நாளைய தினமான செப்டம்பர் 30, 2019 அன்றுதான், அதிகாரபூர்வமாக S-Presso காரை மாருதி சுஸூகி அறிமுகப்படுத்தப்போகிறது; அதற்குள்ளாகவே இணைய உலகில் தொடர்ச்சியாக ஸ்பை படங்கள் உலா வந்ததால், அதற்கு முன்பாகவே அந்த காரின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் படங்களை அந்த நிறுவனம் வெளியிட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
ரெனோ க்விட்டுக்குப் போட்டியாக, Heartect பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டிருக்கும் S-Presso காரில் என்ன எதிர்பார்க்கலாம்?
டிசைன் மற்றும் அம்சங்கள்

மாருதி சுஸூகியின் ஆல்ட்டோவுக்குப் போட்டியாக அறிமுகமான ரெனோ க்விட், பட்ஜெட் கார் செக்மென்ட்டில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். வழக்கமான டிசைன்களைப் பார்த்துச் சலித்துப்போன இந்திய மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு, அவர்களது பட்ஜெட்டில் மினி எஸ்யூவி போன்ற தோற்றத்தைக் கொண்ட கார், கூடுதலாக டச் ஸ்க்ரீனுடன் கிடைத்தால் எப்படி இருக்கும்? க்விட்டை அப்படியே அவர்கள் வாரி அணைத்துக் கொண்டதன் விளைவு... அறிமுகமான 44 மாதங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான கார்கள் விற்பனை! தற்போதைய சூழலில் காரின் விற்பனையில் அந்த வேகம் இல்லாவிட்டாலும், இன்றுமே ஆல்ட்டோவுக்கு டஃப் கொடுப்பது க்விட்தான்; இதனாலேயே ஆல்ட்டோவைத்தாண்டி யோசித்தாக வேண்டிய கட்டாயம் மாருதி சுஸூகிக்கு ஏற்பட்டது. அதன் எதிரொலியாக, 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அந்த நிறுவனம் காட்சிபடுத்தியதுதான் Future S கான்செப்ட்.
இதன் Profile மட்டுமே S-Presso காரில் பார்க்க முடிகிறது. மற்றபடி உயரமான பானெட் லைன், மெலிதான கிரில்லுடன் ஹாலோஜன் ஹெட்லைட்ஸ் இணையும் விதம், பனி விளக்குகள் இருக்குமிடத்தில் LED DRL எனக் கான்செப்ட்டுக்கும் இதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கின்றன. கிரில்லின் க்ரோம் வேலைப்பாடுகள், விட்டாரா பிரெஸ்ஸாவை நினைவுபடுத்துகின்றன. மைக்ரோ எஸ்யூவி என்பதால், பம்பர்கள் கறுப்பு நிறத்தில் இருப்பதுடன், காரின் பக்கவாட்டுப் பகுதியில் பாடி கிளாடிங்கும் உள்ளது. இதனுடன் பெரிய வீல் ஆர்ச், கறுப்பு நிற B-பில்லர், 165/70 R14 டயர்கள் ஆகியவை போனஸ் (க்விட்டில் 155/80 R13 டயர்கள்தான்). க்விட் போலவே S-Presso-வும் 180மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸைக் கொண்டிருக்கிறது!

Lift Type கதவு கைப்பிடிகள், முன்பக்க ஃபெண்டரில் இண்டிகேட்டர்கள், Full Cover உடனான ஸ்டீல் வீல்கள் எனச் சிக்கன நடவடிக்கைகளையும் காரில் பார்க்க முடிகிறது. ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது, S-Presso-வின் தோற்றம் பழைய ஸ்டைலில் இருப்பது நெருடல். உயரமான பாக்ஸ் போன்ற வடிவம், எந்தப் புதுமையும் இல்லாத பக்கவாட்டுப் பகுதி என வேகன்-ஆருக்கு நெருக்கத்தில் இது இருக்கிறது. விரைவில் அமலுக்கு வரவிருக்கும் க்ராஷ் டெஸ்ட் விதிகள் மற்றும் Pedestrian Safety விதிகளுக்கேற்ப புதிய கார் இருக்க வேண்டும் என்பதால், தனது லேட்டஸ்ட் கார்கள் தயாரிக்கப்படும் Heartect பிளாட்ஃபார்மிலேயே S-Presso காரையும் தயாரித்திருக்கிறது மாருதி சுஸூகி.

இதனால் காரின் கட்டுமானம் உறுதிப்பட்டிருந்தாலும், மொத்த எடையும் குறையும் என்பது அதன் சூட்சுமம்; ஆனால், இவற்றின் பலன்கள், க்ராஷ் டெஸ்ட்டின் போதுதான் தெரியவரும். ஏனெனில் 726 கிலோ எடையுள்ள S-Presso-வின் ஆரம்ப வேரியன்ட், ஆல்ட்டோ K10 காரைவிட 46 கிலோ குறைவான எடையைக் கொண்டிருக்கிறது! க்விட் இதைவிட எடைக் குறைவு (699 கிலோ) என்பதை நினைவில் கொள்ளவும்! AMT பொருத்தப்பட்ட டாப் வேரியன்ட்டின் எடை 767 கிலோ (ஆல்ட்டோ K10 VXi காரைவிட 17 கிலோ குறைவு). 3,565மிமீ நீளம் மற்றும் 2,380மிமீ வீல்பேஸில் இருக்கும் S-Presso, ஆல்ட்டோ K10 காரைவிட 20மிமீ அதிக நீளம் மற்றும் வீல்பேஸைக் கொண்டுள்ளது. க்விட்டை விட 86மிமீ அதிக உயரம் (1,564மிமீ) என்பதால், இந்த காரில் ஹெட்ரூம் பிரச்னையாக இருக்காது; மற்றபடி ரெனோ கார்தான் (114மிமீ அதிக நீளம், 42மிமீ அதிக வீல்பேஸ், 59மிமீ அதிக அகலம்) அளவுகளில் பெரிதாக உள்ளது. இதில் S-Presso-வில் இல்லாத ரிவர்ஸ் கேமரா உண்டு.
கேபின் மற்றும் வசதிகள்
காரின் வெளிப்புறத்தில் ஏமாற்றினாலும், S-Presso-வின் கேபினை கான்செப்ட் காரில் இருந்ததைப் போன்றே வடிவமைத்திருக்கிறது மாருதி சுஸூகி. கறுப்பு நிறம் வியாபித்திருக்கும் உட்புறத்தில், ஆங்காங்கே ஆரஞ்ச் நிற வேலைப்பாடுகள் இடம்பெற்றிருக்கின்றன (டாப் வேரியன்ட்டில் மட்டும்). நானோ மற்றும் எட்டியோஸைப் போல, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், சென்டர் கன்சோலுக்கு மேலே இருக்கிறது. இதன் இருபுறமும் ஏசி வென்ட்கள் இருப்பதுடன், அதற்குக் கீழே ஸ்மார்ட் பிளே டச் ஸ்க்ரீன் சிஸ்டம் உள்ளது; வட்ட வடிவ தீமில் இருக்கும் இவையனைத்தும், மினி காரை நினைவுபடுத்தும்படி அமைந்திருக்கின்றன. வேகன்-ஆரில் உள்ள அதே ஸ்டீயரிங் வீல் (ஆடியோ மற்றும் ஃபோன் கன்ட்ரோல்களுடன்) மற்றும் Door Latch S-Presso-வில் இருக்கிறது. ஆனால் சில்வர் வேலைப்பாடுகள் மிஸ்ஸிங். 27 லிட்டர் பெட்ரோல் டேங்க் காரில் உண்டு.

மேலும் ஏசி வென்ட்கள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏசி கன்ட்ரோல்கள், சீட்கள் ஆகியவையும் வேகன்-ஆரில் இருப்பதுபோலவே தெரிகிறது. டாப் வேரியன்ட்களில் மேனுவலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மிரர்கள் மற்றும் HVAC சிஸ்டம், முன்பக்க பவர் விண்டோ, 12V சாக்கெட், AUX & USB பாயின்ட்கள், பின்பக்க பார்சல் ட்ரே, பாடி கலரில் மிரர்கள் - பம்பர்கள் - கதவு கைப்பிடிகள், சென்ட்ரல் லாக், கிலெஸ் என்ட்ரி ஆகியவை உள்ளன. பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, டாப் வேரியன்ட்களில் மட்டுமே 2 காற்றுப்பைகள் இருக்கின்றன. மற்றபடி டிரைவர் காற்றுப்பை, ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், ஏபிஎஸ், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம் ஆகியவை அனைத்து வேரியன்ட்களிலும் ஸ்டாண்டர்டு. கேபினின் இடவசதி மற்றும் தரம் ஆகியவை, வருகிற 30-ம் தேதி அன்று காரை நேரில் பார்க்கும்போது எப்படி என்பது தெரிந்துவிடும்.
இன்ஜின்-கியர்பாக்ஸ், வேரியன்ட் மற்றும் விலை
தன்வசமுள்ள 800சிசி - 1.2 லிட்டர் - 1.5 லிட்டர் ஆகிய பெட்ரோல் இன்ஜின்களை BS-6 விதிகளுக்கேற்ப மாருதி சுஸூகி அப்டேட் செய்துவிட்ட நிலையில், அந்தப் பட்டியலில் 1.0 லிட்டர் இன்ஜின் மட்டும் விடுபட்டிருந்தது. இந்தச் சூழலில் K10B இன்ஜினின் BS-6 வெர்ஷன் பொருத்தப்பட்ட முதல் காராக S-Presso இருக்கப்போகிறது! முன்னே சொன்ன இன்ஜின்கள் BS 4-ல் இருந்து BS 6-க்கு மாறும்போது, பவர் மற்றும் டார்க்கில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. ஆனால், அராய் மைலேஜில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் இருந்தது. எனவே, அதைப்போலவே இந்த 3 சிலிண்டர் இன்ஜினும், அதே 68bhp மற்றும் 9kgm டார்க்கையே வெளிப்படுத்தலாம். ஆனால், அராய் மைலேஜ் 23.95கிமீ-யிருந்து குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது; 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டு என்றாலும், S-Presso-வின் டாப் வேரியன்ட்களில் (VXi, VXi(O) and VXi+) 5 ஸ்பீடு AMT இருப்பது பெரிய ப்ளஸ்.

Std, Std(O), LXi, LXi(O), VXi, VXi(O), VXi+ என மொத்தம் 10 வேரியன்ட்களில் வரப்போகும் இந்த மைக்ரோ எஸ்யூவி, மாருதி சுஸூகியின் ARENA ஷோரூம்களில் விற்பனை செய்யப்படும். உத்தேசமாக 3.3-4.7 லட்ச ரூபாய் விலையில் களமிறங்கப்போகும் S-Presso, இந்த நிறுவனத்தின் எந்த மாடலுக்குமான மாற்றாக இல்லாமல், புத்தம்புதிய பிராண்டாகவே முன்மொழியப்படும். ஆனால், இதுவும் முதல்முறை கார் வாங்குபவர்களை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டிருப்பதுடன், எஸ்யூவி போன்ற பட்ஜெட் கார் வேண்டும் என்பவர்களைத் திருப்திபடுத்தலாம். 4.5 மீட்டர் டர்னிங் ரேடியஸ், நெரிசல்மிக்க இடங்களில் கைகொடுக்கலாம். ஒட்டுமொத்தமாகவே இந்திய ஆட்டோமொபைல் துறை கொஞ்சம் ஊசலாட்டத்தில் இருப்பதால், தனது கார்களின் எக்ஸ்-ஷோரும் விலைகளை 5,000 ரூபாய் குறைத்திருக்கிறது மாருதி சுஸூகி.
