Published:Updated:

தமிழகத்தில் மீண்டும் தொடங்கியது வாகன உற்பத்தி- ஆன்லைனில் கார் ஆர்டர் செய்யலாம்!

ஹூண்டாய் வாகனத்  தொழிற்சாலை
ஹூண்டாய் வாகனத் தொழிற்சாலை

சில மாநிலங்கள் லாக் டௌனில் தளர்வு கொடுத்துள்ளதால் கார் பைக் வாகன நிறுவனங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.

கொரோனா லாக் டௌன் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு அனைத்து கிரீன் ஸோன்களிலும் தொழிற்சாலைகள், கடைகள் திறக்கப்படலாம் என அறிவிப்பு வெளியாகியது. ஆனால், பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்களும் ஆட்டோமொபைல் உதிரிப்பாக நிறுவனங்களும் ரெட் ஸோனில் இருப்பதால் திறக்கமுடியாத நிலையில் இருப்பதாக அறிவித்திருந்தன. தற்போது, ’தமிழகம் உட்பட, பல மாநிலங்களில் ரெட் ஸோன்களிலும் 30 சதவிகிதப் பணியாளர்களோடு, போதுமான சுகாதார நடவடிக்கைகளோடு தொழிற்சாலைகளை திறக்கலாம்’ என்று அறிவித்த நிலையில் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தற்போது உற்பத்தியைத் தொடங்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஹூண்டாய் நிறுவனம் நேற்றே தனது தொழிற்சாலையைத் திறந்துவிட்டது.
மாருதி தொழிற்சாலை
மாருதி தொழிற்சாலை

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஹூண்டாய் நிறுவனம் நேற்றே தனது தொழிற்சாலையைத் திறந்துவிட்டது. மிகக் குறைந்த பணியாளர்களை வைத்து தொழிற்சாலையை மீண்டும் இயக்கும் நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார்கள். ’கார் தயாரிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால், ஸ்டாக் செக்கிங், இன்வென்ட்ரி மேனேஜ்மென்ட், சப்ளை, ஆர்டர், ரா மெட்டீரியல் போன்றவற்றை கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறோம். கார்கள் மீண்டும் ப்ரொடக்‌ஷன் லைனில் தயாராக ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிடும்’ என்கிறார்கள் ஹூண்டாய் நிறுவனத்தினர்.

ஒரகடத்தில் இருக்கும் ராயல் என்ஃபீல்டு தொழிற்சாலையும், மே 6-ம் தேதி முதல் இயங்கத் தொடங்கிவிட்டது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா
ஹூண்டாய் மோட்டார் இந்தியா

இதேபோல சென்னை ஒரகடத்தில் இருக்கும் ராயல் என்ஃபீல்டு தொழிற்சாலையும், மே 6-ம் தேதி முதல் இயங்கத் தொடங்கிவிட்டது. பெரும்பாலான ராயல் என்ஃபீல்டு பணியாளர்கள் வீட்டில் இருந்தபடியே வேலைசெய்துவரும் சூழலில், மிகக் குறைந்த பணியாளர்களுடன் தொடங்கப்படுகிறது இந்தத் தொழிற்சாலை. அதிலும், இப்போதைக்கு தினமும் ஒரு ஷிஃப்ட் மட்டுமே இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்கள். தொழிற்சாலைக்கு உள்ளே தங்கியிருப்பவர்கள் அல்லது தொழிற்சாலைக்கு மிகவும் அருகில் தங்கியிருப்பவர்களை மட்டுமே தற்போது அழைத்துள்ளதாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

வல்லம் மற்றும் திருவெற்றியூரில் இருக்கும் இரண்டு தொழிற்சாலைகளும், சென்னை மற்றும் குர்கானில் இருக்கும் கார்ப்பரேட் அலுவலகங்களும் இப்போதைக்குத் திறக்கப்படவில்லை. ராயல் என்ஃபீல்டின் 120 டீலர்கள் இயங்கத் தொடங்கியுள்ளார்கள். மே மாதத்துக்குள் 300 டீலர்கள் வரை முழு வீச்சில் இயங்குவார்கள் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு
ராயல் என்ஃபீல்டு
குருகிராமில் 3704 தொழிலாளர்களுடனும், மானேஸ்வரில் 600 தொழிலாளர்களுடனும் மாருதி தொழிற்சாலை இயங்கவிருக்கிறது.

இதேபோல தற்போது பச்சை மற்றும் ஆரஞ்சு ஸோன்களில் இருக்கும் 600 மாருதி டீலர்கள் இயங்கத்தொடங்கிய நிலையில் ஹரியானாவில் இருக்கும் மாருதி சுஸூகி தொழிற்சாலையை மே 12-ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவித்துவிட்டது இந்த நிறுவனம். குருகிராமில் 3704 தொழிலாளர்களுடனும், மானேஸ்வரில் 600 தொழிலாளர்களுடனும் மாருதி தொழிற்சாலை இயங்கவிருக்கிறது.

3000-த்துக்கும் மேற்பட்ட டீலர்களில் வெறும் 600 டீலர்கள்தான் தற்போது இயங்குகிறார்கள் என்றாலும், டீலர்களே இல்லாமல் மாருதி தனது கார்களை முழுவதும் இணையத்திலேயே வாங்குவதற்கு வழிவகை செய்துள்ளது. மொத்த டாக்குமென்ட் பிராசஸ்களும் இணையத்திலேயே முடித்து காரை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்து வீடு தேடி வந்து அவர்களே டெலிவரி செய்துவிடுவார்கள்.

ஆட்டோமொபைல்
ஆட்டோமொபைல்
Autocar India

கொரோனாவுக்குப் பிறகு மாருதி, ஹூண்டாய், பஜாஜ், ராயல் என்ஃபீல்டு என முக்கியமான தொழிற்சாலைகள் இயங்க ஆரம்பித்துவிட்டன.

இதுவரை இந்திய ஆட்டோமொபைல் துறை சந்திக்காத 0 விற்பனை, கொரோனாவால் நிகழ்ந்துள்ளது. இப்போது மீண்டும் முதலில் இருந்து தொடங்குகிறது இந்திய வாகனத் துறையின் அடுத்த அத்தியாயம்.
அடுத்த கட்டுரைக்கு