Published:Updated:

வாகனங்களுக்கு 5 வருட பம்பர் டு பம்பர் இன்ஷூரன்ஸ்… நல்லதா கெட்டதா?

இன்ஷூரன்ஸ்
இன்ஷூரன்ஸ்

Third-Party, Own Damage, Liability Coverage, Collision Coverage, Engine Protection, Comprehensive என்று பல வகை இன்ஷூரன்ஸ் உண்டு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

2016–ல் ஒரு வழக்கு. ஒகேனக்கல்லில் நடந்த ஒரு கார் விபத்தில், காரை ஓட்டிய சடையப்பன் என்பவர் இறந்து போனார். இதற்கு இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்து, நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்தனர் சடையப்பன் குடும்பத்தினர். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ‘சடையப்பன் குடும்பத்துக்கு 14.65 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று அந்த ‘நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்போதுதான் தெரிந்தது – அந்த காருக்கு முறையான இன்ஷூரன்ஸ் இல்லை. அதாவது, காருக்கான ஓன் டேமேஜ் மற்றும் ஓட்டுநர் / உரிமையாளருக்கான இன்ஷூரன்ஸ் மட்டும்தான் எடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. காரை ஓட்டியவர் சடையப்பன் இல்லை என்பது அதைவிட அதிர்ச்சியான விஷயம். அதாவது, ப்ரீமியம் தொகை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சுமாரான பாலிஸியை எடுத்திருக்கிறார் அந்த கார் உரிமையாளர்.

இந்த வழக்கின் பின்னணியில்தான் ஓர் அதிரடியான தீர்ப்பைச் சொல்லியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். ‘‘வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கான பம்பர் டு பம்பர் இன்ஷூரன்ஸ் அவசியம் எடுக்க வேண்டும்’’ என்பதுதான் அது. செப்டம்பர்–1 முதல் இது அமுலுக்கு வர வேண்டும் என்று சொல்லியிருந்தது உயர்நீதிமன்றம்.

IRDA
IRDA

‘‘இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் IRDA (Insurance Regulatory Development Authority) யில் அப்ரூவல் வாங்க வேண்டும். எனவே, இதை உடனடியாகச் செயல்படுத்த முடியாது. இதற்கென சிஸ்டம் நடைமுறை இருக்கிறது. இதற்கு 90 நாள் காலஅவகாசம் வேண்டும்’’ என்று நீதிமன்றத்திடம் வேண்டுகோள் வைத்திருக்கிறது GIC (General Insurance Council). அதனால், இப்போதைக்கு இந்த வழக்கை நிறுத்தி வைத்திருக்கிறது உயர்நீதிமன்றம்.

எதனால் இந்த அதிரடி? பொதுவாக, பலர் வாகனங்களுக்கு இன்ஷூரன்ஸைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை. இன்ஷூரன்ஸில் பல வகைகள் உண்டு. Third Party, Own Damage, Liability Coverage, Collision Coverage, Engine Protection, Comprehensive என்று பல வகைகள் உண்டு.

இதில் பம்பர் டு பம்பர் (Bumper to Bumper) என்பதுதான் இன்ஷூரன்ஸின் உச்சம். அதாவது, ஒரு காரின் முன் பக்க பம்பர் முதல் பின் பக்க பம்பர் வரை காருக்கு எந்தச் சேதாரம் என்றாலும், அது 100% க்ளெய்ம் ஆகும் என்பதுதான் இதன் அம்சம். அதாவது, இதில் ப்ராசஸிங் செலவு 1,200 – 1,500 ரூபாய் மட்டும் உங்கள் செலவு. மற்றவை எல்லாமே இன்ஷூரன்ஸ் நிறுவனம் பார்த்துக் கொள்ளும். இதை ஜீரோ டெப்ரிஷியேஷன் (Zero Depreciation) என்றும் சொல்கிறார்கள். இதில் தேர்டு பார்ட்டி, டிரைவர், பேசஞ்ஜர், ஓன் டேமேஜ் என்று எல்லாமே உள்ளடங்கும். ஆனால், இதற்கு ப்ரீமியம் தொகை, அதிகமாகும் என்பதால் பலரும் இதைக் கண்டுகொள்வதில்லை.

காம்ப்ரிஹென்ஸிவ் கவரேஜில் – குறிப்பிட்ட சில பிளாஸ்டிக் பாகங்கள், ஹெட்லைட்கள், காரின் இன்ஜின் போன்ற சில உள்பாகங்கள் போன்றவற்றுக்கு இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் கிடைக்காது. அதேபோல், கிட்டத்தட்ட பாதிக்குப் பாதிதான் க்ளெய்மிங் கிடைக்கும் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். 30,000 ரூபாய் செலவு என்றால், 15,000 ரூபாய் உங்கள் பாக்கெட்டிலிருந்து எடுக்க வேண்டும். ஆனால், இதில் ப்ரீமியம் தொகை குறைவு என்பதால், பலரும் தங்களுக்குத் தேவைப்படுகிற பாலிஸியைப் போட்டுக் கொள்கிறார்கள். இங்கேதான் சிக்கல் ஆரம்பிக்கிறது. இதுதான் சடையப்பன் விஷயத்தில் நடந்திருக்கிறது. இதைத் தாண்டி, ஒரு வருஷ இன்ஷூரன்ஸை மறந்து போயும் அப்படியே அசால்ட்டாக விட்டு விடுகின்றனர் சிலர். அதற்காகத்தான் இந்தத் தீர்ப்பு.

இன்ஷூரன்ஸ் தொகை
இன்ஷூரன்ஸ் தொகை
Advantus Media Inc. and QuoteInspector.com

வாகனங்களுக்கு இப்படி 5 வருட பம்பர் டு பம்பர் இன்ஷூரன்ஸ் எடுப்பதால், புது வாகனங்களின் விலையும் அதிகரிக்குமே என்று விழி பிதுக்குகின்றன கார் நிறுவனங்களும், கார் வாங்குபவர்களும். இப்போதைக்கு ஒரு வருடத்துக்கு ஒரு காருக்கான இன்ஷூரன்ஸ் தொகை ஒரு புது காரின் விலையிலிருந்து 3% வருகிறது. இப்போது 5 ஆண்டுகள் (டிரைவர், பயணிகள், தேர்டு பார்ட்டி, காருக்கான ஓன் டேமேஜ் என்று எல்லாமே இதில் அடங்கும்) எனும்போது 15% ஆக அதிகரிக்கும். உதாரணத்துக்கு, 7.92 லட்சம் எக்ஸ் ஷோரூம் கொண்ட ஒரு ஸ்விஃப்ட் ZXI Plus மாடலுக்கு இன்ஷூரன்ஸ் தொகை 35,000 ரூபாய் என்றால், (இதில் பம்பர் டு பம்பர் என்றால், இன்னும் அதிகரிக்கும்) இனி இன்ஷூரன்ஸுக்கு மட்டுமே ரூ.1.75 லட்சம் எடுத்து வைக்க வேண்டும். இதுவே க்ரெட்டா போன்ற எஸ்யூவிகளுக்கு ரூ.2.5 லட்சம் எக்ஸ்ட்ரா ஆகும். க்விட் போன்ற சின்ன கார்களுக்கு 75,000 ரூபாய்க்கு மேல் ஆகும். டூ–வீலர்கள் என்றால், ரூ. 6,000 முதல் 8,000 வரை எக்ஸ்ட்ரா ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது வாகன ஓட்டிகளுக்கு எக்ஸ்ட்ரா சுமையா என்றால் இல்லை என்கிறார், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாபு ரங்கசாமி. ‘‘நீதியரசரின் இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன். காசு இருப்பவர்கள்தானே கார் வாங்குகிறார்கள். இதில் பலன் என்று பார்த்தால், வாகன ஓட்டிகளுக்குத்தான். இப்போது யாருக்குமே விபத்து பற்றி, இன்ஷூரன்ஸ் பற்றி அக்கறை இல்லை. ஓர் ஆண்டுக்கு இன்ஷூரன்ஸ் எடுத்தபிறகு, அதைப் ரினியூவல் செய்வதில் பலர் அக்கறை காட்டுவதில்லை. சிலர் மறந்து விடுகிறார்கள். பிரச்னை என்று வரும்போதுதான் இந்த இன்ஷூரன்ஸின் பலம் புரியும். ‘காசு கூடிருச்சு’ என்று புலம்புகிறவர்கள், இதையே கார் நிறுவனங்கள் விலையைக் கூட்டியிருந்தால், பேசாமல்தானே பணம் கட்டி கார் வாங்குவார்கள்! இது நம் நன்மைக்குத்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்!’’ என்கிறார்.

வழக்கறிஞர் பாபு ரங்கசாமி
வழக்கறிஞர் பாபு ரங்கசாமி

இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் இந்தத் தீர்ப்பை வரவேற்கத்தான் செய்கின்றன. ‘‘நிறைய பேருக்கு இன்ஷூரன்ஸ் பற்றிய அடிப்படைத் தெளிவே கிடைக்கவில்லை. ப்ரீமியம் குறைவாக இருக்கும் பாலிஸியைத் தேர்ந்தெடுத்து அதையே கட்டுகிறார்கள். இனி பம்பர் டு பம்பர் என்றால், அதைக் கட்டித்தான் ஆக வேண்டும். அதேபோல் 5 ஆண்டுகள் உங்களுக்கு இன்ஷூரன்ஸ் பற்றிய நினைவே தேவை இருக்காது’’ என்கிறார், ஒரு மிகப் பெரிய தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவன அதிகாரி.

சில நாடுகளில் வலதுபுறம் செல்ல வேண்டும் என்ற சாலை விதி இருக்கின்றதே, ஏன்?| Doubt of Common Man

இன்னொரு அரசாங்க இன்ஷூரன்ஸ் நிறுவன அதிகாரி இப்படிச் சொல்கிறார். ‘‘எனக்குத் தெரிஞ்சு இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் பண்ணாம, நோ க்ளெய்ம் போனஸ் வாங்கினவங்க ரொம்பக் கம்மி சார். வருஷத்துக்கான இன்ஷூரன்ஸ் கட்டும்போதே மாசத்துக்கு ஒரு க்ளெய்ம் வருவாங்க. இப்போ சொல்லவே வேண்டாம். ஏகப்பட்ட க்ளெய்ம்களுக்கு நாங்க காத்திருக்கணும்!’’ என்றார்.

ப்ரீமியம் தொகை
ப்ரீமியம் தொகை
Advantus Media Inc. and QuoteInspector.com

‘‘இதில் பெரிதும் பாதிக்கப்படப்போவது நாங்கள்தான்’’ என்கிறார்கள் கால் டாக்ஸி மற்றும் கமர்ஷியல் வாகனங்கள் ஓட்டும் டிரைவர்கள். ‘‘நாங்களே எந்த கார் விலை குறைவா இருக்குனு பார்த்து கார் வாங்குறோம். இப்படி ப்ரீமியம் தொகையை கன்னாபின்னானு ஏத்தினா நாங்க என்ன பண்றது... அப்படியே ஒரு ஆக்ஸிடென்ட் நடந்து, க்ளெய்ம் வாங்குறதுக்குள்ள நாங்க படுற பாடு எங்களுக்குத்தான் தெரியும்!’’ என்கிறார் கால்டாக்ஸி டிரைவர் குணசேகரன்.

இதில் பழைய கார் உரிமையாளர்களுக்கு, ஒரு நிம்மதியான விஷயம் என்னவென்றால், இந்த 5 ஆண்டு பம்பர் டு பம்பர் இன்ஷூரன்ஸ், பழைய கார் வைத்திருந்து அதைப் புதுப்பிப்பவர்களுக்குப் பொருந்துமா என்பதை இன்னும் நீதிமன்றம் சொல்லவில்லை.

எது எப்படியோ பாஸ்… புது கார் வாங்கப் போறீங்களா… எக்ஸ்ட்ரா பணம் எடுத்து வெச்சுக்கோங்க!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு