இந்தியாவில் மாருதி சுஸூகி விற்பனை செய்யும் எஸ்யூவி மாடல்களின் எண்ணிக்கை, விரைவில் இரண்டாக அதிகரிக்கப்போகிறது; அதாவது காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் இருக்கும் விட்டாரா பிரெஸ்ஸாவைத் தொடர்ந்து, சப் காம்பேக்ட் எஸ்யூவியாக S-Presso-வை இந்த நிறுவனம் விற்பனைக்குக் கொண்டுவரப்போகிறது. செப்டம்பர் 30-ம் தேதி அறிமுகமாகப்போகும் இந்த காரை தனது Arena ஷோரும்களில் விற்பனை செய்யவுள்ளது மாருதி சுஸூகி.
கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் இந்த நிறுவனம் காட்சிபடுத்திய Future S மைக்ரோ எஸ்யூவி கான்செப்ட்தான், தற்போது S Presso ஆக உருமாறியிருக்கிறது! 4 வேரியன்ட்களில் வரப்போகும் இதன் டிசைன், இன்ஜின், வசதிகள் எப்படி இருக்கும்?

மாருதி சுஸூகியின் மிகச்சிறிய எஸ்யூவியாக வரப்போகும் S-Presso, சதுர வடிவம் மற்றும் உயரத்தைக் கொண்டிருக்கலாம். க்விட், KUV 1OO NXT, ரெடிகோ ஆகிய கார்களுக்குப் போட்டியாக வரப்போகும் இது, அதற்கேற்றபடி 180மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸைக் கொண்டிருக்கும். ஸ்பை படங்களைப் பார்க்கும்போது 13 இன்ச் ஸ்டீல் வீல்கள், வழக்கமான மிரர்கள் மற்றும் Antenna, Lift Type கதவு கைப்பிடிகள், ஹாலோஜென் பல்ப்களைக் கொண்ட ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் என காரின் விலையைக் கட்டுக்குள் வைக்கும்படியான அம்சங்கள் இருக்கின்றன.
முன்பக்க சீட்கள் உயரமாக வைக்கப்பட்டிருந்தால், அங்கிருந்து வெளிச்சாலை தெளிவாகத் தெரியலாம். மேலும் S-Presso காரில், செலெரியோவுக்குச் சமமான இடவசதி கிடைக்கும் என நம்பலாம்; கறுப்பு/கிரே நிற கேபினில், மினி காரை நினைவுபடுத்தும்படி டேஷ்போர்டு இருக்கலாம். இதனால் வட்ட வடிவ சென்டர் கன்சோலில், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் மற்றும் மியூசிக்/டச் ஸ்க்ரீன் சிஸ்டம் பயன்படுத்தப்படலாம். மேலும் காரின் கலருக்கேற்ப, கேபினில் வேலைப்பாடுகள் இடம்பெறலாம். இதன் இருபுறத்திலும் ஏசி வென்ட்கள் இருக்கலாம். சில பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டு.

நானோ மற்றும் எட்டியோஸ் கார்களைப் போல ஸ்பீடோமீட்டர் கேபினின் நடுவே இருப்பதால், உள்நாட்டு உற்பத்தி தவிர வெளிநாடுகளுக்கு S-Presso ஏற்றுமதி செய்யவேண்டிய சூழல் இருக்கும்போது, காரின் டிரைவ் செட்-அப்பை அப்படியே இடதுபுறத்துக்கு மாற்றுவது வெகு சுலபம்! இந்த நிறுவனத்தின் லேட்டஸ்ட் கார்கள் கட்டமைக்கப்படும் Heartect பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படப்போகும் S-Presso, விரைவில் அமலுக்கு வரவிருக்கும் க்ராஷ் டெஸ்ட் மற்றும் Pedestrian Safety விதிகளுக்கு ஏற்புடைய விதத்தில் உற்பத்தி செய்யப்படும். இதில் BS-6 விதிகளுக்குட்பட்ட 1.0 லிட்டர் K10B பெட்ரோல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல்/AMT கியர்பாக்ஸ் கூட்டணி பொருத்தப்படுவதற்கான சாத்தியம் அதிகம்.
ஆல்ட்டோ K10, செலெரியோ, வேகன்-ஆர் ஆகிய கார்களில் இருக்கும் இந்த இன்ஜினின் 68bhp பவர், 9kgm டார்க்கில் மாற்றமில்லாவிட்டாலும், ARAI மைலேஜில் வித்தியாசம் இருக்கலாம்; பின்னாளில் CNG மாடல் வெளிவரலாம். தவிர இதே இன்ஜின் - கியர்பாக்ஸ் கூட்டணி, முன்னே சொன்ன கார்களில் விரைவில் பயன்படுத்தப்படலாம். இப்போது மக்களால் அதிகமாக விரும்பப்படும் கார் வகையாக எஸ்யூவி இருப்பதால், அசத்தலான விலையில் (3.3-4.7 லட்ச ரூபாய்) S-Presso வெளிவந்து, இந்திய ஆட்டோமொபைல் துறையின் தற்போதைய போக்கை மாற்றியமைக்கலாம்!


ஆனால், தனது கார்களுக்கு தள்ளுபடிகளை (35,000 - 1,12,900 ரூபாய் வரை) மாருதி சுஸூகி அறிவித்திருக்கும் அதே நேரத்தில், தனது இரண்டு தொழிற்சாலைகளிலும் (Gurugram, Manesar) இரு நாள்கள் கார்கள் உற்பத்தி நடைபெறாது (செப்டம்பர் 7&9 - 2019) என்ற தகவலும் ஒருசேர வந்திருப்பதுதான் பெரிய முரண்.