Published:Updated:

மெக்கானிக்கின் உயிரைப் பறித்த ட்யூப்லெஸ் டயர்... நடந்தது என்ன?

லாரி டயர் பஞ்சர் போடும்போது இவ்வளவு ஆபத்தா? என்ன சொல்கிறார்கள் மெக்கானிக்குகள்?

கார்/பைக் டயர்களைவிட லாரி/ட்ரக் டயர்களைப் பஞ்சர் பார்ப்பதற்குத் தனித்திறமை வேண்டும். மற்ற வாகனங்களைப்போல், லாரிகளுக்குப் பஞ்சர் பார்ப்பது அத்தனை எளிதல்ல. காரணம், இது சில நேரங்களில் மெக்கானிக்குகளின் உயிருக்கே உலை வைக்கக் கூடிய விஷயம். ‘என்னடா பெரிய பயமுறுத்தலா இருக்கே’ என்கிறீர்களா?

மத்தியப் பிரதேச மாநிலம் மொரினா (Morena) எனும் மாவட்டத்தில் உள்ள ஜாவ்ரா எனும் நகரத்தில், லாரிக்குப் பஞ்சர் போட்ட மெக்கானிக் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அஜய் குஷ்வாகா எனும் மெக்கானிக், வழக்கம்போல் ஒரு பெரிய ட்ரக் ஒன்றின் பஞ்சரான ட்யூப்லெஸ் டயரைச் சரிபார்த்து, மறுபடியும் ஃபிட் செய்யும்போதுதான் இந்த விபத்து நடந்திருக்கிறது. அந்த ட்யூப்லெஸ் டயருக்கு பஞ்சர் கிட்டை வைத்து ஒட்டிவிட்டு, காற்றடிக்கும்போது ஏற்பட்ட அழுத்தத்தில், அந்த பெரிய ட்யூப்லெஸ் டயர் – ரிம்மில் இருந்து கிளம்பி, அஜய்யை 20 அடி தூரத்துக்குத் தூக்கி எறிந்திருக்கிறது.

ட்யூப்லெஸ் டயர்ஸ்
ட்யூப்லெஸ் டயர்ஸ்

சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார் மெக்கானிக் அஜய். ‘‘ஆரம்பத்தில் டயர் வெடித்துவிட்டது என்றுதான் சந்தேகப்பட்டோம். ஆனால், அது காற்றழுத்தத்தால் ஏற்பட்ட விபத்து என்று பிறகுதான் தெரிய வந்தது’’ என்று சொல்கிறார் ஜாவ்ரா போலீஸ் நிலையத்தின் அதிகாரி யோகேந்திர சிங் என்பவர்.

அந்த ட்ரக் டிரைவரோடு சேர்த்து இரண்டு பேர், பஞ்சர் போடுவதை வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். பஞ்சர் ஒட்டிய வேலை முடிந்தபிறகு, டயருக்குக் காற்றடிக்கும்போது, அதாவது விபத்து நடந்த சில விநாடிகளுக்கு முன்புதான் அவர்களைத் தள்ளி நிற்கும்படி எச்சரித்திருக்கிறார் அஜய். ஆனால், அவரே அந்த விபத்தில் பலியாகி இருப்பதுதான் சோகத்தின் உச்சம்.

‘‘மெக்கானிக் அஜய், அந்த விபத்து நடந்த சில விநாடிகளுக்கு முன்னர் எங்களை எச்சரித்தார்; பக்கத்தில் யாரும் நிற்க வேண்டாம் என்றார். ஆனால், அவரே உயிரிழந்தது எங்களுக்குப் பேரதிர்ச்சியாக இருக்கிறது. அவர் எங்கள் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார்’’ என்கிறார்கள் அந்த ட்ரக்கின் ஓட்டுநரும் அவரது நண்பர்களும்.

‘‘இது எங்கள் தொழிலில் சகஜமான ஒன்றுதான். இது கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து என்றாலும், அடிக்கடி எங்கள் ஏரியாவிலேயே இப்படி நடந்திருக்கிறது. எங்கள் உயிரைப் பணயம் வைத்துதான் நாங்கள் லாரிக்குக் காற்றடிக்கிறோம். ஆனால், ஒரு லாரி டயர் பஞ்சர் போடுவதற்கு 250 ரூபாய்தான் எங்களுக்குத் தருகிறார்கள்’’ என்கிறார் நாமக்கல்லைச் சேர்ந்த லாரி மெக்கானிக் ஒருவர்.

நிஜமாகவே லாரி டயர்களுக்குப் பஞ்சர் போடுவது அத்தனை ஆபத்தான விஷயமா? அப்படி என்ன ஆபத்து?
ராணிப்பேட்டையில் பல ஆண்டுகளாக அசோக் லேலாண்ட் நிறுவனத்துக்காக மெக்கானிக்காக வேலை பார்க்கும் சரவணன் என்ன சொல்கிறார்?
லாரி மெக்கானிக்
லாரி மெக்கானிக்

‘‘நிஜமாகவே இது ஆபத்தான தொழில்தான் சார். இந்தத் தொழிலில் கவனம் மிக முக்கியம். கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் இதுபோல் உயிருக்கே ஆபத்தாகிவிடும். மெக்கானிக் அஜய், காற்றை நிரப்பும்போது அந்த டயர்வால், ரிம் என்று சொல்லக்கூடிய அந்த டிஸ்க்கில் (பிரேக் இல்லை) சரியாக உட்காராமல் இருந்திருக்கலாம். இதுதான் காரணமாக இருக்கும். ஓவர் டயர் ப்ரஷர் அந்த டயரைத் தூர விட்டெறியும். அதாவது, இதுபோன்ற சம்பவங்களில் சுமார் 30 – 40 கிமீ வேகத்தில் அந்த டயர் புளோ ஆகும். இந்த வேகத்தில் சின்னக் கல் பட்டாலே ஆபத்து. லாரி மற்றும் ட்ரக் டயர்கள் மட்டுமே சுமார் 15 – 22 கிலோ வரை எடை இருக்கும். அதுதான் அவர் 20 அடி உயர தூரத்துக்கு எறியப்பட்டிருக்கிறார். முன்பெல்லாம் சாதாரண நூல் மற்றும் நைலான் டயர்கள்தான் ட்ரக்குகளுக்குப் பயன்படுத்துவார்கள்.

இப்போதெல்லாம் ரேடியல், ட்யூப்லெஸ் என்று மாடர்ன் டயர்கள் வந்துவிட்டன. ட்யூப் டயர்களிலும் இவ்வளவு பிரச்னை இருக்கிறதுதான். ஆனால் அதன் பாதிப்பு உயிரை எடுக்கும் அளவுக்கு இருக்காது. எனக்குத் தெரிந்து இதேபோல் ட்யூப் வெடித்து ஆபத்தான நிலைக்குப் போய் மீண்ட மெக்கானிக்குகள் பல பேர் எனக்குப் பரிச்சயம். அஜய் மாட்டியது ட்யூப்லெஸ் டயர். அந்த டயரின் மொத்த எடையையும் அவர் அந்த வேகத்துக்குத் தாங்க முடியாமல் அவர் உயிரிழந்திருக்கிறார். இத்தனை உயிரைப் பணயம் வைத்து வேலை பார்க்கும் எங்களுக்கு இதற்குக் கூலி என்று பார்த்தால்… மிக மிகக் குறைவுதான்’’ என்று ஆதங்கப்படுகிறார் சரவணன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே அசோக் லேலாண்ட், டிவிஎஸ் போன்ற நிறுவனங்களில் மெக்கானிக்காகப் பணிபுரிந்து இப்போது தனியார் இன்ஜினியராக இயங்கிவரும் சுந்தரராஜன் இது பற்றி என்ன சொல்கிறார்?

‘‘நானும் அந்த நியூஸ் பார்த்தேன் சார். வருத்தமா இருந்துச்சு. பொதுவா, எங்க தொழிலை நாங்க காதலிச்சுத்தான் பண்ணுவோம். ஆனாலும் இதில் சிரமங்கள் அதிகம்தாங்க. ஒரு ட்ரக் டயர் ரிம்மோட சேர்த்து 240 பவுண்டு இருக்கும். அதாவது, சுமார் 110 கிலோ இருக்கும். இதைக் கழற்றி பஞ்சரை செக் பண்ணி போடுறதுக்கு மேன் பவர் ரொம்ப வேணும். ஒரு சிங்கிள் மனுஷனால இதைப் பண்றது ரொம்பக் கஷ்டம். இதுவே கம்பெனி சர்வீஸில் ஆட்டோ ரெஞ்ச் வச்சு ஈஸியா பண்ணிடுவாங்க. ஆனா நாங்க இதை டைட் பண்றதுக்கே மேலே ஏறி நின்னுதான் டைட் பண்ணுவோம். அதுவும் இதில் ஆபத்துதான். அந்த நேரத்தில் டயர் இன்ஃப்ளேஷன் அதிகமா வெச்சுட்டோம்னா, நாமளே மேல பறந்துடுவோம். பின் பக்க டயர்தான் பஞ்சர் பாக்க ரொம்பக் கஷ்டம். ஜாக் வெச்சு இதை ஏத்துறதுக்குள்ள எப்படி இருக்கும் தெரியுமா?

லாரி மெக்கானிக்
லாரி மெக்கானிக்

மெக்கானிக் அஜய் விஷயத்தைப் பொறுத்தவரை, அவர் டயர் காற்றை இறக்கும்போது இறந்திருக்கலாம். ரிம்மில் டயர் வாலை ஃபிட் செய்யாம இருந்தா மட்டும் ஆபத்து இல்லை; காத்தை இறங்கும்போதும் கவனமா இருக்கணும். அதுவும் ஆளைத் தூக்கியடிச்சுடும். ஆனால், அவர் மற்ற உயிர்களைக் காப்பாற்றி தன் உயிரை பலி தந்திருக்காரு! நாங்கள் இதற்குத்தான் பஞ்சர் போடும்போது யாரையும் பக்கத்தில் அனுமதிப்பதில்லை!’’ என்று வருத்தப்பட்டார்.

வாகனங்களுக்கு பெட்ரோல் போடும்போது குழந்தைகளைப் பக்கத்தில் நிற்க வைப்பது… டயர்களுக்குப் பஞ்சர் போடும்போது அருகில் நின்று வேடிக்கை பார்ப்பது… எப்போதுமே ஆபத்துதான்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு