Published:Updated:

₹12,000 கோடி இழப்பு... உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்!

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

21 நாள் ஊரடங்கு இருக்கும் நிலையில், முக்கியமான வழக்குகளை மட்டுமே கையாள்கிறது உச்ச நீதிமன்றம். BS-4 வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உச்ச நீதிமன்றம், கடந்த அக்டோபர் மாதம், BS-4 ரக வாகனங்களை மார்ச் 31, 2020-க்கு மேல் விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிட்டது. இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள நாடு தழுவிய முடக்கம் காரணமாக ₹6,400 கோடிக்கும் மேற்பட்ட BS-4 ரக வாகனங்கள் விற்கப்படாமல் உள்ளன. இதில் 7,00,000 இருசக்கர வாகனங்களும்,15,000 கார்களும்,12,000 வணிக வாகனங்களும் அடங்கும். இருசக்கர வாகனங்களின் மதிப்பு ₹3,850 கோடியாகவும், பயணிகள் வாகனங்களின் மதிப்பு ₹1,050 கோடியாகவும், வணிக வாகனங்களின் மதிப்பு ₹1,440 கோடியாகவும் உள்ளது.

ஆட்டோமொபைல்
ஆட்டோமொபைல்

மார்ச் மாத தொடக்கத்தில் இந்த வாகனங்களின் விற்பனை சற்றே சூடுபிடிக்கத் தொடங்கியது. ஆனால், பின்னர் ஏற்பட்ட கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக விற்பனை சரிந்தது. இப்போது, கட்டாய முடக்கம் காரணமாக வாகனங்கள் விற்பனை செய்யப்படவில்லை.

இதனால் ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு (FADA), இந்திய வாகனத் தயாரிப்பாளர்கள் சங்கம் (SIAM), ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் ஆகியவை விற்பனை காலத்தை நீட்டிக்க  உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளது. 21 நாள் ஊரடங்கு இருக்கும் நிலையில், முக்கியமான வழக்குகளை மட்டுமே கையாள்கிறது உச்ச நீதிமன்றனம். இந்நிலையில் இந்த வழக்குகள் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டோமொபைல் தயாரிப்பு
ஆட்டோமொபைல் தயாரிப்பு
vikatan

FADA அமைப்பு BS-4 ரக வாகனங்களை உற்பத்தியாளர்களே திரும்ப வாங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு SIAM அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இறுதி நாள் நெருங்கப்போகும் காரணத்தால், விற்பனையாளர்களே தங்களது பெயர்களில் வாகனங்களைப் பதிந்து மீண்டும் விற்பதற்கான சூழலும் உருவாகியுள்ளது.

ஒருவேளை உச்ச நீதிமன்றம் முன்பே சொன்னதுபோல் மார்ச் இறுதிக்குள் BS-4 ரக வாகனங்களை விற்க முடியவில்லை எனில் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு ₹12,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு ஏற்படலாம். தற்போது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன ஆட்டோமொபைல் நிறுவனங்கள்.

அடுத்த கட்டுரைக்கு