடுத்தும்படியே அமைந்திருக்கிறது. புதிய 17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் அழகாக உள்ளன. முன்பக்கத்துக்கு மேட்சிங்காக, பின்பக்கத்தில் LED டெயில் லைட்டும் ஸ்ப்ளிட் செட்-அப்பில் ஈர்க்கிறது. ஆனால் இது எல்லாருக்கும் பிடிக்குமா எனத் தெரியவில்லை, முந்தைய மாடலைவிட அளவில் பெரிதாக இருப்பதால், புதிய க்ரெட்டாவின் இடவசதியில் முன்னேற்றம் இருக்கும் என நம்பலாம். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, சீனாவில் விற்பனை செய்யப்படும் iX25 போலவே க்ரெட்டா காட்சியளித்தாலும், கேபினில் கணிசமான வித்தியாசம் இருக்கும் எனத் தெரிகிறது. லேட்டஸ்ட் ஹூண்டாய் கார்களைப் போலவே இதிலும் வயர்லெஸ் சார்ஜிங், வென்டிலேட்டட் சீட்கள், BlueLink கனெக்ட்டிவிட்டி, பனரோமிக் சன்ரூஃப் போன்ற மாடர்ன் வசதிகளை இங்கும் எதிர்பார்க்கலாம். கியா செல்ட்டோஸில் இருக்கும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின்கள் மற்றும் மேனுவல்/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள், புதிய க்ரெட்டாவிலும் தொடர்வதற்கு அதிக வாய்ப்புள்ளது.

மார்ச் மாதத்தில் அறிமுகமாகப்போகும் ஹூண்டாயின் இந்த மிட்சைஸ் எஸ்யூவியின் உத்தேச விலை 10-16 லட்ச ரூபாயாக இருக்கலாம்.
06 Feb 2020 2 PM

ஆட்டோ எக்ஸ்போவில் ஷாரூக் கான்!

22 வருடங்களாக ஹூண்டாய் நிறுவனத்துடன் பயணித்து வருகிறேன். எனவே இந்தியாவில் ஹூண்டாய்க்கு தந்தை போல உணர்கிறேன். முதல் தலைமுறை க்ரெட்டாவைப் பயன்படுத்தி வருகிறேன். எனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கார் அதுதான்; இரண்டாம் தலைமுறை க்ரெட்டா, பார்ப்பதற்கு என்னைப் போலவே அழகாக உள்ளது!
ஆட்டோ எக்ஸ்போவில் ஷாரூக் கான்

ஆட்டோ எக்ஸ்போவின் நேற்றைய ஹைலைட்ஸ்க்கு கீழுள்ள கட்டுரையை படியுங்கள்

`வழக்கம் போல இந்த முறையும் SUV தான் கெத்து!' #AutoExpo2020 Day-1 ரிப்போர்ட்
06 Feb 2020 1 PM

I.D. Crozz Electric SUV

I.D. Crozz Electric SUV
I.D. Crozz Electric SUV

இந்தியாவில் டீசல் கார்களுக்கு பதிலாக, எலெக்ட்ரிக் கார்களைக் களமிறக்க ஃபோக்ஸ்வாகன் இருப்பதுபோலத் தெரிகிறது. அதற்கேற்ப I.D. Crozz எனும் எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட்டை, அந்த நிறுவனம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் காட்சிபடுத்தியிருக்கிறது. ஏப்ரல் 2020-ல் இதன் Production வெர்ஷன் வெளியாகும் என்பதால், அடுத்த ஆண்டில் இது நம் நாட்டில் அனேகமாக அறிமுகப்படுத்தப்படலாம். எனவே கூபே போன்ற வடிவமைப்பு, பின்பக்க ஸ்லைடிங் கதவுகள் ஆகியவை அதில் இருக்குமா என்பதில் தெளிவில்லை. ஆனால் ஸ்போர்ட்ஸ் காரும் எஸ்யூவியும் கலந்த கலவையாக I.D. Crozz இருக்கும் என்கிறது ஃபோக்ஸ்வாகன். சிறிய Overhang, 21 இன்ச் வீல்கள், காருக்கு அடியே பேட்டரிகளை வைப்பதற்கு ஏதுவாகப் பெரிய வீல்பேஸ் ஆகியவை அதற்கான உதாரணம். இவ்வளவு பெரிய காரில் 4 சீட்கள் மட்டுமே இருப்பது நெருடல் என்றாலும், அதிக இடவசதியை எதிர்பார்க்கலாம். Autonomous டிரைவிங் மோடு, வாய்ஸ் கமாண்ட், Augmented Reality, Heads-up Display, ரியர் வியூ மிரர்களுக்குப் பதிலாக e-mirror, Gesture-Controlled ‘virtual shade’ கண்ணாடி பனரோமிக் ரூஃப் என லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களை இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியில் பார்க்கமுடிகிறது. I.D. Crozz-ல் இருக்கும் 83kWh லித்தியம் ஐயன் பேட்டரிகள், 102bhp பவர்/14kgm டார்க்கைத் தரும் முன்பக்க எலெக்ட்ரிக் மோட்டார் - 204bhp பவர்/31kgm டார்க் கொண்ட பின்பக்க எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளன. 180கிமீ டாப் ஸ்பீடுதான் என்றாலும், சிங்கிள் சார்ஜில் 500கிமீ தூரம் செல்லமுடிவது செம.

06 Feb 2020 1 PM

Vespa Electrica EV

Vespa Electrica EV
Vespa Electrica EV

இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் விதமாக, எலெக்ட்ரிக் வாகனங்களை வாகனத் தயாரிப்பாளர்கள் களமிறக்கி வருகின்றனர். அந்த வரிசையில் வெஸ்பாவும் இணைய இருக்கிறது. சர்வதேச சந்தைகளில் இந்த நிறுவனம் விற்பனை செய்யும் எலெக்ட்ரிக்கா ஸ்கூட்டரை, டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் பார்வைக்கு வைத்திருந்தது வெஸ்பா. இதில் உள்ள 4kW எலெக்ட்ரிக் மோட்டார், சிங்கிள் சார்ஜில் 100கிமீ தூரம் செல்லக்கூடியது. பேட்டரியைச் சார்ஜ் ஏற்றுவதற்கு 4 மணி நேரங்கள் தேவைப்படும். எனவே இதில் இருக்கும் பேட்டரி - எலெக்ட்ரிக் மோட்டார் செட்-அப்பை அடிப்படையாகக் கொண்டு, உள்நாட்டு உதிரிபாகங்களுடன் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த நிறுவனம் தயாரிக்கும் எனத் தெரிகிறது. இதனால் அனைவருக்கும் கட்டுபடியாகக்கூடிய விலையில் அது கிடைக்கலாம். அடுத்த ஆண்டில் இது நம் நாட்டுச் சாலைகளில் டயர் பதிக்கலாம்.

06 Feb 2020 1 PM

Aprilia SXR 125 & SXR 160

Aprilia SXR 125 & SXR 160
Aprilia SXR 125 & SXR 160

பியாஜியோ தனது குழும நிறுவனங்களின் தயாரிப்புகளை, டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் காட்சிக்கு வைத்திருக்கிறது. அதன்படி க்ராஸ் மேக்ஸ் எனும் பெயரில், ஸ்கூட்டர் கான்செப்ட் ஒன்றை வெளியிட்டிருக்கிறது ஏப்ரிலியா. இது இந்தியாவில் செப்டம்பரில் அறிமுகமாகும்போது, SXR என்ற பெயரில் வெளிவரும். 125சிசி மற்றும் 160சிசி இன்ஜின் ஆப்ஷன்களுடன் வரப்போகும் இதன் புக்கிங், ஆகஸ்ட்டில் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. இந்தியாவில் ஏப்ரிலியா விற்பனை செய்த SRV 850 ஸ்கூட்டர் போலவே, மேக்ஸி ஸ்கூட்டர் டிசைனில் இருக்கிறது SXR. பெரிய சீட் மற்றும் ஃப்ளோர் போர்டு அதற்கான உதாரணம். எனவே பர்க்மேன் ஸ்ட்ரீட் உடன் SXR 125 போட்டிபோடும் எனலாம். இத்தாலியில் வடிவமைக்கப்பட்டிருக்கும் SXR 160, 4 கலர்களில் கிடைக்கும் (சிவப்பு, வெள்ளை, கறுப்பு, நீலம்). மேலும் ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி உடனான டிஜிட்டல் மீட்டர், இரட்டை LED ஹெட்லைட்ஸ், LED டெயில் லைட், USB சார்ஜிங், லைட் வசதியுடன் கூடிய Underseat ஸ்டோரேஜ், 12 இன்ச் வீல்கள், க்ரோம் வேலைப்பாடுகள் என அதிக சிறப்பம்சங்கள் இருப்பது ப்ளஸ்.

06 Feb 2020 12 PM

கவனம் ஈர்த்த கட்டானா!

கட்டானா
கட்டானா

தனது BS-6 தயாரிப்புகளை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் சுஸூகி காட்சிபடுத்தியிருந்தாலும், அவற்றைத் தாண்டி கவனம் ஈர்த்தது என்னவோ கட்டானா பைக்தான்! அனேகமாக CKD முறையில் பைக்கை பாகங்களாக இறக்குமதி செய்து, இந்தியாவில் அசெம்பிள் செய்யும் முடிவில் இந்த நிறுவனம் இருப்பதுபோலத் தெரிகிறது. சுஸூகியின் புகழ்வாய்ந்த ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் ஒன்றாக அறியப்படும் Katana, 1981-ம் ஆண்டு அறிமுகமானது.

சதுர வடிவ LED ஹெட்லைட், 12 லிட்டர் பெட்ரோல் டேங்க்குடன் இணையக்கூடிய செமி ஃபேரிங் ஆகிய டிசைன் அம்சங்கள், ஒரிஜினல் மாடலை நினைவுபடுத்தும்படி அமைந்திருக்கின்றன. மேலும் Katana லோகோ, பழைய ஸ்டைலில் இருப்பது நச்!

ஆனால் கட்டானாவின் கட்டுமஸ்தான முன்பக்கத்துடன் ஒப்பிட்டால், பின்பக்கம் கொஞ்சம் மெலிதாகவே உள்ளது. GSX-S1000F பைக்கில் இருக்கும் அதே 999சிசி K5 இன்ஜின்தான் கட்டானாவிலும் இருக்கிறது. 150bhp பவர் மற்றும் 10.8kgm டார்க்கை வெளிப்படுத்தும் இந்த இன்லைன் 4 சிலிண்டர் - லிக்விட் கூல்டு இன்ஜின், 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஏபிஎஸ், 3 லெவல்களைக் கொண்ட டிராக்‌ஷன் கன்ட்ரோல், ஸ்லிப்பர் கிளட்ச், Brembo ரேடியல் கேலிப்பர் டிஸ்க் பிரேக்ஸ், KYB 43மிமீ USD ஃபோர்க் - Link Type மோனோஷாக் ஆகிய மெக்கானிக்கல் பாகங்களைக் கொண்டுள்ளது கட்டானா.

அடுத்த கட்டுரைக்கு