Published:Updated:

ஹூண்டாய் கோனாவுக்குப் போட்டி... வந்துவிட்டது MG ZS EV எஸ்யூவி!

MG ZS EV
MG ZS EV ( MG Motor India )

3 டிரைவிங் மோடுகள் மற்றும் 3 லெவல் ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் கொண்ட MG ZS EV காரின் பேட்டரிகளைச் 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தும்போது, 0 - 80% சார்ஜை வெறும் 50 நிமிடங்களிலேயே ஏற்றிக் கொள்ள முடியும்!

மக்களிடையே பலத்த வரவேற்பைப்பெற்ற ஹெக்டர் எஸ்யூவியைத் தொடர்ந்து, தனது அடுத்த மாடலை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது, எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் (NuGen Mobility Summit 2019-ல் காட்சிப்படுத்தப்பட்டது). உலகச் சந்தைகளில் (UK, Thailand, China) விற்பனை செய்யப்படும் மிட்சைஸ் எஸ்யூவி-யான MG ZS-ன் எலெக்ட்ரிக் வெர்ஷன் தான் அது! 4.3 மீட்டர் நீளத்தில் இருக்கும் இந்த கார், ஹூண்டாயின் கோனா EV காருக்குப் போட்டியாகப் பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. வழக்கமான மாடலுக்கும் எலெக்ட்ரிக்குக்கும் க்ரோம் க்ரில், 5 ஸ்போக் அலாய் வீல்கள், பேட்ஜிங் ஆகியவை மட்டுமே மாறுபடுகிறது.

MG ZS EV
MG ZS EV
MG Motor India

இதில் இருக்கும் (Permanent Magnet Synchronous வகை எலெக்ட்ரிக் மோட்டார், 143bhp பவர் மற்றும் 35.3kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. சிங்கிள் ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இது, 0 - 100 கி.மீ வேகத்தை வெறும் 8.5 விநாடிகளில் எட்டிப்பிடிக்க உதவுகிறது. லிக்விட் கூலிங் உடனான 44.5 kWh லித்தியம் ஐயன் பேட்டரி Pack (Contemporary Amperex Technology Co. Limited நிறுவனத்தின் தயாரிப்பு), ஃபுல் சார்ஜில் 340 கி.மீ வரை செல்லும் எனத் தெரிய வந்துள்ளது (அராய் டெஸ்ட்டிங்கின் படி). இந்த அமைப்பு IP67 ரேட்டிங் (ஒரு மீட்டர் ஆழம் வரை Water Resistant) மற்றும் சிறப்பான மேனேஜ்மென்ட் சிஸ்டத்தைக் கொண்டிருப்பது பெரிய ப்ளஸ்.

3 டிரைவிங் மோடுகள் மற்றும் 3 லெவல் ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் கொண்ட MG ZS EV காரின் பேட்டரிகளை 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தும்போது, 0 - 80% சார்ஜை வெறும் 50 நிமிடங்களிலேயே ஏற்றிக்கொள்ள முடியும்! இதுவே வழக்கமான 7.4 kW AC Home சார்ஜரை வீடு அல்லது அலுவலகத்தில் பயன்படுத்தும்போது (Delta Electronics India நிறுவனத்துடன் கூட்டு) பேட்டரியை ஃபுல் சார்ஜ் ஏற்ற 6-8 மணி நேரம் வரை ஆகும். இதற்கு, காருடன் வழங்கப்படும் On Board Cable-யை, Wall Socket-ல் அப்படியே இணைக்கவும். மேலும், தனது குறிப்பிட்ட ஷோரூம்களில் DC ஃபாஸ்ட் சார்ஜர்களை (Fortum நிறுவனத்துடன் கூட்டணி) நிறுவும் பணியில், எம்ஜி மோட்டார் இந்தியா தீவிரமாக இறங்கியுள்ளது.

Panaromic Sunroof
Panaromic Sunroof
MG Motor India

காரின் சார்ஜிங் பாயின்ட், முன்பக்க க்ரில்லில் இருப்பது ஸ்டைலாக இருக்கிறது. தவிர, டீலர்களின் எண்ணிக்கையையும் அந்த நிறுவனம் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தகவல் வந்திருக்கிறது. ஹெக்டரில் இருக்கும் டச் ஸ்க்ரீன் சிஸ்டத்தை மேம்படுத்தி (புதிய கிராஃபிக்ஸ் & Hardware), iSmart EV 2.0 என்ற பெயரில் MG ZS EV காரில் பொருத்தியுள்ளது எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா. இதில், இன்டர்நெட் சேவைகளுக்காக Embedded சிம் கார்டு இருப்பதுடன், தேவைப்பட்டால் மொபைல் Hotspot அல்லது External Home Wi-Fi ஆகியவற்றோடும் கனெக்ட் செய்யலாம்;

TomTom வாயிலாக வரும் Real Time மேப்பில், சார்ஜிங் ஸ்டேஷன்கள் இருக்குமிடம் தெரிவது வரவேற்கத்தக்க அம்சம். மற்றபடி, முன்பைப் போலவே இசைக்கு Gaana, பருவ நிலை மாற்றங்களைப் பற்றி தெரிந்துகொள்ள Accuweather எனப் பிரத்யேகமான செயலிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. கோனா போலவே MG ZS EV-யிலும் 17 இன்ச் வீல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதுடன், காரின் எடை 1.5 டன் மற்றும் சார்ஜர்கள் CCS Type 2-படி தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும், காரில் இருக்கும் CO2 Saver, நிகழ்காலத்தில் அது சுற்றுச்சூழலில் கலக்காமல் இருக்கும் CO2 அளவுகளைக் காண்பிக்கும். இதனுடன் கேபினில் PM 2.5 ஏர் ஃபில்டர் உள்ளது செம. இந்த காரின் பேட்டரிகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்காக, Exicom Tele-Systems நிறுவனத்துடன் கூட்டணி அமைத்திருக்கிறது, எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா.

MG ZS EV
MG ZS EV
MG Motors India

முதற்கட்டமாக டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, அஹெமதாபாத் ஆகிய 5 நகரங்களில் புத்தாண்டு முதலாக கார் கிடைக்கும். கோனாவைவிட குறைவான விலையில் MG ZS EV கிடைக்கும் (22 லட்ச ரூபாய் - FAME II மானியம் உண்டு). குஜராத்தில் அமைந்திருக்கும் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலையில், MG ZS EV காரின் உற்பத்தி இந்த மாதத்தின் முடிவில் (பாகங்களாக CKD முறையில் இறக்குமதி) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த காரை செல்ஃப் டிரைவ் மற்றும் Rental அடிப்படையில் மக்களுக்கு வழங்க, Lithium Urban Technologies நிறுவனத்துடன் கூட்டணி அமைந்திருக்கிறது எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா.

அடுத்த கட்டுரைக்கு